பதிவு செய்த நாள்
28
நவ
2020
05:11
அன்னூர்: மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில், பழமையான பெரிய ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
தர்மபுரியை பூர்வீகமாகக் கொண்ட படையாட்சி சமுதாய மக்கள், 500 ஆண்டுகளுக்கு முன், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்காக கோவைக்கு வந்தனர். அப்போது தங்களுடன் எடுத்து வந்த குலதெய்வமான பெரிய ஆண்டவரை வைத்து வழிபட்டனர். குலதெய்வ மக்கள் ஒன்று சேர்ந்து, பழமையான பெரியாண்டவருக்கு பல லட்ச ரூபாய் செலவில், கோவில் கட்டி உள்ளனர். இதையடுத்து கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் திருமுறை பாராயணத்துடன் துவங்கியது. மாலையில் எண்வகை மருந்து சாத்துதலும், முதற்கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று அதிகாலையில் இரண்டாம் கால பூஜையும், புனித நீர் அடங்கிய கலசங்கள் யாகசாலையை சுற்றி வந்து கோபுரத்துக்கு கொண்டு செல்லுதலும் நடந்தது. காலை 10:00 மணிக்கு, விமானத்திற்கும், மூலவருக்கும், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தின் போது கருடன்கள் கோவில் மேல் சுற்றிப் பறந்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.