திருச்செந்துார் பகுதியினர் பாடும் நாடோடிப்பாடல்களில் சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டு கொண்டேன் என்னும் வரி இடம் பெற்றுள்ளது. முருகன் கோயில் உள்ள பகுதிக்கு சந்தன மலை என்றும் பெயருண்டு. திருப்புகழில், சந்தனப் பைம்பொழில் தண் செந்தில் என்று சந்தன சோலையாக திருச்செந்துார் இருப்பதை 15ம் நுாற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். ஆனால் தற்போது சந்தனமரம் அங்கில்லை. பக்தர்களுக்கு சந்தனம், விபூதி பிரசாத தருகின்றனர்.
ஒன்றல்ல... இரண்டு : குழந்தைகளுக்கு தெய்வங்களின் ஆயுதத்தை பெயராக வைக்கும் வழக்கமில்லை. சூலம், உடுக்கை, ஈட்டி என்று யாராவது பெயர் வைக்கிறார்களா? ஆனால் முருகனின் வெற்றிவேலைச் சிறப்பிக்கும் விதத்தில் வெற்றிவேல், கதிர்வேல், தங்கவேல், சக்திவேல், வடிவேல், முத்துவேல், வேலாயுதம், என பெயரிடுகிறார்கள். கச்சியப்பர் கந்தபுராணத்தில் "திருக்கைவேல் போற்றி போற்றி!" என்று முருகனின் வேலினைப் போற்றுகிறார். முருகனுக்கு ஆறுமுகங்கள் போல வேலுக்கும் ஆறுமுகங்கள் உண்டு.