பதிவு செய்த நாள்
17
நவ
2020
05:11
திருப்பூர்:சபரிமலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், புண்ணியம் பூங்காவனம் திட்டம், நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.சபரிமலைக்கு செல்லும் பக்தர்களால் பிளாஸ்டிக் கழிவு மற்றும் தேவையற்ற பொருட்கள், மலையில் குவிந்து விடுகின்றன. முற்றிலும் தடை செய்யப்பட்ட பொருட்கள், சபரிமலைக்கு வராமல் தடுக்கும் வகையில், புண்ணியம் பூங்காவனம் திட்டம், நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:சபரிமலையில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும், புண்ணியம் பூங்காவனம் திட்டம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள, ஐயப்பன் கோவில்களிலும், மையம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.சபரிமலைக்கு பிளாஸ்டிக் பொருள் கொண்டு செல்லக்கூடாது; யாத்திரையின் போது, குப்பையை வீசாமல், தொட்டிகளில் சேர்க்க வேண்டும். சபரிமலையில் பக்தர்கள் துப்புரவு பணியில் ஈடுபட வேண்டும். பம்பை நதியில், சோப்பு, எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது; துணிகளை ஆற்றில் வீசக்கூடாது. திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்க கூடாது; கழிப்பிடத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று, அந்தந்த குருசாமி வாயிலாக, பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.