பதிவு செய்த நாள்
18
நவ
2020
04:11
திருச்செந்தூர் கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும் கரு வறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இவற்றை அஷ்ட லிங்கங்கள் என்பர். அஷ்ட லிங்கங்களும் இங்கு இடம்பெற்றிருக்கக் காரணம், இறைவன் சூரிய சந்திரராகவும், பஞ்ச பூதங்களாகவும், உயிர்களாகவும் விளங்குகிறார் என்பதை விளக்குவதற்காகவே. முரு கன் சன்னிதியில் முருகனுடன் பஞ்ச லிங்கங் களைக் கண்ணாலும் மற்ற லிங்கங்களை மனதாலும் பூஜிக்க வேண்டும். அப்போது தான் நமது பிரார்த்தனை முற்றுப்பெறும். அஷ்ட லிங்கங்கங்களில் பஞ்ச லிங்கங்களுக்கு பூஜை நடக்காது. ஏனெனில், முருகப் பெருமானே இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதிகம்.
நைவேத்தியச் சிறப்பு: மூலவருக்கான நைவேத்தியத்தில் காரம், புளி ஆகியவற்றைச் சேர்ப்தில்லை. சண்முகருக்கான நைவேத்தியங்களில் காரம், புளி உண்டு. பருப்புக் கஞ்சி,தோசை, தேன்குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினை மாவு ஆகியவை இடம்பெறுகின்றன. உதய மார்த்தாண்ட பூஜையின்போது தோசை, சிறுபருப்புக் கஞ்சி ஆகியவை நைவேத்தியத்தில் இடம்பெறுகின்றன. இரவு நேர பூஜையில் பால், சுக்கு, வெந்நீர் ஆகியன நிவேதிக்கப்படுகிறது.
பூஜை சிறப்பு: செந்திலாண்டவர் ஒருமுகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். மூலவருக்கு குமார தந்திர முறையிலும், சண்முகரு க்கு சிவாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு மூலவர் தவக்கோலத்தில் இருப்பதாக ஐதிகம்.
தினமும் காலை சுமார் 5:30 மணிக்கு கொடி மரத்தின் முன்பு திருவனந்தல் எனப்படும் விஸ்வரூப தரிசனம் நடைபெறும். அப்போது குமாரோபனிஷத்தில் உள்ள துவாதச நமஸ்காரம் செய்யப்படுகிறது. விராட் புருஷனின் பாத ஸ்தானத்தில் செந்தூர் அமைந் திருப்பதால், இது தினமும் நடைபெறுகிறது. உச்சிக் காலம் முடிந்ததும், மேளதாளத்துடன் கடற்கரைக்குச் சென்று கங்கைக்கு சுத்த அன்னம் படைக்கப்படுகிறது. இரவு சுமார் 9:45 மணிக்கு சுவாமிக்குத் திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்துத் தீபாராதனை செய்வர். இதை ரகசிய தீபாராதனை என்கிறார்கள்.