பதிவு செய்த நாள்
09
நவ
2020
10:11
திருப்பதி: திருப்பதியில் அளிக்கப்பட்டு வரும் நேர ஒதுக்கீடு டோக்கன்களின் எண்ணிக்கையை, பக்தர்களின் வருகையை ஒட்டி, வார இறுதி நாட்களில் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறைகேட்பு நிகழ்ச்சிஆந்திர மாநிலம், திருமலை - திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில், நேற்று தொலைபேசி வாயிலாக, பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி கூறியதாவது.திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, வார இறுதி நாட்களில் அதிகரித்து வருகிறது. இதனால், முன்பதிவின்றி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக, திருப்பதியில் அளித்து வரும் நேர ஒதுக்கீடு தர்ம தரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை, 8,000 வரை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் மற்றும் விஷ்ணுநிவாசம் உள்ளிட்ட விடுதிகளில் வார நாட்களில், தற்போது, 7,000 டிக்கெட்டுகள் வரை வழங்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
புதிய மரபு: திருமலையில் தங்கும் மடாதிபதிகள், ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும்போது, கோவில் எதிரில் உள்ள அரச மரத்தடியிலிருந்து, அவர்களை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று அழைத்து செல்வது மரபு.ஆனால், என்றும் இல்லாத புதுமையாக நேற்று முன்தினம், திருப்பதி விமான நிலையத்திற்கு வந்த விசாகபட்டிணம் சாரதா பீடத்தின் பீடாதிபதி சொரூபானந்தேந்திர ஸ்வாமிகளை தேவஸ்தான அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர்.