பதிவு செய்த நாள்
22
நவ
2020
05:11
சென்னிமலை, திண்டல், பச்சமலை முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழா நிறைவாக, திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா பரவலால், நடப்பாண்டு கந்த சஷ்டி விழாவில், பக்தர்கள், கட்டளைதாரர்கள் என யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், சஷ்டி விழா நிறைவாக, ஈரோடு மாவட்ட முருகன் கோவில்களில், திருக்கல்யாண உற்சவம், நேற்று வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னிமலையில்...: சென்னிமலை முருகன் கோவில், திருக்கல்யாண உற்சவம், கைலாசாநாதர் கோவில் உட்பிரகாரத்தில் நேற்று காலை, 6:00 மணிக்கு நடந்தது. முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு, வண்ண மலர்களால் அலங்காரம் செய்து, திருக்கல்யாணம் நடந்தது தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவம், தெய்வயானைக்கு மங்கள நாண் அணிவித்து, வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண உற்சவத்தை நடத்தினார். இதையடுத்து, மகா தீபாராதனை நடந்தது. பின், சஷ்டி துவக்க விழாவில், காப்பு கட்டி விரதத்தை துவக்கிய பக்தர்களின் காப்பை, கோவில் அர்ச்சகர் கழற்றி விரதத்தை முடித்து வைத்தார். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
திண்டலில்...: திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. இதேபோல், இ.கா.வலசு கல்யாண சுப்ரமணியர் கோவிலில், மாப்பிள்ளை, பெண் அழைத்தல், யாகசாலை பூஜை, காசி யாத்திரை செல்லுதல், மாங்கல்யம் அணிவித்தல், மாலை மாற்றுதல், மாப்பிள்ளை விளையாட்டு உள்ளிட்ட, அனைத்து கல்யாண சடங்குகளுடன், திருக்கல்யாணம் நடந்தது. பச்சமலையில்...: கோபி, வேலமணி நகர் சக்தி விநாயகர் கோவிலில், சுப்ரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம், அதிகாலை, 5:00 மணிக்கு நடந்தது. முன்னதாக, சிறப்பு அபிஷேகம், பழங்கள் மற்றும் பலகாரங்கள் கொண்ட, 31 சீர்வரிசை தட்டுகள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல் கோபி பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.