திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா தீபம் ஏற்ற பக்தர்கள் நெய் காணிக்கையை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலின் கார்த்திகை தீப திருவிழாவில் நவ.,29ல் 2668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.விழாவில் நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு உற்சவம் நடத்தப்பட்டு விழா தொடங்கியது.இந்நிலையில் மஹா தீபம் ஏற்ற பக்தர்கள் நெய் காணிக்கையை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ நெய் 500 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படும் நிலையில் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் ஒரு கிலோ நெய் காணிக்கைக்கு 250 ரூபாயும், அரை கிலோவுக்கு 150 ரூபாயும், கால் கிலோவிற்கு 80 ரூபாயும் நிர்ணயித்துள்ளது. இத்தொகையை www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் செலுத்தலாம். இவ்வாறு காணிக்கை செலுத்துபவர்களுக்கு ஆருத்ரா தரிசனத்தன்று மஹா தீப மை முதலில் நடராஜருக்கு சாத்தப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.