பதிவு செய்த நாள்
10
டிச
2020
02:12
அந்தியூர்: அந்தியூர் அருகே. 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே, பட்லூர் பஞ்., மொசக்கவுண்டனூரில், சாலையை சீரமைத்து, மழை நீர் வடிகாலுக்கான கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம், பொக்லைன் இயந்திரத்தின் உதவியால், ஐந்து அடியில் பள்ளம் தோண்டியபோது, செம்மண் வண்ணத்தில் மண்ணால் ஆன பானைகள், சின்ன மண் சொப்புகள் மற்றும் மட்கிப்போன எலும்புகள் இருந்துள்ளன. இது குறித்து, அந்தியூர் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பானை, எலும்புகளை நேற்று மதியம், ஆய்வு செய்வதற்காக மொசக்கவுண்டனூருக்கு தொல்லியல் துறையினர், ஈரோடு அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர், நிருபர்களிடம் ஜென்சி கூறியதாவது: இங்கு கிடைத்த மண்பானை மற்றும் எலும்புகள், 1,500 ஆண்டுகளுக்கு முன்பு, பழங்கால மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழியாக இருக்கலாம். தொல்லியல் துறையினரின் முழுமையான ஆய்வுக்கு பின், உண்மை கண்டறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.