திருவண்ணாமலையை வலம் வருவது குறித்து தேவர்கள் பெருமையாகப் பேசினர். ஆனால் சூரியபகவான் பொருட்படுத்தவில்லை. அலட்சியத்துடன் திருவண்ணாமலையின் மீது தன் சுட்டெரிக்கும் கதிர்களை வீசினார். நெற்றிக்கண் கொண்ட சிவபெருமானே அங்கு மலையாக எழுந்தருளியிருக்கும் விஷயம் தெரிந்தும், உஷ்ணத்தை பாய்ச்ச வந்தது வினை! சூரியனின் தேர் சக்கரங்கள் வெடித்துச் சிதறின. தேர் சரிந்தது. குதிரைகள் தறிகெட்டு ஓடின. ‘‘ என் இயக்கமே நின்று விட்டதே! இதென்ன சோதனை’’ என சூரியன் முறையிட, வானில் அசரீரி ஒலித்தது. ‘‘சூரியனே! மற்ற மலைகளைப் போல் அண்ணாமலையை கற்பாறை எனக் கருதாதே. சிவபெருமானே இங்கு மலை வடிவில் இருக்கிறார். மலையை வலம் செய்தபடி நீயும் ஒதுங்கிச் செல். கிரிவலத்தால் நன்மை அடைவாய்’’ என்றது. அண்ணாமலையாரிடம் மன்னிப்பு கேட்க இழந்த தேர், குதிரைகளை மீண்டும் கிடைத்தன.