பதிவு செய்த நாள்
09
டிச
2020
09:12
திருப்பதி: ஏழுமலையான் லட்டு பிரசாதத்தை உலகம் முழுதும், டோர் டெலிவரி செய்வதாக, சமூக வலை தளங்களில் விளம்பரம் வெளியாகும் போலி இணையதளம் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.
திருப்பதி, திருமலை ஏழுமலையான் லட்டு பிரசாதத்திற்கு என தனி சிறப்பு உள்ளது. திருமலையில் கோவிலுக்குள் தயாரிக்கப்படும் பிரசாதத்திற்கு மதிப்பும் உள்ளது. அதனால், ஏழுமலையான் தரிசனத்திற்கு அடுத்தபடியாக, அனைவரும் வாங்கி உண்டு, மற்றவர்களுக்கும் வழங்குவது லட்டு பிரசாதம்.தற்போது, திருமலையில் இந்த லட்டு பிரசாதத்தை, பக்தர்கள் தேவையான அளவில் வாங்கி கொள்ளும் வகையில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், இந்த லட்டு பிரசாதத்தை உலகத்தின் உள்ள மூலை முடுக்குகளுக்கும் டோர் டெலிவரி செய்வதாக, www.balaji prasadam.com என்ற போலி இணையதளம் குறித்த விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதனால், அந்த இணையதளத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, கண்காணிப்பு துறைக்கு உத்தரவிட்டு உள்ளார். தேவஸ்தானத்தின் தொழில்நுட்பத்துறை வாயிலாக, இந்த இணையதளத்தை முடக்க வேண்டும் என்றும், அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். பக்தர்கள் இதுபோன்ற போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று அவர், வலியுறுத்தி உள்ளார்.