பதிவு செய்த நாள்
26
மே
2012
10:05
ஊட்டி: ஸ்ரீ சத்ய சாய் பாபா, பக்தர்களுக்கு ஆசி வழங்கிய இருக்கை, ஊட்டி எல்லநள்ளியில் நடந்த "சாய் கைலாஷ் திறப்பு விழாவின் போது, மேடையில் வைத்து பூஜிக்கப்பட்டது.ஊட்டியில் உள்ள நந்தவனம் பகுதிக்கு, 1985ம் ஆண்டு வரை ஸ்ரீ சத்ய சாய் பாபா அடிக்கடி வந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். அதன்பின், இங்கு சாய் சேவா அமைப்பின் மூலம் பல்வேறு பணிகள் நடக்கின்றன. நந்தவனம் பகுதி, தற்போது தனியார் நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ளது. அங்கு பகவான் பயன்படுத்திய இருக்கை, 26 ஆண்டுகளுக்கு மேலாக, ஊட்டியில் உள்ள பெள்ளி என்பவரின் குடும்பத்தினர் பராமரிப்பில் இருந்து வந்தது. அந்த இருக்கை, தற்போது "சாய் கைலாஷில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது.
இதுகுறித்து, ஊட்டியைச் சேர்ந்த பெள்ளி,75, கூறுகையில்,"ஊட்டிக்கு பகவான் அடிக்கடி வந்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கிய காலத்தில், நந்தவனம் பகுதி பூங்கா வனமாக இருந்தது. அப்போது தான், ஊட்டியில், சாய் ஸ்ருதியை நிறுவனார். பின்னர் கொடைகானலுக்கு சென்று விட்டார். இதைத் தொடர்ந்து, அவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் போது அமர்ந்த இருக்கையை நானும், எனது நண்பர்களும் பாதுகாப்புடன் வைத்து, பூஜித்து வந்தோம். ஊட்டியில் உள்ள எனது மகள் மீரா வீட்டில், 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இருக்கை இருந்தது.தற்போது, அந்த இருக்கை எங்கு சேர வேண்டுமோ அந்த இடத்தில் உள்ளது. இதனால், எனது நண்பர்கள்; குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியடைந்து உள்ளோம், என்றார். "சாய் கைலாஷில் வைக்கப்பட்ட பகவான் அமர்ந்த இருக்கையை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.