பதிவு செய்த நாள்
09
டிச
2020
03:12
சென்னை :பொதுமக்கள் பங்களிப்புடன், அயோத்தியில், ராமர் கோவில் கட்டப்படுகிறது. அதற்காக, ஜன., 15 முதல், நிதி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது, என உடுப்பி பெஷாவர் மடத்தின் மடாதிபதி, விஷ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆகஸ்ட், 5ல் நடந்தது. தற்போது, கட்டுமான பணி நடந்து வருகிறது.மூன்றரை ஆண்டுகளில், இப்பணி முடிக்கப்பட்டு, 2024ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ராமர் கோவிலை, 1,400 கோடி ரூபாய் மதிப்பில், பிரமாண்டமாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நிதியில், பக்தர்களின் பங்களிப்பு பிரதானப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான பணியில், வி.எச்.பி.,யின் தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் ஈடுபட்டுள்ளது.
கோவில் நிர்மானத்திற்கான தென் தமிழக பிரதிநிதியான, உடுப்பி பெஷாவர் மடத்தின் மடாதிபதி, விஷ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள், மூன்று நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். அவர், நேற்று கூறியதாவது:ராமாயணத்திற்கும், தமிழகத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு. கோடிக்கணக்கான ஹிந்துக்களின் கனவு திட்டமான அயோத்தி ராமர் கோவில் கட்டுமான திட்டம், பக்தர்கள் பங்களிப்புடன் விமரிசையாக துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக தென் தமிழகம் முழுதும் யாத்திரை மேற்கொண்டு, சமய தலைவர்கள், துறவிகள், மாநில கவர்னர், முதல்வர், கட்சித் தலைவர்கள், தன்னார்வலர்களை சந்தித்து வருகிறேன். அயோத்தி ராமஜன்ம பூமியில், 67 ஏக்கர் இடத்தில், 1,400 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் கோவிலுக்காக, நாடு முழுதும், வரும் ஜன., 15 முதல் பிப்., 27 வரை, மக்களிடம் நிதி திரட்டப்பட உள்ளது.இதற்காக, 10, 100, 1,000 ரூபாய் ரசீது தயாரிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள், பொதுமக்கள் தங்களால் முடிந்த நிதி அளித்து, கோவில் கட்டுமானத்தில் பங்கேற்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.