பதிவு செய்த நாள்
19
நவ
2020
09:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா களைகட்டத் துவங்கிய நிலையில், கோபுரங்கள் மின் விளக்குகளாலும், கோவில் வளாகம் வண்ண தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்கி, 10 நாட்கள் நடக்கிறது. மஹா தீபம்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும், 29ல், கோவிலின் பின்புறமுள்ள அருணாசலேஸ்வரர் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்படும்.
வழக்கமாக, விழா நாட்களில் நடக்கும், சுவாமி மாட வீதி உலா, இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ரத்து செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் ஐந்தாம் பிரகாரத்தில் நடக்கிறது. இதற்காக, சுவாமி உலாவின் போது பயன்படுத்தப்படும் வாகனங்களை சீரமைக்கும் பணி மற்றும் கோவில் வளாகம் முழுதும் மின்விளக்கு அலங்காரம் போன்றவை நடந்து வருகின்றன. தீபத் திருவிழாவின் போது, 20 கி.மீ., துாரம் தெரியும் வரை, கோவிலின் ஒன்பது கோபுரங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. திருக்குடை ஊர்வலம்கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக, ஆண்டுதோறும், வேலுார் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து திருக்குடைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். ஜலகண்டேஸ்வரர் கோவிலில் திருக்குடை ஊர்வலத்தை, மகானந்த சித்தர் துவக்கி வைத்தார். மேள, தாளங்கள் முழங்க, மூன்று திருக்குடைகள் ஊர்வலமாக புறப்பட்டன. திருவண்ணாமலை கோவில் நிர்வாகத்திடம், இன்று ஒப்படைக்கப்படுகின்றன.