ஆந்திரமாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள உதயகிரிக்கு அருகில் உள்ள மலை, பைரவகொண்டா. இம்மலையில் உள்ள குறுகிய பள்ளத்தாக்குச் சரிவில், ஓடையின் கரையில் பைரவர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பழமையான இக்கோயிலின் எதிர்ப்புறம் பாறைச்சரிவில் எட்டுக் குடைவரைக்கோயில்கள் அமைக்கப்பெற்றுள்ளன. மாமல்லன் மகேந்திரவர்ம பல்லவன் கால சிற்பவடிவில் காணப்பெறும் இக்கோயில்கள் அனைத்திலும் சிவலிங்கங்கள் அமைக்கப்பெற்று உள்ளதால் இவை அஷ்டலிங்கக் கோயில்கள் என வழங்கப்பெற்று வருகின்றன. சிவராத்திரி போன்ற விசேஷ காலங்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.