பதிவு செய்த நாள்
17
நவ
2020 
05:11
 
 திண்டுக்கல் : கார்த்திகை பிறப்பை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் துவங்கினர்.
திண்டுக்கல் மலையடிவாரம் ஐயப்பன் கோயில் அதிகாலையில் திறக்கப்பட்டது. சிறப்பு அபிேஷகம், பூஜைகள் மற்றும் கொடியேற்றம் நடந்தது. சபரிமலைக்கு செல்ல உள்ள பக்தர்கள், குருசாமியிடம் ஆசி பெற்று மாலை அணிந்தனர். வெள்ளை விநாயகர் கோயில், ரயிலடி சித்தி விநாயகர், நாகல்நகர் ஐயப்பன் கோயிலிலும் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் துவக்கினர்.
பழநி: பழநி கோயில்களில் கடந்த ஆண்டுகளை விட குறைந்த அளவே பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளனர். ஐயப்ப பக்தர்கள் நேற்று முதல் கடைபிடிக்கவேண்டிய விரதமுறைகளை கடைபிடிக்க துவங்கி உள்ளனர்.
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு கலியுக வரத ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர். முன்னதாக ஆலயத்தில் கணபதி ஹோமம் நடந்தது. சபரிமலை செல்ல இணையதள முன்பதிவில் 100 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. கோவில் நிர்வாகி சரவணன் கூறுகையில், ஆன்லைன் பதிவு தொடங்கிய 3 மணி நேரத்தில் முடிந்ததால், குறைவான பக்தர்களே முன்பதிவு செய்ய முடிந்தது. இதனால் கூட்டாக செல்ல முடியாத நிலை உள்ளது. ஒரு நாளில் 3000 பேருக்கு அனுமதி வழங்க வேண்டும். தமிழக பக்தர்கள் கூடுதலாக செல்ல கேரள அரசிடம் அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்றார்.