கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலக கட்டுமான பணி: நிறுத்த உத்தரவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2020 05:11
சென்னை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் மேற்கொள்வதை நிறுத்தி வைக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனு: கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை அரசுக்கு விற்பது குறித்து 2020 செப். 19ல் அறநிலையத் துறை செயலர் அரசாணை பிறப்பித்துள்ளார்.நிலத்தை 1.98 கோடி ரூபாய்க்கு விற்பதாகவும் அறநிலையத் துறை விளம்பரம் வெளியிட்டுள்ளது.கோயில் நிலத்தை அரசு விற்பது வேலியே பயிரை மேய்வது போலாகும். கோயில் சொத்துக்களை பாதுகாக்க ண்டிய பொறுப்பு அறநிலையத் துறைக்கு உள்ளது.
சட்டப்படி கோயில் சொத்துக்களை விற்பது குறித்து அறங்காவலர்கள் தான் கொள்கை முடிவெடுக்க முடியும். ஆனால் நில விற்பனைக்கு ஒப்புதல் வழங்கி விட்டு ஆட்சேபனை கேட்கின்றனர். அக். 23ல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலகத்துக்கான கட்டுமான பணிகள் துவங்கி விட்டன.நிலத்தை சமன்படுத்தும் பணிகள் நடக்கின்றன. கனரக இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.எனவே கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் மற்றும் கலெக்டருக்கு தடை விதிக்க வேண்டும். சுற்றுலா மற்றும் அறநிலையத் துறையின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரான ரங்கராஜன் நரசிம்மன் கருத்து கேட்பு கூட்டம் அக். 29ல் நடந்தது. அதற்கு முன் கலெக்டர் அலுவலகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. 100 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை 1.98 கோடி ரூபாய்க்கு வழங்க முடிவெடுத்துள்ளனர் என்றார்.அறநிலையத் துறை சார்பில் சிறப்பு பிளீடர் கார்த்திகேயன் ஆஜராகி கோயில் நிலத்தை அரசுக்கு விற்கவில்லை; குத்தகைக்கு வழங்க அறநிலையத் துறை பரிந்துரை செய்துள்ளது என்றார். அரசு தரப்பில் அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அணுகு சாலை தான் அமைத்துள்ளோம். பணிகள் எதுவும் துவங்கவில்லை என்றார்.இதையடுத்து இவ்வழக்கில் தமிழக அரசு மற்றும் அறநிலையத் துறை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச. 9க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.அதுவரை கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம் கட்டுவது தொடர்பான பணிகளை நிறுத்தி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.