பதிவு செய்த நாள்
11
டிச
2020
11:12
திருவண்ணாமலை:திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழா நிறைவு பெற்ற நிலையில், அண்ணாமலையார் மலை உச்சியில் இருந்த மஹா தீப கொப்பரையை இறக்கி, கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நவ., 29-ல், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட்டது. 11 நாட்கள், மஹா தீபம் எரிந்த நிலையில், நேற்று காலை, 6:00 மணி வரை, பக்தர்கள் வழிபட்டனர்.தீப திருவிழா நிறைவு பெற்ற நிலையில் நேற்று, மஹா தீப கொப்பரை, மலை உச்சியில் இருந்து, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதை, மலை மீது செல்ல முடியாத பக்தர்கள் வணங்கி வழிபட்டனர். கொப்பரையில் சேகரிக்கப்பட்ட தீப மை பிரசாதம், வரும், 30ல், மார்கழி, திருவாதிரை நாளில், முதலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்பட்டு, பின் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும். ரூ.92 லட்சம் காணிக்கைதீப திருவிழா மற்றும் பவுர்ணமி முடிந்த நிலையில் நேற்று, உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், ஒரு மாதத்தில், கோவிலுக்கு வந்த பக்தர்கள், 91 லட்சத்து, 94 ஆயிரத்து, 508 ரூபாயை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 254 கிராம் தங்கம், 543 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் செலுத்தியிருந்தனர். கடந்தாண்டு, தீப திருவிழாவில், 2 கோடியே, 25 லட்சத்து, 62 ஆயிரத்து, 155 ரூபாய், 292 கிராம் தங்கம், 2,684 கிராம் வெள்ளி காணிக்கையாக வந்தது. நடப்பாண்டு, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், காணிக்கை வசூல் குறைந்தது.