பதிவு செய்த நாள்
03
நவ
2020
09:11
சென்னை : தமிழகத்தில் இருந்து, சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் பின்பற்ற வேண்டிய, கொரோனா பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை, அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கை: சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள், கேரள காவல் துறையின், sabarimalaonline.org என்ற, இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்= முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், வார நாட்களில் நாள் ஒன்றுக்கு, 1,000 பேருக்கும், வார இறுதி நாட்களில், நாள் ஒன்றுக்கு, 2000 பக்தர்களுக்கும் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படும். சபரிமலை தரிசனத்திற்கு, 48 மணி நேரத்திற்கு முன், கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என சான்று பெற்றவர்கள் மட்டுமே, பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்=
பாதுகாப்பு கருதி, 10 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி இல்லை. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான அடையாள அட்டை, ஆயுஷ்மான் பாரத் அடையாள அட்டை போன்றவற்றை வைத்துள்ளவர்கள், அவற்றை உடன் எடுத்து வர வேண்டும். நெய் அபிஷேகம், பம்பை ஆற்றில் நீராடல் மற்றும் இரவு நேரங்களில் சன்னிதானம், பம்பை மற்றும் கணபதி திருக்கோவில் ஆகிய இடங்களில் தங்குவதற்கு அனுமதி இல்லை. எருமேலி மற்றும் வடசேரிக்கரை வழியாக மட்டுமே, பக்தர்கள் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.