பதிவு செய்த நாள்
29
அக்
2020
05:10
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவில் தேருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு பின், புதிய தேர் கூண்டு அமைக்கப்பட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுாரில் அவதரித்த, வைணவ மகான் ராமானுஜரின், 1,000வது ஆண்டு அவதார உற்சவ விழா, 2017ம் ஆண்டு, ஸ்ரீபெரும்புதுாரில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.இதை முன்னிட்டு, தேரோட்டம் நடத்துவதற்காக, குண்டும் குழியுமாக இருந்த தேரடி சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, சீரமைக்கப்பட்டது.சாலை விரிவாக்க பணியின் போது, ராமானுஜர் கோவில் தேரின் பாதுகாப்பிற்கு அமைக்கப்பட்ட கூண்டு அகற்றப்பட்டது. பின், தேர் கூண்டு மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால், மூன்று ஆண்டுகளாக வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும், துாசி படர்ந்தும் தேர் மாசடைந்தது. இது குறித்து, நம் நாளிதழில், தொடர்ந்து படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, ஹிந்து அறநிலையத் துறை சார்பில், 23 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தேர் கூண்டு அமைக்க, நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஆண்டு, தேர் கூண்டு அமைக்கும் பணி துவங்கியது.கொரோனா தொற்று காரணமாக, ஆறு மாதங்களாக, தேர் கூண்டு அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.இந்நிலையில், பணிகள் துவங்கி, தேரைச் சுற்றி, கூண்டு அமைக்கப்பட்டு உள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.