பழவூர் நாறும்பூநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2012 10:05
வள்ளியூர்: பழவூர் நாறும்பூநாத சுவாமி ஆவுடையம்மாள், ஆனந்தநடராஜர் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு களக்காடு பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் பழவூர் நாறும்பூநாத சுவாமி கோயிலாகும். இக்கோயிலில் வீற்றிருக்கும் ஆனந்தநடராஜர் திருவாலங்காட்டிலிருந்து கொண்டுவரப்பட்டதாக வரலாறு. மிகவும் பழமையும் சிறப்பு மிக்க இக்கோயிலில் வெகுநீண்ட ஆண்டுகளுக்கு பின்பு நேற்று மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு 4ம் காலயாக பூஜை, ரக்சாபந்தனம் நிகழ்ச்சி நடந்தது. காலை 8.30 மணிக்கு சபீர்சாகுதி, நாடிசந்தானம், பூர்ணாகுதி, தீபாராதனை பூஜையும், அதனை தொடர்ந்து யாத்திரதானம், கடம் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடந்தது. காலை 10 மணிக்கு விமானம் மற்றும் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து சமகாலத்தில் மூலஸ்தானம் மற்றும் எல்லா பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை ராதாபுரம் சிதம்பரபட்டரும், ஆலய அர்ச்சகர் ஈஸ்வரசுப்பிமணிய பட்டரும் நடத்தினர். பின் நாறும்பூநாதசுவாமி, ஆவுடைம்மாள், ஆனந்தநடராஜர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பல்வேறு அபிஷேக அலங்கார தீபாராதனை பூஜை நடந்தது. கும்பாபிஷேக விழாவில் பெருங்குளம் மகா சன்னிதானம் செங்கோல் ஆதீனம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் சிவசுடலைமாடசாமி கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி திருவாட்ச்சி வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அன்னக்கொடி மற்றும் திருப்பணி, திருக்குடமுழுக்கு உபயதாரர்கள் செய்திருந்தனர்.