சிவனுக்குரிய பஞ்சபூதத்தலங்களில் அக்னிதலமாகத் திகழ்வது திருவண்ணாமலை. இறைவன் அக்னி வடிவமாகத் திகழ்வதால் இங்கு திருக்கார்த்திகை நாளில் தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர். இந்த தீபத்தை தரிசிப்போர் பெறும் நற்பேறுகளை கார்த்திகைத் தீபவெண்பா கூறுகிறது.
புத்தி தரும் தீபம்; நல்ல புத்திர சம்பத்து முதல் சித்தி தரும் தீபம் சிவதீபம்- சக்திக்கு உயிராகும் சோணமலை ஓங்கிவளர் ஞானப் பயிராகும் கார்த்திகை தீபம். திருவண்ணாமலை தீபத்தை தரிசிப்போர் நல்ல புத்தி, புத்திரபாக்கியம், காரிய சித்தி, ஞானம் ஆகிய நலன்களைப் பெற்று வாழ்வர்.
21 தலைமுறைக்கு புண்ணியம்: திருவண்ணாமலை தீபத்தைப் பார்ப்பவர்களுக்கு 21 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறது அருணாசல புராணம். இந்த புராணத்தின் 159வது பாடலின்படி, திருக்கார்த்திகை தீபம் தரிசிப்பவர்களுக்கு உணவுத்தட்டுப்பாடு வராது. பார்த்தவர்களுக்கு மட்டுமின்றி அதைப்பற்றி சிந்தித்தவர்களுக்கும் கூட இடையூறு நீங்கி விடும். இவர்களது 21 தலைமுறை பிறவா வரம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் போது, கார்த்திகை தீபத்தைக் காணாமல் இருக்கலாமா! கார்த்திகை வெண்பா என்ற பாடலின்படி, அண்ணாமலையார் தீப தரிசனத்தால்புத்திசாலித்தனம் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு அறிவார்ந்த புத்திரர்கள் பிறப்பர். பிறப்பற்ற நிலை கிடைக்கும்.