பதிவு செய்த நாள்
29
மே
2012
12:05
16. ஸாதக தீக்ஷõ விதி: கிருஷ்ணா, ஸாதக தீக்ஷõவிதியைச் சொல்லுகிறேன். மந்திர மகாத்மியத்தைச் சொன்னபோதே ஸாதக தீக்ஷõ விவரணஞ் சொல்ல ஆரம்பித்து, முடிக்காமற் போனேன். அதை இப்பொழுது கேட்பாயாக. முன்பு போல குண்ட மண்டலங்களைச் செய்து, பூரண கும்பம் வைத்து மண்டலத்தின் நடுவே சிவபெருமானைப் பூஜித்து ஓமம் முடித்து சீடனை மண்டபத்தின் நடுவே கொண்டு வந்து மீண்டும் நூறு ஹோமம் செய்து, பத்துத் தர்ப்பணஞ் செய்து கும்பத்தால் அபிஷேகித்து, ஜலத்தைக் கையிற்கொண்டு, மந்திர உபதேசம் செய்யவேண்டும். சாங்கோபாங்கமாக மூலமந்திரத்தை தெளிவித்து, மலர்களுடன் கூடிய நீரை அவன் கையில் பெய்து, இந்த வித்தையை உனக்குக் கொடுத்தேன். இந்த மந்திரம் சகல சித்தியையும் கொடுக்குமாக! என்று கூற வேண்டும். குரு சிவனுடைய ஆக்கினையை அடைந்து மந்திர சாதன விநியோகங்களை சீடனுக்கு உபதேசிக்க வேண்டும். (குருவாற் கூறப்பட்ட விஷயங்களைச் சீடன் நன்றாகத் தெரிந்து கொண்டு குருவின் சன்னதியில் மூலமந்திர சாகனமும் ஜபித்தல் முறையும் தெரிந்து கொண்டு நாள்தோறும் அவ்வண்ணம் செய்து வரவேண்டும்.) நல்ல நாளில் தோஷரகிதமான சுப முகூர்த்தத்தில் ஸ்நானஞ் செய்து, புனிதமான ஆடையணிந்து நித்தியகடனை முடித்து, கந்தபுஷ்பாதிகளால் அலங்கரித்துக் கொண்டு, திருவெண்ணீறு அணிந்து வெண்ணிறமான கோலத்துடன் சிவாலயத்திலாவது, மனோகரமான இடத்திலாவது சுகாசனத்தில் இருந்து சிவசாஸ்திரத்தால் தன் சரீரத்தைச் சிவசரீரமாக்கி, லகுநேசுவரரைப் பூஜித்து, பாலன்னம் நிவேதித்து, பூஜையை முடித்து அவரை வணங்கி அவருடைய அநுக்கிரகத்தை அடைந்து கோடி, ஐம்பது லட்சம் இருபத்தைந்து லட்சம், இருபது லட்சம், பத்து லட்சமாவது தன் சக்திக்கேற்ப ஜபிக்க வேண்டும். அஹிம்சை, க்ஷமை, சாந்தி, அடக்கம் இவற்றை நியதியாக கொண்டு, காரம் உப்புகளை நீக்கி மிதமாகப் பாற்சோற்றை ஒருவேளை மட்டும் புசித்துக் கொண்டு, பாற்சோறு கிடைக்காவிட்டால் பழம், கிழங்கு, காய் இவற்றை மிதமாகப் புசித்துக் கொண்டு ஜபிக்க வேண்டும். பால், தயிர், நெய், பலகாரம் முதலியவற்றையும் புசிக்கலாம். எதை புசித்தாலும் சிவப்பிரீதி செய்தே புசிக்கவேண்டும். ஆகார விஷயத்தை குறைப்பது சிறப்பு ஜெபத்தை அதிகப்படுத்துவது சிறப்பாகும். ஆகாரஞ் செய்கையில் மவுன விரதத்தைக் கொண்டு ஆயிரத்தெட்டு மந்திர ஜெபம் செய்யவேண்டும். புண்ணிய நதியில் ஹரஹரவென்ற சிவநாமங்களை எண்ணூறு முறை ஜபித்து நீராடி, பஸ்ம ஸ்நானஞ் செய்து, விபூதி ருத்திராக்ஷம், கண்டிகை அணிந்து, விரலிற் பவித்திரந்தொடுத்து (சிரமீது தெளித்துக் கொள்ளுதல்) செய்து, தர்ப்பணம் செய்து ஏழுவகை அல்லது ஐந்து அல்லது மூன்று அல்லது நெய் இவற்றால் ஓமஞ்செய்து, இவ்வாறு பக்தியுடைய சாதகனான சீடன் செய்து வரவேண்டும். இப்படிச் செய்பவனுக்கு பூவுலகில் அரிய பொருள் ஒன்றுமில்லை. அல்லது நாள்தோறும் ஏகமனமுடையவனாய் எத்தொழிலைச் செய்தாலும் ஜெபத்திலேயே மனதைச் செலுத்த வேண்டும். ஆயிரம் ஜெபமாவது செய்து முடித்த பிறகே போஜனம் செய்யவேண்டும். அத்தகையவனுக்குத் துர்லபமானது ஒன்றுமிராது. அசுபங்கள் வரமாட்டா; இவ்வுலகில், சம்பத்து, சவுக்கியம் இவற்றைப் பெற்று, அவ்வுலகில் சிவசாயுச்சியத்தை அடைவான்.
17. ஆசாரிய அபிஷேகம்
கிருஷ்ணா! இவ்விதம் பாசுபத தீøக்ஷயை அடைந்த சீடனை ஆசார அபிஷேகம் செய்ய யோக்கியதை அடைந்திருக்கிறானா என்பதை ஆசிரியன் தெரிந்துகொண்டு, ஆசாரிய அபிஷேகம் செய்ய வேண்டும். அது எவ்வாறு என்றால், முன்பு சொன்னது போல, மண்டலம் முதலியவற்றை நியமித்துச் சிவபெருமானைப் பூஜித்து, வேறோர் மண்டலஞ் செய்து, புனிதமான ஜலபூரிதமான ஐந்து கும்பங்களை வைக்க வேண்டும். அவ்வைந்தினுள் நிவ்ருத்திக்காக கிழக்கிலும் பிரதிஷ்டைக்காக மேற்கிலும் வித்தைக்காகத் தெற்கிலும், சாந்திக்காக வடக்கிலும் சாந்தியா தீதைக்காக நடுவிலும் ஒவ்வொரு கலசங்களாக வைத்து, முறையே ஐந்து கலைகளையும் அவ்வைந்திலும் ஆவாஹனஞ் செய்து பூஜித்து, தேனுமுத்திரையைக் காட்டி, மேற்கூறியபடி ஓமம் முதலியவற்றைப் பூரணாகுதிவரையில் செய்து முடித்து சீடனை மண்டலத்திற் புகுத்தி தர்ப்பணம் முதல் ஓமம் வரை பாவஞ் செய்து சிவபெருமானைப் பூஜித்துச் சிவ அனுக்கிரகமடைந்து, அபிஷேக காரணமாகச் சீடனைப் பீடத்தில் உட்கார வைத்து, சகளீகரணம் (பஞ்ச கலைகளின் நியாசம்) செய்து, ஐந்து கலைகளின் சொரூபமுடையவனாக்கி, மந்திர நியாசம் செய்து கசலபாவமும் ஒருத்த மந்திரமூர்த்தியாகக் கொண்டு சிவபெருமானுக்கு ஒப்புவிக்க வேண்டும். முன்பு அமர்த்திய ஐந்து கும்பங்களிலுமுள்ள ஜலத்தையெல்லாம் சிவபெருமானே அபிஷேகித்ததாகப் பாவனை செய்து அந்தச் சீடனுக்கு அபிஷேகம் செய்து தன் கரத்தைச் சிவகரமாக அவன் சிரமிசை வைத்து சிவாசாரியன் ஆயினை என்று கூறி சிவாசாரியனாக்கி ஆபரணங்களையணிந்து அன்புடன் சிவபெருமானைப் பூஜித்து, பத்து ஓமங்களைச் செய்து பூர்ணாகுதி முடித்து மீண்டும் சிவபூஜை செய்து, சாஷ்டாங்கமாகப் பணிந்து, தலைமீது கரங்களைக் கூப்பி, சுவாமி! உம் திருவருளால் இவனை ஆசாரியனாகச் செய்தேன். அவனைத் தேவருடைய கட்டளையைக் கடந்தவனாகச் செய்து கொள்ள வேண்டும் என்று விண்ணப்பஞ் செய்து சீடனோடு மீண்டும் சிவபெருமானை வணங்கி சிவாகமத்தைப் பூஜித்து, சீடனிடம் கொடுக்கவேண்டும். சீடன், அந்த சிவாகமத்தை இரு கரங்களாலும் ஏற்றுப் புஸ்தகப் பீடத்தில் வைத்து, மலர்களால் அருச்சித்துப் பூஜிக்கவேண்டும். அதன்பிறகு அவனுக்கு யானை, குதிரை, குடை, கொடி முதலிய ராஜ வரிசைகளைக் கொடுக்க வேண்டும். சிவாகமங்களை நன்றாக உணர வேண்டும். சிவாகமங்களை நன்றாக ஆராய்ந்த மாணாக்கர்களுக்கே கொடுப்பாயாக! அத்தகைய உத்தமனுக்கே பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேசிப்பாயாக. சிவலிங்கப் பிரதிஷ்டை செய்க. சவுசம், சாந்தி, தயை, கோபமின்மை முதலியவற்றையடைக. உத்தமர்களுக்காகப் பூஜை செய்க என்று சீடனுக்கு ஆசிரியன் கட்டளையிட்ட பிறகு மண்டலத்தில் சிவபெருமானை யுத்வாசனஞ் செய்து, கும்பம் அக்கினி முதலியவற்றை நீக்கி, அங்குள்ள பெரியோரைப் பூஜிக்க வேண்டும்.
தீøக்ஷகள் ஒன்றும் இரண்டும் அல்லது மூன்றும் ஒரே காலத்தில் செய்யலாம் என்று நூல் வல்லவர்கள் சொல்லுவார்கள். அவ்வாறு ஒரே காலத்திலேயே எல்லாத் தீøக்ஷகளையும் செய்ய நேருமாகில் அத்துவாக்களின் சுத்திக்குச் செய்யும் முறையாகவே கலசங்களை வைத்து சமயதீøக்ஷக்குச் செய்வது போலவே கிரியை செய்து, சிவபெருமானைப் பூஜித்து, மந்திரமும் தர்ப்பணமும் செய்து; சிவமந்திரத்தை மாணவனுக்குக் கொடுத்து தீக்ஷõகருமங்களை முறைப்படி முடிக்க வேண்டும். உலகம் முழுவதும் மூன்று தத்துவங்களின் சொரூபம் என்று கருதி, அபிஷேகம் வரையில் செய்து அத்துவ சுத்தியை முடிக்க வேண்டும். தத்துவ சுத்தி செய்தால், சாந்தியாதீதை முதலாகச் சொல்லிய கலைகளுக்கு முன் சொன்னவாறே செய்ய வேண்டும். சிவதத்துவம், வித்தியா தத்துவம், ஆத்தும தத்துவம் என்ற மூன்றினில் சக்தி தத்துவத்திலிருந்து சிவதத்துவமும் சிவ தத்துவத்திலிருந்து வித்தியா தத்துவமும் வித்தியா தத்துவத்திலிருந்து ஆன்ம தத்துவமும் தோன்றும். சிவதத்துவத்தினால் சாந்தியாதீதையும் அத்துவாக்களும் வியாபிக்கப்பட்டு உள்ளன. ஏனைய அத்துவாக்களை வித்தியாதத்துவம் வியாபரிக்கும் ஆன்ம தத்துவம் எல்லா அத்துவாக்களையும் நிறைக்கும். சாம்பவி தீøக்ஷ சூஷ்மம் என்றும் சர்த்த தீøக்ஷ ஸ்தூலம் என்றும் பெரியோர்கள் சொல்லுவார்கள். நான்கு வகையான தீக்ஷõ விதிகளையும் உனக்குச் சொன்னேன். கிருஷ்ணா! இன்னும் நீ கேட்க விரும்பியவற்றைச் கேட்பாயாக!
18. நித்திய நைமித்திக கர்மங்கள்
ஸ்ரீ கிருஷ்ண பகவான், உபமன்யு முனிவரை நோக்கி, சுவாமி! சிவசமஸ்காரம் செய்து கொண்டவர்கள் செய்யத்தக்க கர்மங்களும் சிவசாஸ்திரத்தில் கூறிய வகையாகச் செய்ய வேண்டிய நித்திய நைமித்திக கர்மங்களும் எவை எனச் சொல்ல வேண்டும் என்று கேட்டார். அதற்கு உபமன்யு முனிவர், மகிழ்ச்சியுடன் சொல்லத் துவங்கினார்.
விடியற்காலத்தில் துயிலெழுந்து, கவுரிசங்கரர்களைத் தியானித்து செய்யத்தக்க கர்மங்களை யோசித்து, வீட்டை விட்டுப் புறஞ் சென்று, நிர்ஜனமான இடத்தில் மலஜல விசர்ஜனம் செய்து சவுசமுடித்து, பல் சுத்தி செய்து கொள்ள வேண்டும். அஷ்டமி முதலிய தந்ததாவனஞ் செய்யப்படாத தினங்களில் ஜலத்தால் பன்னிருமுறை வாயைக் கொப்பளித்து உமிழ்ந்து விடுக. பிறகு ஆசமனஞ் செய்து நதியிலாவது குளத்திலாவது தீர்த்தங்களிலாவது வீட்டிலாவது விதிப்படி மண்பூசிக் கொண்டு மூழ்கி பிறகு கோமயம் பூசிக்கொண்டு மூழ்கி, மீண்டும் நீரில் மூழ்கி, வஸ்திரத்தால் உடலைத் துடைத்துக்கொண்டு வஸ்திரம் அணியவேண்டும். பிரமசாரியும் விதவையும் தவசியும் மீண்டும் தந்ததாவனமும் கந்தமுடைய நீரில் ஸ்நானமுஞ் செய்யலாகாது. துகில் அணிந்து, சிகையை முடிந்து வேறு நீரில் பிரவேசித்து ஆசமனியஞ்செய்து ஸ்நானஞ் செய்து, மும்மண்டலங்களை நினைந்து சிவபெருமானையும் உமாதேவியையுந் தியானித்து ஸ்நானம் செய்து தர்ப்பை சுற்றிய பசுவின் கொம்பு, பலாசு இலை, தாமரை, இலை, இவற்றாலுங் கையாலும் நீர் முகந்து ஐந்து முறை சிரமிசைப் புரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும். உத்தியானத்திலாவது வீட்டிலாவது, நீராடும்போது, பாத்திரத்திலுள்ள நீரேயல்லாமல் வர்த்தனி கலச நீராலும் மூழ்கவேண்டும். மேலே சொன்னபடி ஸ்நானம் செய்யச் சக்தியற்றவர்கள் பரிசுத்தமான ஈர வஸ்திரத்தால் சிரம் முதல் கால்வரையில் துடைத்துக் கொள்ளலாம். அதற்குஞ் சக்தியில்லாதவன், ஆக்கிநேய ஸ்நானம் (உடல் முழுதும் விபூதியணிதல்) செய்ய வேண்டும். சிவபெருமானையே எப்போதும் தியானிப்பதாகிய மானஸ ஸ்நானமே யோகிகஞ் செய்தற்கு உரியது. அவனுடைய சூத்திரத்திற்கேற்றபடி ஆசமனியஞ்செய்து சூரிய மண்டலத்தில் இருக்கிற மகாதேவனைத் தியானஞ்செய்து, சாஸ்திரோக்தமாக பூஜை செய்து, ஆதித்தரூபியான பரமசிவனுக்கு அர்க்கியங்கொடுத்து, பிரமக்ஞாந்தமான கருமத்தைச் செய்து, தேவர் ருஷி பிதுர்த்தர்ப்பணஞ்செய்து, சிவபெருமானைப் பூஜித்து, ஸ்வாமி! என் பாவங்கள் பரிகரிக்கப்படவேண்டும்! என்று பிரார்த்திக்க வேண்டும். அல்லது தன்னுடைய சூத்திரத்திற்குத் தக்க கர்மங்களைச் செய்து, கரநியாசமும் சகளீகரணமுஞ்செய்து சந்தனம், வெண்கடுகு ஜலம் இவற்றை இடக்கையில் ஏந்தி, வேத விதியால் வலக்கையில் தர்ப்பையைக் கொண்டு அதன் முனையால் தோய்த்து முடிமிசை தெளித்துக் கொண்டு, பின் மிகுந்தநீரை இடப்புறமூக்கினால் அதை மோந்து அதன்பின் விட்டுவிடவேண்டும். தான் மோந்த அந்த நீரானது உடம்பினுள் சென்று அவனது பாவங்களை யெல்லாம் ஒழிக்க, அதனால் அந்தப் பாவம் வலப்புற மூக்கு வழியால் ஒரு கருங்கல்லின் மேல் வீழ்ந்தொழுகியதாகப் பாவிக்க வேண்டும். பிறகு, தேவர்கள், ருஷிகள், பிதுர்க்கள், பூதங்கள் இவர்களுக்குத் தனித்தனி அர்க்கியங்கொடுத்து செஞ்சந்தனக் குழம்பால் மண்டலம் எழுதி இரத்தினப் பொடிகளால் அலங்கரித்து ஆவரண தேவர்களுடன் சூரியதேவனை ககோல் காயா என்னும் மந்திரத்தால் பூஜை செய்யவேண்டும்.
அந்த மண்டலத்தில் பொற்பாத்திரத்தையும் வெள்ளிப் பாத்திரத்தையும் வைத்து அதில் செஞ்சந்தனத்தை நிறைத்து செம்மலர்கள், எள், தர்ப்பை, அரிசி, அறுகு, நாயுருவி, பசுவின்பால், தயிர், நெய் இவற்றை ஜலத்துடன் பெய்து, முழங்காலின்மேல் நின்று அன்புகையினால் அந்தக் கிண்ணத்தை எடுத்துச் சிரமிசை வைத்துக் கொண்டு, சூரியமண்டல மத்தியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு அதனால் அர்க்கியங் கொடுக்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அந்தக் கலசத்து நீரையே கையில் வைத்துக்கொண்டு, தர்ப்பையாற் பெய்து கரங்களால் அர்க்கியங் கொடுக்கலாம். அதன் பிறகு கைகளை அலம்பிக்கொண்டு, கரநியாசம் செய்யவேண்டும். தன்னைச் சிவ சொரூபமான பஞ்சப் பிரமமாகப் பாவித்து சிவபெருமானது திருவெண்ணீற்றினைக் கையில் எடுத்து, வைத்து நீரைச் சொரிந்து, குழைத்து, யகாரம் முதல் நகாரமிறுதியாக முறையே, சிரம், முகம், மார்பு குய்யம் முழங்கால் இவ்விடங்களில் பஞ்சாக்ஷரமோதி அணிந்து பிறகு மூலமந்திரத்தால் உடல் முழுவதும் பூசிக்கொண்டு அவ்விடம் பெயர்ந்து வேறு வஸ்திரமணிந்து இருமுறை சுத்த ஆசமனஞ் செய்து, பதினோரு விசை மூலமந்திரம் ஜபித்து அந்த நீரைச்சிரமிசைப் புரோக்ஷணஞ் செய்து கொண்டு, வேறு ஒரு வஸ்திரமணிந்து மீண்டும் இருமுறை ஆசமனஞ்செய்து சிவபெருமானை நினைத்து கரநிகாயாசஞ் செய்து திருவெண்ணீற்றினால் கோணலில்லாமலும் நீளமாகவும் யாவர்க்கும் புலப்படுவதாகவும் திரிபுண்டரமாக அணியவேண்டும். திரிபுண்டரமாகவாவது, வட்டமாகமாவது, சதுரமாகவாவது, பொட்டாகவாவது, பிறை சந்திரன் போலவாவது திருவெண்ணீற்றையணியலாம். அவ்வகையாகவே சந்தனத்தையும் அணியவேண்டும். நெற்றியில் அணியும் வகையாகவே சிரம், மார்பு முதலிய இடங்களிலும் தரிக்கவேண்டும்.
சர்வாங்கமும் திருவெண்ணீற்றினை உத்தூளனஞ் செய்து கொள்ள வேண்டும். எது செய்தாலும் திரிபுண்டரமாக அணிதலே சிறப்புடையது. ஆகையால் உத்தூளனமில்லாவிட்டாலும் திரிபுண்டரமாகவே அவசியம் அணிந்து கொள்ளவேண்டும். சிரம், கண்டம், காது, கழுத்து முதலிய இடங்களில் உருத்திராக்ஷம் அணிந்து கொள்ள வேண்டும். பின்னம் இல்லாததும் உருட்சியானதும் ஆகிய உருத்திராக்ஷங்களைக் கொள்ளவேண்டியது. அவ்வாறு ருத்திராக்ஷ தாரணஞ் செய்கையில் வெண்ணிறமுடையதை வேதியனும் பொன்னிறமுடையதை க்ஷத்திரியனும் செந்நிறமுடையதை வைசியனும் கருநிறமுடையதைச் சூத்திரனும் அணியத்தகும். உயர்ந்தவர் தாழ்ந்ததையும், தாழ்ந்தவர் உயர்ந்ததையும் தரிக்கக்கூடாது. ஆயினும் உருத்திராக்ஷங்கள் அவரவர்க்கு ஏற்றபடி கிடைக்காவிட்டால் மாறியும் அணிந்து கொள்ளலாம். ஆயினும் இழிந்தோர் உயர்ந்த மணிகளை அணியக்கூடாது. உருத்திராக்ஷத்தை புனிதனாக இருக்கும் போதுதான் அணியவேண்டும். பரிசுத்தமில்லாத சமயத்தில் உருத்திராக்ஷம் அணியக்கூடாது. இவ்வாறு உருத்திராக்ஷம் அணிபவர்கள் நாள் ஒன்றுக்கு மும்முறை இருமுறை அல்லது ஒருமுறையாவது ஸ்நானம் செய்து பரிசுத்தர்களாகவே அணியவேண்டும். உருத்திராக்ஷமணிந்து பூஜாமண்டபத்தில் பிரவேசித்துத் தமக்கு இயைந்த ஆசனத்தில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி உட்கார்ந்து சிவபெருமானையும் உமாதேவியையும் பூஜிக்க வேண்டும். அப்போது சுவேதன் முதல் இலகுனீசன் இறுதியாகவுள்ள ஆசிரியர்களைப் பணிந்து துதித்து, தனது ஆசிரியனுக்கும் நமஸ்காரம் செய்து, சிவபெருமானைப் பணிந்து,
ஸிவோ மஹேஸ்வரச் சைவ ருத்ரோவிஷ்ணு; பிதாமஹா
ஸம்ஸார வைத்ய ஸ்ஸர்வக்ஞா பரமாத்மி தசாஷ்டகம்
(சிவ. மஹேஸ்வர; ருத்ர; விஷ்ணு பிதாமஹ;
ஸம்ஸாரவைத்திய; ஸர்வக்ஞ; பரமாத்ம;)
என்ற எட்டு நாமங்களையும் ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாரல்லாவிடில் சிவ என்னும் திருநாமம் ஒன்றையே பதினோருமுறைகளுக்கு அதிகமாக ஜெபிக்கவேண்டும். வியாதி முதலியன ஒழிவதற்காக தேஜோமூர்த்தியான சிவபெருமான் தன் நாவின்முனையில் எழுந்தருளியிருப்பதாகத் தியானித்துக் கொண்டு, கைகளைச் சுத்திசெய்து அந்தக் கைகளில் பரிமள கந்தம் அணிந்து, கரநியாசஞ் செய்ய வேண்டும். கரநியாசமாவது மூவகைப்படும் என்று சிவாகமங்கள் கூறும். அவை ஸ்திதி, உற்பத்தி, லயம் எனப்படும். அவற்றுள் அங்குஷ்ட முதல் கனிஷ்டிகை வரையில் நியாஸஞ் செய்வதை ஸ்திதி நியாஸம் என்றும் வலக்கை அங்குஷ்ட முதல் இடக்கை அங்குஷ்டம் இறுதியாகச் செய்வதைச் சிருஷ்டி நியாஸம் என்றும் சிருஷ்டி நியாஸத்திற்கெதிராக கனிஷ்டிகை முதல் பெருவிரல் வரையில் நியாஸஞ் செய்வதை லய நியாஸம் என்றும் சொல்லப்படும். இந்த மூன்று நியாசங்களில் ஸ்திதி நியாசம் என்பது கிருகஸ்தர்களுக்கும் சுமங்கலிகளுக்கும் கன்னிகைகளுக்கும் உரியது, லய நியாஸமாவது யதிகளுக்கும் வானப்பிரஸ்தர்களுக்கும் விதவைகளுக்கும் உரியது.
விந்துவுடன் கூடிய நகாராதி பஞ்சாக்ஷரங்களை விரல்களில் நியாஸஞ் செய்து கைத்தலத்திலும் அநாமிகையிலும் சிவமந்திரத்தையும் பத்துத் திக்குகளிலும் அஸ்திர மந்திரத்தையும் நியாஸஞ் செய்யவேண்டும். இதயம், கண்டம், தவடை புருவநடு, பிரமாந்திரம் என்னும் இடங்களை ஆஸ்ரயித்த நிவ்ருத்யாதி ஐந்து கலைகளையும் சுத்தஞ் செய்யும் நிமித்தமாகப் பஞ்ச பூதங்களாகச் சிந்தித்து, பஞ்சாக்ஷர மந்திரம் ஜபம் செய்யவேண்டும். உஸ்வாச நிஸ்வாசங்களை அடக்கிக் கொண்டு கும்பகஞ் செய்து மேற்கூறிய ஐந்து இடங்களிலுள்ள பூதக் கிரந்தியை அஸ்திர மந்திரத்தால் அறுத்துவிடவேண்டும். பிறகு சுழுமுனை நாடியால் சஞ்சரிக்கும் வாயுவை விட்டு விளங்கும் ஆன்மாவை பிரமாந்திரத்தில் சிவதேஜசுடன் சேர்த்து, வாயுமந்திரத்தால் சோஷணம் செய்து கலைகளைப் பழையபடியே அமைத்துத் தேகமாகக் கொள்ள வேண்டும். சிவதேஜசில் ஆன்மாவைப் பிரமாந்திர வழியாகக் கொண்டு வந்து தேகத்தில் இதய கமலத்தில் இருத்தி, அமிர்த மாரியால் உடல் முழுவதும் நனைக்கவேண்டும். பிறகு கரநியாசம் கரசோதனம் தேகநியாசம், இவற்றை மஹா முத்திரையால் செய்து, அவயவங்களையெல்லாம் சிவாகமப்படி நியாசஞ் செய்து அஸ்தபாதங்களின் சந்திகளில் வர்ண நியாசஞ் செய்து ஆறுவகைப்பட்ட ஷடங்க நியாஸம் செய்யவேண்டும். அக்கினி முதலாகிய பத்துத் திசைகளிலும் பந்தனஞ் செய்யவேண்டும் அல்லது உச்சிமுதல் அடி வரையில் பஞ்சாங்கங்களுடன் ஷடங்க நியாசஞ் செய்து, சிவபெருமானையும் உமாதேவியையும் பூஜிக்க வேண்டும். இது சுருக்கமாக என்னால் சொல்லப்பட்டது. திடமுடையவனும் விருப்பமுடையவனும் விஸ்தாரமான விதிப்படி நியாச கர்மங்களைச் செய்து கொள்ளலாம். அஃது எவ்வாறு என்றால் மாதுருகா நியாசம்; பஞ்சப்பிரமநியாசம் பிரணவநியாசம், அம்ஸ நியாசம், பஞ்சாக்ஷர நியாசம் என்னும் இவ்வைந்தும் சிவாகமங்களில் சிறப்பாகச் சொல்லப்பட்டிருப்பதால் அவற்றுள் தான் விரும்பிய ஒன்றையாவது ஐந்தையுமாவது பூஜாகாலத்தில் செய்துகொள்ள வேண்டும்.
அவற்றுள் மாத்துருகா நியாஸம் எப்படி என்றால் உச்சியில் அகரம் நெற்றியில் ஆகாரம் நேத்திரங்களில் இ, ஈ, செவிகளில் உ, ஊ, கபோலங்களில் ரு, ரூ, நாசிகளில் லு, லூ உதடுகளில் ஏ, ஐ, பல்வரிசைகளில் ஓ, ஓள, நாவில் அம் தவடையில் அ: வலக்கையில் ஐந்து சந்திகளில் சவர்க்கம் இடக்கரத்தில் ஐந்து சந்திகளில் சவர்க்கம், பாதங்களில் டவர்க்கதவர்க்கங்கள், பக்கங்களில் பம்ப முதுகு நாபிகளில் (பஹந) இதயத்தில் ம, துவக்கு மாமிசம் உதிரம், மேதை மச்சை, அஸ்தி, ஸநாயு என்னும் சப்த தாதுக்களில் முறையே யரலவஸஷஸ இதயாந்தத்தில் ஹ புருவமத்தியில் க்ஷ இவ்வகையாக ஐம்பத்தெழுத்துக்களால் வர்ணமாத்ருகா நியாசம் செய்ய வேண்டும். அதன்பிறகு, கரநியாசஞ் செய்து, சிரம், முகம், மார்பு, குய்யம், பாதம் ஆகிய இடங்களில் முறையே பஞ்சப் பிரமங்களை நியாசஞ் செய்யவேண்டும். தனக்கு ஐந்து முகங்கள் உள்ளனவாகக் கருதி ஈசானக் கலை ஐந்தையும் முகம், இதயம், குஹ்யம் இருபாதங்களிலும் நியாசம் செய்து தற்புருஷகலைகள் நான்கையும் கிழக்கு முதலிய திசைகளிலுள்ள நான்கு முகங்களிலும் நியாசம் செய்து, அகோர கலைகள் எட்டையும் இதயம், கண்டம், தோல், நாபி, வயிறு, முதுகு, மார்பு இவற்றில் நியாசம் செய்து வாமதேவ கலைகள் பதின்மூன்றையும் குதம் குறி தொடைகள், முழங்கால்கள், கணைக்கால்கள் துடைச் சந்திகள் இடைப் பக்கங்களில் முறையே நியாசம் செய்து, சத்தியோஜாதகலைகள் எட்டையும் பாதங்கள், கரங்கள் நாசி, சிரம், தோல்களில் நியாசம் செய்யவேண்டும். இவ்வகையாக முப்பத்தெட்டுக் கலைகளையே பஞ்சப்பிரமநியாசம் எனப்படும். கைகள், முழங்கைகள், மணிக்கட்டுகள், பக்கங்கள் வயிறு, தொடைகள், கணைக்கால்கள், பாதங்கள், முதுகு இவ்விடங்களில் பிரணவத்தை நியாசம் செய்ய வேண்டும்.
நேத்திரங்கள் மூக்குத் துவாரங்கள், செவிகள், தோள்கள், முலை, நெற்றி, இடை, அக்குள், பக்கங்கள், பரடு, கைகள், கணைக்கால்கள் ஆகிய இவ்விடங்களில் பஞ்சாக்ஷர நியாசம் செய்யவேண்டும்; இவ்வாறு செய்யாதவன், சிவ தர்மங்களைச் செய்யக்கூடாது. சிவ தர்மமானது கர்மயாகம், தபோயாகம், ஜபயாகம், தியானயாகம், ஞானயாகம் என்று ஐவகைப்படும். இவற்றில் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் கடைப்பிடித்திருக்கிறார்கள். இவர்களில் முறையே ஒருவருக்கொருவர் உயர்ந்தவர்கள் ஆவார்கள். அவற்றுள் கர்மயாகம் காமியம் என்றும், ஆகாமியம் என்றும் இருவகைப்படும். அவற்றில் காமிய யாகஞ் செய்பவன் யோகங்களை அனுபவித்து மீண்டும் பிறவியை அடைவான். அகாம்ய யாகஞ் செய்பவன் சிவசன்னதியிற் போகங்களை அனுபவித்துப் பின்னர் தபோயாகமுடையவனாய் பிறந்து தவஞ்செய்து, யோகங்களை அனுபவித்து ஜபயாகஞ் செய்பவனாகத் தோன்றி ஜபஞ் செய்து ஞானத்தை அடைந்து, நெடுங்காலம் சிவசாயுஜ்ஜியமடைவான். ஆகையால் முக்தியடைவதில் சிவபெருமானின் ஆக்ஞையை அடைந்து கர்மயாகத்தையாவது செய்யவேண்டும். அகாமியத்தை அனுஷ்டிப்பவன் ஒரே காலத்தில் காமியத்தைச் செய்தால் பந்தம் அடைகிறான். ஆகையால் இந்த ஐந்து யாகங்களில் தியானயாகமும், ஞானயாகமுமே சிறந்தன. அவற்றையே செய்யவேண்டுவது அவசியம். தியான ஞானயாகங்களைப் பழகியவன் சமுசார சாகரத்தைக் கடந்தவன். இம்சை முதலிய குரூரங்களை விடுத்து மனதைப் புனிதஞ் செய்து தியானயாகம் செய்பவன் இவர்கள் மோட்சமடைவார்கள். பலர் அறியும்படிக் கிரியைகளைச் செய்பவர்கள், பெரும்பலனை அடைய மாட்டார்கள். இராஜக்கிரகத்தில் சேவை செய்வோரின் வாயில் காப்போனைவிட அரண்மனையின் உள்ளேயிருந்து சேவை செய்பவன் பெரும் செல்வமடைவதுபோல சிவபெருமானை நோக்கிக் கர்மயாகஞ் செய்பவனைவிட, தியானயாகஞ் செய்பவன் சிறப்பான பயனை அடைகிறான். கர்மயாகச் செய்பவர்கள் சிலை, தரு, லோகம் முதலியவற்றால் செய்த மூர்த்தங்களைக் கண்டு மகிழ்வது போல, தியானயாகம் செய்பவர்கள் சிவ சொரூபத்தைத் தமது இதயதாமரையில் சேவித்துக் களிப்படைகிறார்கள். ஆகையால் தியானயாகஞ் செய்பவர்கள் கல், மண் முதலியவற்றாற் செய்த மூர்த்திகளில் மனதைச் செலுத்தமாட்டார்கள்.
ஒருவன் தன்னுடைய ஆன்மாவின் உள்ளேயே எழுந்தருளியிருக்குஞ் சங்கர பகவானைத் தரிசித்துப் பூஜை செய்யமாட்டாமல் பாஹ்யத்தில் சிலை, தரு முதலிய மூர்த்தங்களில் வருத்தப்பட்டுப் பூஜை செய்வது கையிலுள்ள பாற் சோற்றைப் பார்த்துப் புசிக்காமல் புறங்கையில் ஒழுகுவதை நக்குவது போலிருக்கும். ஞானத்தால் தியானம் உண்டாகும், தியானத்தால் ஞானம் விருத்தியடையும். ஞான தியானங்களால் முக்தியுண்டாகும். ஆகையால் மனிதன் தியானத்தில் ஆசக்தியையுடையவனாக வேண்டும். துவாதசாந்தம் தலை, நெற்றி, புருவநடு, நாசிமுனை வாய், கண்டம், இதயம், நாபி மூலாதாரம் ஆகிய இடங்களில் சிரத்தா பக்தியுடன் கர்மயாகத்தைப் போலச் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் பூஜை செய்ய வேண்டும். அவ்வாறில்லையெனில் சிவலிங்கத்திலாவது விக்கிரகத்திலாவது அக்கினியிலாவது பூமியிலாவது ஜலத்திலாவது பக்தியோடு சக்திக்கு ஏற்பப் பூஜை செய்ய வேண்டும், அல்லது அந்தர்முகத்திலாவது, பஹிர் முகத்திலாவது பூஜை செய்யலாம். ஆனால் அந்தர்முகத்தில் பூஜை செய்பவன் பஹிர் முகத்தில் பூஜை செய்தாலும் செய்யாமலும் செய்யாது விடுத்தாலும் விடலாம் என்று உபமன்யு முனிவர் ஸ்ரீகிருஷ்ணமூர்த்திக்குக் கூறியருளினார்.
19. மானஸ பூஜாவிதி
உபமன்யு முனிவர் தொடர்ந்து கூறலானார். கிருஷ்ணா! பூர்வம் சிவபெருமான் உமாதேவியாருக்குக் கூறிய சிவபூஜாவிதியைச் சொல்லுகிறேன். அக்கினி காரியத்தை இறுதியாகவுடைய நித்திய கர்மங்களையெல்லாம் செய்து அல்லது மனத்தால் முடித்து பூஜைக்குரிய உபகரணங்களை மனதால் சேகரித்து, தன் தேகத்தின் இதய பங்கயத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு வலது புறத்தில் விநாயக் கடவுளையும், இடது புறத்தில் நந்தி தேவரையும், அவரது பத்தினியாகிய சுயசையையுஞ் சிந்தித்துப் பூஜித்து பிறகு இதயகமலத்தில் சிங்காசனம், யோகாசனம், பத்மாசனம் முதலிய ஆசனங்களில் ஒன்றில் தத்துவத்தியத்துடன் கூடிய கமலாசனத்தில் எழுந்தருளியிருப்பவனும் பார்வதி சமேதனும், சகல லக்ஷணங்களுமுடையவனும், சுந்தரமான அவயங்களுடன் கூடியவனும் அநேகமான ஆபரணங்களை அணிந்தவனும், செவ்விய முகம் கரம் பாதம் இவற்றையுடையவனும், மல்லிகை அரும்பு போன்ற புன்னகையையுடையவனும், சுத்தஸ்படிக நிறமான வெண்ணிற விபூதியணிந்த திருமேனியையுடையவனும், மலர்ந்த தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடையவனும், சதுர்புஜங்களும் கம்பீரமான சரீரமும், மனோகரமான சந்திர கலையைச் சிரசில் அணிந்தவனும், சர்ப்பாபரணங்களைத் தரித்தவனும், நீலகண்டனும் சமானாதிகரகிதனும், பரிவாரங்களுடன் கூடியவனுமாகிய சிவபெருமானைத் தியானித்து அவனுடைய இடது பாகத்தில் விசுசித்த நீலோத்பலம் போன்ற காந்தியும், பரந்து நீண்ட கண்களும், பூரணச்சந்திரனை வென்ற பிரகாசத்தையுடைய திருமுகமும் கறுத்துச் சுருண்ட நெற்றியில் படர்ந்த முன்கூந்தலும் பிறை நிலாவாகிய கிரீடமும் பூரித்து உயர்ந்த முனைவாய்ந்த குசங்களும் நுண்ணிய இடையும் பச்சைப் பட்டாடையும் சகலாபரண பூஷிதமும் நெற்றியிலணிந்த திலகத்தின் பிரகாசமும் நானாவித நிறம் வாய்ந்த சுகந்தமிகுந்த மலர்களை அணிந்த அளகபாரமும், சிவபெருமானுக்குச் சமானமான குணமும் திருவுருவும், சிறு நாணமுடைய முகமும் வலக்கரத்தில் பொற்றாமரையும் துடையின்மீது ஊன்றிய இடதுகரமும், பிராண கோடிகளின் பாச விமோசனம் செய்யும் கருணையுடைய சச்சிதானந்த ரூபியாகிய பார்வதிதேவியையும் மங்கலகரமான பீடத்தில் எழுந்தருளியிருப்பதாக தியானித்து சர்வோபசாரங்களோடும் பக்தி பூர்வமாக மனத்தால் சேகரித்த திவ்விய மலர்களால் அருச்சிக்க வேண்டும். அல்லது சதாசிவனை அல்லது மஹேஸ்வரனை அல்லது இருபத்தாறாவது தத்துவமாகிய மூர்த்தியை அல்லது ஸ்ரீகண்டனைத் தியானித்துத் தன் சரீரத்தில் மந்திர நியாசம் செய்து, சிவனேயான தன் மந்திர தேகத்தில் இதய தாமரையில் இருத்தித் தன் தேகத்திற் செய்த நியாசங்களை இறைவனது தேகத்தில் நியாசம் செய்து பகீர்பூஜையைப் போலவே, மானசீகமாகப் பூஜைசெய்ய வேண்டும். பிறகு சமிதை நெய் முதலியவற்றைக் கொண்டு, நாபியில் மானசீகமான ஓமம் செய்யவேண்டும். புருவமத்தியில் தீபசிகை போலப் பிரகாசிக்கும் சிவபெருமானைத் தியானம் செய்ய வேண்டும். இவ்வகையாக தன் சரீரத்தில் தியானிக்கக் கூடிய யோகத்தில் அக்கினி காரியம் அந்தமாகவுள்ள சகலமான, பூஜாவிதானமும் செய்து முடிக்கவேண்டும். இவ்விதமாகப் பூஜையை அந்தர்முகத்தில் முடித்து பஹிர் பூஜையைச் செய்யத் தொடங்கிச் சிவபெருமானைக் கருதி சிவலிங்க சொரூபத்திலாவது அக்கினியிலாவது பூமியிலாவது முறையே சிவபூஜை செய்யத் துவக்கவேண்டும்.
20. கிரியா பூஜாவிதி
உபமன்யு முனிவர் ஸ்ரீ கிருஷ்ணனை நோக்கி, கூறலானார். மூலமந்திரத்தால் பூஜா ஸ்தானத்தில் பரிமளமுடைய சந்தன நீரைத் தெளித்து, மலர்களை இட்டு, அஸ்திரமந்திரத்தால் விக்கினங்களை ஒழித்துப் பத்துத் திக்குகளிலும் அஸ்திர மந்திரத்தால் திக்குப் பந்தனம் செய்து பூஜா ஸ்தானத்தை நியமித்து அங்கே தர்ப்பையைப் பரப்பி புரோக்ஷண மந்திரத்தால் ஜலத்தைப் புரோக்ஷித்துப் பாத்திரங்களைச் சுத்திசெய்து பூஜைப் பொருட்களை சுத்தி செய்து, புரோக்ஷண பாத்திரம், அர்க்கிய பாத்திரம், பாத்திய பாத்திரம், ஆசமன பாத்திரம் ஆகிய நான்கு பாத்திரங்களைச் சுத்தி செய்து வைத்துக்கொண்டு அவற்றில் தனித்தனியாகப் புனித நன்னீர் பெய்து வைத்துக் கொண்டு புஷ்பம் முதலிய திரவியங்களைச் சுத்தப்படுத்திக்கொண்டு இரத்தினம், பொன், வெள்ளி, கந்தம், புஷ்பம், அக்ஷதை, பழங்கள், பத்திரங்கள், தர்ப்பை முதலிய திரவியங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு அபிஷேக ஜலத்தில் பரிமள திரவியங்களையும், பானீயஜலத்தில் மலர்களையும் சீதள வஸ்துக்களையும் சேர்க்க வேண்டும். வெட்டிவேரும் சந்தனமும் பாத்திய பாத்திரத்தில் சேர்க்கலாம். ஜாதிக்காய், கர்ப்பூரம், தக்கோலம், தமாலம் முதலிய பொருட்களைப் பொடித்து, ஆசமன பாத்திரத்தில் போடவும் ஏலம், கற்பூரம், சந்தனம் இவற்றை எல்லா பாத்திரங்களிலும் இடலாம். பச்சைக்கற்பூரம், சந்தனம் தர்ப்பாங்குசம், அக்ஷதை, யவை, நெல், எள், நெய், கடுகுமலர்கள் விபூதி இவையாவும் அர்க்கிய பாத்திரத்தில் இடவேண்டும். தர்ப்பை, மலர்கள், யவை, பருமூலம், பச்சிலை, விபூதி இவற்றை புரோக்ஷண பாத்திரத்தில் இடவேண்டும். பிரணவ மந்திரத்தால் பாத்திரங்களிலெல்லாம் புரோக்ஷணம் செய்து அஸ்திர மந்திரத்தால் ரக்ஷணைசெய்து, தேனுமுத்திரையைக் காட்டி, பூஜாதிரவியங்களையெல்லாம் புரோக்ஷண ஜலம் தெளித்து, புனிதமாக்கிக் கொள்ளவேண்டும். இப்படியாகப் பாத்திரங்கள் சேர்க்க இயலாவிட்டால், புரோக்ஷண பாத்திரம் ஒன்றினாலேயே எல்லாவற்றையும் செய்து கொள்ள வேண்டும்.
விநாயக் கடவுளைப் பக்ஷ்ய போஜ்யங்களால் விதிப்படி வலப்புறத்தில் பூஜைசெய்து பொன்மலை போல உயர்வும் சகலாபரண பூஷிதமும் பால் சந்திரக்கிரீடமும், அழகிய சரீரமும், திரிநேத்திரமும், சூலம், மான், டங்கம், பிரம்பு இவைகளை ஏந்திய சதுர்ப்புஜமும், சந்திர பிம்பத்திற்கு ஒப்பான முககாந்தியுங் கொண்டு விளங்கும், நந்தீஸ்வரரையும், மருத்துவின் மகளும் பதிவிரதையும் பார்வதிதேவியின் பாதங்களை அலங்கரிப்பதிலேயே விருப்பமுடையவளும் ஆகிய அவர் மனைவி சுயசையையும் வட திசையிலே பூஜித்து, இவ்வகையாகத் துவார பூஜையை முடித்துப் பூஜாகிரகத்தினுள் பிரவேசித்து, மஹாலிங்கத்தை விதிப்படிப் பூஜித்து நிர்மாலியத்தை விலக்கி புனிதமான ஒரு மலரைச் சிவபிரானின் சிரமிசை அணிந்து, மலர்களைக் கரத்திற்கொண்டு, தான் பரிசுத்தமாகும் சக்திக்கேற்பப் பஞ்சாக்ஷர மந்திர ஜபம் செய்ய வேண்டும். பிறகு ஈசான திசையில் சண்டீசனை ஆராதித்து, நிர்மாலியத்தை அவருக்கு ஒப்புவிக்கவேண்டும். பிறகு, உமாமகேஸ்வரருக்கு ஆசனங் கற்பிக்க வேண்டும். பிறகு, நாற்புறமும் கடல் சூழ்ந்த பூமிக்குக் கீழ்த்திசையிலிருக்கும் மங்களகரமான ஆதாரசக்தியைத் தியானித்து அதன்மீது குண்டலாகாரமாகவும், வெண்ணிறமாகவும் ஐந்து பணாமுடிகள் கொண்டு விளங்கும் அநந்தனையும், அதற்கு மேல் தர்மம், ஞானம், வைராக்கியம், ஐஸ்வரியம் என்னும் நான்கையும் நான்கு கால்களாகவுடைய சிங்கமாக பொருத்தி நால்வகை நிறமுடையதாய், இடையிடையே அதர்மம் (கிழக்கு) அஞ்ஞானம் (தெற்கு) அவைராக்கியம் (மேற்கு) அனைஸ்வரியம் (வடக்கு) நான்கு உபகால்களாக இராஜாவர்த்தமணி நிறமாகவும் கொண்டுள்ளதாகவும் அணிமா முதலிய எட்டுத் தளங்களையுடைய வெண் தாமரை மலர் போன்ற சிங்காசனத்தைப் பாவித்துப் பூஜிக்க வேண்டும். அதன்பிறகு, அதச்சதனம், ஊர்த்தசதனம் இவற்றை பூஜித்து அந்தப் பதுமதளம் எட்டிலும் அஷ்ட சித்திகளையும் உபதளங்கள் எட்டிலும் அவற்றுள் வாமதேவன், ஜேஷ்டன், உருத்திரன், காலன், கலவிகரணன், பலவிகரணன், பலப்பிரமதனன், சர்வ பூதகமனன் என்ற அஷ்டருத்திரர்களும் வாமை ஜேஷ்டை, ரவுத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி என்ற அஷ்ட சக்திகளுடன் கூடியிருப்பதாக தியானித்து மலர்களால் அர்ச்சித்து, அந்தப் பதுமத்தின் கிழங்கைச் சிவதர்மமாகவும் நாளத்தை சிவஞானமாகவும் அதன் பொகுட்டை வைராக்கியமாகவும் தியானித்தும் பூஜிக்க வேண்டும்.
அந்தப் பொகுட்டின் மீது சூரிய சோமாக்கினி மண்டலங்களைத் தியானித்து, மூன்று தத்துவங்களையும் தியானித்து, அதன்மேல் வித்யாமயமான ஆசனத்தை மிகவும் அன்போடு மலர்கொண்டு அர்ச்சனை செய்து அதன்மேல் உமாமகேஸ்வரரை ஆவாஹனம், ஸ்தாபனம், சப்நிரோதம் நிரீக்ஷணம் நமஸ்காரம் முதலியன செய்து வெவ்வேறான முத்திரைகளைக் காட்டி, பாத்தியம், ஆசமனம், அர்க்கியம், கந்தம், புஷ்பம், தூபம், தீபம், தாம்பூலம் முதலியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது பஞ்சகவ்வியம், தேன், வாழை, மா, பலா, முதலிய பழங்கள், எள், யவை, கடுகு, உளுந்து இவற்றால் அபிஷேகித்து, வெந்நீர், கஸ்தூரிமஞ்சள், நெல்லிக்காய், நீர், சந்தனம், பொன், இரத்தினம் இவற்றைக் கூட்டிய ஜலத்தை சங்கு, கலசம் முதலியவற்றால் அபிஷேகிக்க வேண்டும். சக்தியில்லாவிட்டால் தக்கபடியாவது பவமான சூக்தம், சூத்ரம், நீலருத்ரம், த்வரிருக்ரம், லிங்கசூக்தம் முதலான சூக்தங்கள் அதர்வசிரசு, ருக்கு, யஜுர், சாமபஞ்சு பிரமம் முதலிய வேதமந்திரங்களாலும் பிரணவ மந்திரத்தாலும் அல்லது பஞ்சாக்ஷர மந்திரத்தாலாவது, அபிஷேகம் செய்யவேண்டும். சிவபெருமானைப் போலவே பார்வதி தேவிக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும். இது சிவாக்ஞையைச் செய்ய வேண்டும். அர்த்த நாரீசுவரமூர்த்தம் பூஜிக்கப்படுவதானால் முதலில் சிவ பாகத்துக்கும் பிறகு, தேவி பாகத்துக்குமான முறையே பூஜை செய்யவேண்டும். அபிஷேகம் முடிந்த பிறகு, புனிதமான வஸ்திரத்தால் துடைத்துப் பட்டு வஸ்திரம் உபவீதமும் அணிந்து, பாத்தியம் ஆசமனம், அர்க்கியம், கந்தம், புஷ்பம், அலங்காரம், தூபம், தீபம், நைவேத்தியம், பானீயம், தாம்பூலம் முகவாசம், குடை, சாமரை, ஆலவட்டம், கண்ணாடி ஆகியவற்றைச் சமர்ப்பித்துச் சகலவாத்திய கோஷங்களுடன் கர்ப்பூர நீராஞ்சனம் சமர்ப்பித்து, சுவையுடைய பால்சோறும் தாம்பூலமும் நிவேதனம் செய்து முகவாசங் கொடுத்து, சாமரை, கண்ணாடி, ஆலவட்டம் முதலியன காண்பித்து மீண்டும் அர்க்கியம் கொடுத்து திருவெண்ணீறு அணிந்து புஷ்பாஞ்சலி சமர்ப்பித்து சிவபெருமானையும் உமாதேவியையும் மும்முறை பிரதக்ஷிணம் செய்து துதித்து, என்புகள் உருகும்படி சாஷ்டாங்கமாகப் பணிந்து எம்பெருமானுக்கு தன் உயிரையே நிவேதனமாகக் கொடுத்து, மீண்டும் அர்க்கியமளித்து புஷ்பாஞ்சலி சமர்ப்பித்து, சமானாதிகரஹிதனே! அடியேன் செய்த பிழைகளை மன்னித்து அருளவேண்டும் என்று க்ஷமாபணம் செய்து, தன்னுடைய ஆன்மாவில் சிவபெருமானை ஆவாஹனம் செய்து, எப்போதும் தியானம் செய்யவேண்டும்.
ஒருவன் தன் உடல் வாழும் வரையில், சிவபூஜையை எவ்வகையான அசந்தர்ப்பங்கள் வந்த காலத்திலும் தினந்தோறும் முறைப்படி செய்தே முடிக்கவேண்டும். அவ்வாறு செய்யாமல் அன்னபானாதிகளில் விருப்பம் உடையவனாய் ஆகாரம் செய்யக்கூடாது. அப்படிச் செய்வானாகில், அவற்றைச் சுத்தி செய்து, புனிதமான ஜலத்தில் ஸ்நானம் செய்து, அன்று செய்ய தவறிய பூஜைக்கு அபராதமாக இருமுறை சிவபெருமானையும் பார்வதி தேவியையும் தன் நியமத்தைவிடச் சிறப்பாக பூஜித்து, தன் பசியையும் நாவில் உருசியறிதலையும் வெறுத்து அன்று முழுவதும் உபவாசம் இருந்து பஞ்சாக்ஷர மஹாமந்திரத்தை பதினாயிரம் முறை ஜெபிக்க வேண்டும். மற்றைய தினத்தில் சர்வலோகங்களுக்கும் காரணபூதராகிய சங்கர பகவானுக்கு விசேஷமாக பூஜை செய்து, சிவாலயத்திற்கும் சிவனடியார்களுக்கும் வேண்டிய பொருட்களைத் தானம் செய்து பூஜை செய்யாமற் புசித்த பாவத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். விவரமாகச் சொன்னால் எல்லையில்லாமற் போகும் என்று சிவபூஜாவிதியை உமக்குச் சுருக்கமாகச் சொன்னேன். இன்னும் சொல்கிறேன். தூபதீபங்களைக் கொடுத்துப் பாற்சோற்றை நிவேதனம் செய்வதற்கு முன்னதாக ஆவரண பூஜை செய்யத் தக்கது. கிருஷ்ணா! அதையும் கேட்பாயாக.
கிருஷ்ணா! முதல் ஆவரணத்தில், பஞ்சப் பிரமத்தையும் நான்கு திசைகளையும் ஷடங்கங்களையும் கிரமப்படி அன்புடன் பூஜை செய்து, திக்குபாலகர்களையும் பூஜித்துப் பிறகு, நிருதி திக்கிலே விஷ்ணுமூர்த்தியையும் ஈசான திசையிலே பிரமதேவனையும் பூஜித்து, ஆவரணத்தின் புறத்தில் இந்திரதிக்கு முதலாக ஈசானதிக்கு இறுதியாக திசைகள் எட்டிலும் முறையே வஜ்ஜிரம், கத்தி, தண்டம், கட்கம், பாசம், அங்குசம், கதை, சூலம் என்னும் திக்குப்பாலகர் ஆயுதம் எட்டையும் சக்கரம், பதுமம் என்ற விஷ்ணு பிரமர்களின் படைகள் இரண்டையும் மேலே குறித்த அவ்விரு தேவர் நிலைப்புறத்தும் பூஜிக்க வேண்டும். இவ்வாறு பூஜிக்கும்போது அந்த ஆவரணத்தில் உள்ள தேவர்கள் யாவரும் சிவபெருமானைக் கைக்கூப்பி பணிவதாகப் பாவனை செய்து பூஜிக்க வேண்டும். பருப்பு, பால், தயிர், நெய், தேன், சர்க்கரை முதலியவற்றைச் சேர்த்துப் பாகம் செய்த அன்னமும் பழங்களும் பலகார வகைகளும் நிவேதித்து ஏலம் சந்தனம் மலர்கள் முதலியவற்றால் மணங்கமழும் நீரால் தன்வினை சம்பந்தம் ஒழியப் பானங் கொடுத்தும் வாசனையூட்டிய பச்சை கற்பூரம், குங்குமப்பூ இவற்றுடன் தாம்பூலம் கொடுத்து நறுமணங்கமழும் சந்தனக் கலவையை அளித்து பட்டு வஸ்திரமும், பொன்னாலும், இரத்தினத்தாலும் செய்த ஆபரணங்களும் உதவி, சந்தனம், கற்பூரம், அகில், குங்குலியம், பசு, நெய், கோஷ்டம் இவற்றைக் கூட்டிய தூபமும் மிக உயர்ந்த கபிலைப் பசுவின் நெய்யில் தோய்ந்த கர்ப்பூர தீபமும் கொடுக்க வேண்டும். சிவபூஜையில் பஞ்ச கவ்வியங்களும் தயிர் பாலும் கடற்கரை அருவியிலிருந்த ஜலமும் அபிஷேகத்திற்கு சிறப்பானவை. பொன்னாலும் இரத்தினத்தாலும் தந்தத்தாலும் செய்த பீடங்கள் உயர்ந்தவை தலையணையுடன் கூடிய பஞ்சசயனமும், முத்துக் கோவைகள் தொங்கவிட்ட இரத்தினக் குடையும் பொன்னாற் செய்த காம்பையுடைய தாமரையும் வெண்ணிறம் வாய்ந்த வலம்புரிச் சங்கமும் பருத்து நவமணிகளும் தாவள்யமான கண்ணாடியும் வெண்கலத்தால் ஆகிய மணியும் மிருதங்கம் முதலிய வாத்தியங்களும் தங்கப் பாத்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் ஆகிய இத்தகைய சிறந்த பொருள்களே சிவபெருமானுக்கு ஏற்றவையென சாஸ்திரங்கள் கூறும். சிற்ப லக்ஷண விதிமுறையாகச் செய்யப்பெற்ற பல கோபுரங்கள் வாய்ந்த திருக்கோயிலே எம்பெருமானை எழுந்தருளச் செய்யக்கூடிய ஸ்தானமுமாகும்.
சிவபெருமானை மண், மரம், செங்கல், கருங்கல், தந்தம் முதலியவற்றால் செய்த கோயில்களிலும் மலையுச்சியிலும், நந்தவனத்திலும் நதி தீரத்திலும், தன் வாசஸ்தலத்திலும் பூஜிக்கத்தகும். ஒருவன் வஞ்சனை முதலியவற்றால் பொருளைத் தேடாமல், தர்மமார்க்கத்தில் சம்பாதித்த திரவியத்தைக் கொண்டு, ஆசிரியன் தனக்கு உபதேசித்த முறையை நன்றாக உணர்ந்து அதன் வழியாற் பக்தி பூர்வமாகப் பூஜை செய்வானாகில் அவனுக்கு முக்தி கைகூடுமேயல்லாமல் இவ்வுலகில் எண்ணற்ற காலம் அருந்தவஞ் செய்தாலும் வேதங்களில் கூறிய வகையிலேயே கோடி யாகங்களைச் செய்தாலும் முக்தி கைகூடாது. சில மந்திரம் ஜெபித்தாலும் வேத சாஸ்திரங்களை ஆராய்தலும் தியானம், யாகம், ஹோமம், தவம், தானம், தருமம் முதலியவற்றைச் செய்தலும் பிறவியை ஒழிக்கத்தக்க சிவோகம் பாவனையுண்டாவதற்கு ஏதுவாகும். சாந்திராயண முதலிய விரதங்களைக் கடைப்பிடித்தாலும் சிவபக்தி இல்லாவிட்டால் பயனில்லை. சத்துவகுணமுடைய யோகியர்கள் மோட்சம் அளிக்கத்தக்க சத்துவ கர்மத்தையும், இரஜோகுணமுடையவர்கள் இஷ்ட சித்திகளைக் கொடுக்கத்தக்க இராஜஸ கர்மத்தையும் தமோகுணமுடைய அசுரர்களும், மனிதர்களும் இம்மையிலேயே தாம் விரும்பும் பயனைக் கொடுக்கும் தாமஸ கர்மத்தையும் செய்வார்கள். முக்குணத்தால் செய்யும் கர்மங்கள் சிவபெருமானைப் பக்தி செய்வதால் சத்கர்மங்களாம் தீமையே செய்யும் நீசர்களாயினும் சிவகடாக்ஷத்தாலே தேவர்களாவார்கள் என்றால், முப்புரங்களை எரித்து அருளிய சிவபெருமானுடைய திருவடியில் ஒவ்வொருவரும் பக்தி செய்யவேண்டியது கடமைப்பாடாகும். பிரமஹத்தி, பொற்களவு, கட்குடி, குரு பத்தினியைக் கூடல், குரு தாய் தந்தை மன்னன் முதலியோரைக் கொல்லல் என்ற இந்த பஞ்சமகா பாதகங்களைச் செய்தவர்களானாலும் பன்னிரண்டு ஆண்டுக்காலம் பக்தியுடன் சிவபூஜை செய்தால், பாவத்தை ஒழித்துப் புனிதர் ஆவார்கள். எண்ணற்ற பிறவிகளில் கிடைத்ததற்கு அரிய மனித உடலை அடைந்த பிறகும் விவேகத்தால் சிவபெருமானைப் பூஜிக்காதவர்கள் பிற்காலத்தில் யமன் பற்களைக் கடித்துக் கொண்டு கோபத்துடன் கொடிய நரகத்தில் தள்ள மயங்கி வருந்தி உயிர் துடிப்பார்கள்.
மனிதர்களுக்குச் சிரம், கரம் முதலியனவெல்லாம் நற்பணி செய்வதற்காகவே சிவபெருமானால் வழங்கப் பெற்றுள்ளன. ஆகையால் அவை ஒவ்வொன்றினையும் அப்பெருமான் விஷயமாகவே உபயோகிக்க வேண்டும் என்று அறிந்து, அவ்வாறு செய்பவனே விவேகியாவான். நமக்குச் சுகமானது எப்போதுமே வேண்டும் என்பவர்கள் யாவரும் தம் ஐம்புலன்கள் (பஞ்ச இந்திரியங்கள்) கெடுவதற்கு முன்பும், முதுமை வருவதற்கு முன்பும் உமாசமேதராகிய சங்கர பகவானை அன்புடன் பூஜித்துப் பணிந்து அவனுடைய திருவருளைப் பெறவேண்டும். வேதங்களாலும் தேடிக் கண்டறிவதற்கரிய சிவபெருமானைப் பக்தியோடு பூஜித்தவர்கள் கடல் புடை சூழ்ந்த பூவுலகில் குளிர்ச்சி வாய்ந்த முத்தாற் செய்த சந்திரவட்டக் குடை நிழலில் இருந்து, அரசர்களாகப் பூமியைக் காத்து, உடலின் முடிவில் சிவபெருமானுடைய திருவடி நிழலை அடைவார்கள். சிவாலயத்திலேயே சிவபூஜை செய்யும்போது துவார பூஜையை முன்னதாகச் செய்து திரைச்சீலையைப் பின்னர் பூஜித்து, பரிவார தேவர்களுக்கு பலியிட்டு விழாச் செய்தல் முறையாகும். சிவபெருமானுக்கு நிவேதனம் செய்த பிறகு துதி செய்யத்தக்க பரிவாரங்களுக்கும் பலி கொடுத்து வாத்திய கோஷத்துடன் தேவர்களுக்கெல்லாம் பலி கொடுக்க வேண்டும். வடதிசையை நோக்கி பலிபீடத்தின் அருகே நின்று பலியைக் கொடுத்து சிவபெருமானுக்கு நிவேதித்த நிர்மாலியத்தை சண்டேசருக்குக் கொடுத்து, பிறகு அக்கினி காரியஞ் செய்து சிவமந்திரம் ஜபித்து, செந்தாமரை மலரிட்டு வைத்த பொன் அல்லது வெள்ளிக் கிண்ணத்தில் மிகவும் பராக்கிரமத்தையுடைய பாசுபதாஸ்திரத்தை வைத்துப் பூஜித்து வேறோர் வேதியன் சிரமிசையமர்த்தி திருவாயிலின் புறந்தெய்தித் திருக்கோயிலை மும்முறை வலம் வந்த பிறகு பலிபீடத்தையும் மும்முறை வலம் வந்து, அந்தணன் சிரத்தில் வைத்த பாத்திரத்தை எடுத்து சிவாலயத்தை அடைந்து, அவ்வஸ்திரத்தை விடுத்து, சிவ சன்னதியை அடைந்து சிவபெருமானுக்கு அஷ்ட புஷ்பங்கள் சமர்ப்பித்து சிவபூஜையை முடிக்கவேண்டும்.
21. சிவஹோமம்
கிருஷ்ணா! சிவஹோமம் செய்யும் வகையையும் சொல்கிறேன் கேட்பாயாக. குண்டலத்திலாவது பூமியிற் செய்த வேதிகையிலாவது இரும்பாற்செய்த பாத்திரத்தில் தீயைக் கொளுத்தி, அதை மந்திராத்திசெய்து சிவபெருமானை ஆவாஹனம் செய்து பூஜித்து பக்திபூர்வமாக சிவ ஹோமத்தைச் செய்யவேண்டும். இரண்டு முழ அகலமும் ஒருமுழ ஆழமும் கொண்ட குண்டத்தைச் சதுரமாகவாவது வட்டமாகவாவது சிவாகமவிதிப்படிச் செய்து, அந்தக் குண்டத்தின் மத்தியிலே இரண்டு விரல் கனமாவது நாலு விரற்கனமாவது அஷ்ட தளங்களையுடைய பதுமம் (தாமரை) ஒன்று இயற்றிச் செய்யவேண்டிய மூன்று மேகலைகளையன்றி இன்னும் இரண்டு மேகலைகளையுஞ் செய்யவேண்டும். யானையின் துதிக்கையை போலச் செய்யாது அரசிலை வட்டம்போல யோனியைச் செய்து குண்டத்தின் உள்ளே யரைகள் கிழித்து புனிதமான கலச நீரைச் சொரிந்து, தர்ப்பையிட்டு பாத்திரங்கள் யாவற்றையும் புனிதமான நீரால் அலம்பி விடவேண்டும். சூரியகாந்தக் கல்லாகிய அக்கினியையாவது அரணியிற் பிறந்த அக்கினியையாவது வேதியர் வீட்டில் ஜனித்த அக்கினியையாவது புனிதமான அகலில் தாங்கிவந்து, நியமித்துள்ள ஓமகுண்டத்தை மும்முறை வலம்வந்து, அவ்வக்கினியைக் குண்டத்திற் பெய்து, தன் மனதிற்பொருந்திய அக்கினியையும் எடுத்து குண்டத்திலிட்ட அக்கினியோடு சேர்க்கவேண்டும். மேலே சொன்ன அக்கினி மூன்றில் சூரிய காந்தக் கல்லில் தோன்றியது உத்தமம் என்றும் அரணியிலிருந்து தோன்றியது மத்திமம் என்றும், அந்தணர் வீட்டிற் பிறந்தது இடை என்றும் கொள்ளவேண்டும். அத்தகைய அக்கினியில் சிவபெருமானை மூலமந்திரத்தால் அருச்சித்து தன் வலப்பக்கத்தில் நெய்வார்த்து வைத்திருக்கும் பாத்திரத்தை அமர்த்தி மந்திரம் ஓதித் தேனு முத்திரையைக் காண்பித்து, பொன், வெள்ளி, இரும்பு, செம்பு, ஈயம் முதலியவற்றாலாவது யாகத்துக்கு உரிய மாவிலை, பலாசு இலையிலாவது அழகுறச் செய்த சுருக்கு சுருவங்களைக் கைக்கொண்டு தீயிற் காய்ச்சிய தர்ப்பையால் துடைத்து நீரைப்புரோக்ஷித்துச் சிவாக்கினியைச் சூழநீரொழுக்கி சிவநாமங்கள் எட்டையும் உச்சரித்து, நீயே உண்பவன் என்று ஆகுதி சொரிந்து, அக்கினிதேவனுக்கு அவிசுகொடுக்க வேண்டும். மீண்டும் அக்கினி நடுவில் ஆகுதி செய்து நீரைச் சூழச் சொரியவேண்டும். அப்படிச்செய்தால் அது சிவாக்கினியாகும். அந்தச் சிவாக்கினியிலே உமா சமேதராகிய சங்கரபகவான் எழுந்தருளியிருப்பதாகக் கருதிப் புஷ்பாஞ்சலி சமர்ப்பித்து தூப தீபங்காட்டி, நீரைப் புரோக்ஷித்து ஒரு சாண் நீளமுடைய புலாசஞ்சமிதையையிட்டு பசு நெய்யைப் பெய்து அன்னத்தையும் எடுத்து பொரி, எள், யவை, கடுகு, பசுநெய் தோய்த்த நல்ல அப்பம் முதலியவற்றால் ஆகுதி செய்யவேண்டும்.
ஓமம் செய்யும்போது சுருவத்தாலே நெய்யையும் கையினாலே சமித்தையும், சுருக்கினாலே மற்றெல்லாவற்றையும் ஆகுதி செய்வது முறையாகும். மேலே சொன்னவையெல்லாம் அருமையாக இருந்தால், ஒன்றையே ஆகுதி செய்யலாம். பிறகு இந்த ஓமத்தில் சம்பவித்த குற்றங் குறைபாடுகள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்று க்ஷமாபணஞ் செய்து, நெய்யினால் மும்முறை ஆகுதி செய்து வாசந்தங்கிய மலரைச் சுருக்கில் வைத்து நெய் பெய்து அதைச் சுருவத்தால் மூடிக்கொண்டு, அந்த ஓமத்தில் பெய்ய வேண்டும். பிறகு நீரால் சுற்றி பிறைசூடிய பெம்மானான சிவபெருமானை விசர்ச்சனஞ் செய்துவிட்டு சிவாக்கினியைத் தன் நாபியில் புகுத்த வேண்டும், அல்லது அந்த அக்கினியைக் கொண்டுவந்து, சந்திரன் போன்ற நெற்றியையும் நீலோத்பலமலர்கள் போன்ற கண்களையும் உடைய வாகீஸ்வரி அதனை வயிற்றில் உட்கொண்டனள் என்று கருதி குண்டத்திலிட்டு யாக குண்டத்தின் நாற்புறத்து மேகலையிலும் சமித்துக்கள் பாய்த்து பாத்திரத்திலே நீர் பெய்து தூரமாகவைத்து வேறொரு பாத்திரத்தை வைத்து, அதில் நெய்யை நிரப்பிச் சுத்தி செய்து (பிறகு சுருக்கு சுருவங்களைச் சுத்தி செய்து, கர்ப்பாதானம் சீமந்தம் இவற்றுக்கு ஓமம் செய்து, அக்கினி பிறந்ததாகச் சிந்தனை செய்யவேண்டும்.) அவ்விதம் தோன்றிய அக்கினிக்கு மூன்று கால்களும் ஏழு கைகளும் சடைமுடியும் அதன்மேல் சந்திர தாரணம் ரக்தவஸ்திரமும், முஞ்சிப் புல்லாலாகிய உபவீதமும் வலக்கரங்களில் வேல், அக்கினி, சுருக்கு சுருவங்களும் இடக்கரங்களில் வல்லபம், ஆலவட்டம், நெய், பெய் வட்டிலும் பெற்று விளங்குவதாக மனதில் கருதி, விதிமுறைப்படி ஜாதக கருமம் செய்து பெருஞ் சிறப்புடைய சிவாக்கினியாக்கி, அதிலே மந்திரங்களைச் சொல்லி, ஆகுதி அளிக்கவேண்டும். அதன் பிறகு பேரழகுடைய வாகீஸ்வரியையும் அவளோடு உறையும் வாகீஸ்வரனையும் விசர்ச்சனம் செய்து சவுளம், உபநயனம், திருமணம், யாகம் முதலியவற்றையெல்லாம் முறைப்படிச் செய்து நீரால் சுற்றி, பிரமன், விஷ்ணு, ருத்திரன், ஈஸ்வரன், திக்குப் பாலகர்களின் ஆயுதங்களைத் தியானித்துப் பூஜித்து, சிவாக்கினியின் நடுவில் ஆசனம் ஒன்றைத் தியானித்து அதில் சிவபெருமானையும் உமாதேவியையும் ஆவாஹனம் செய்து வாசந்தங்கிய மலர்களால் அருச்சித்துப் பூர்ணாகுதி செய்யவேண்டும் அல்லது அவ்வவ்வாசிரமி தத்தமக்கு இயன்ற வகையிலுஞ் செய்யலாம்.
கபிலைப் பசுவின் சாணத்தைக் கீழே விழாமல் கையில் ஏந்தி யாகாக்கினியில் அல்லது சிவாக்கினியில் அல்லது அவுபாசன அக்கினியில் வேக வைத்து அது நீரான பிறகு எடுத்து, பொன், வெள்ளி, தாமிரம் இவற்றில் ஒன்றால் செய்த பாத்திரத்தில் வைத்துக் கொண்டு, புனிதனாக இருந்து அதனைத் திருநீறாக அணியவேண்டும். புனிதரல்லாதவர்களுக்குத் திருநீற்றைக் கொடுக்கக் கூடாது. தன்னிடத்திலுள்ள திருநீற்றை பொருளைப் போலப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். நெடுந்தூரஞ் சென்ற காலத்திலும் திருநீற்றை உடன் கொண்டு செல்வது தகுதி. சிவஹோமஞ் செய்து முடிந்த பிறகு பலியிட்டு பிறகு சிவசாஸ்திரத்தைப் பூஜித்து, மண்டலம் எழுதி குருவை மனதில் பாவனை செய்து பூஜித்து, பெரியோர்களையும் அதிதிகளையும் பூஜித்து சிவபெருமானுக்கு நிவேதித்த அன்னத்தில் சண்டீசனுக்கு நிவேதனம் செய்யாத உணவை உட்கொண்டு பாவத்தை அகற்றவேண்டும் என்று சிவாகமங்கள் முறையிடுகின்றன. அவ்வாறு புசித்த பிறகு கைகளைச் சுத்தி செய்து ஆசமனம் முடித்து பெரியோருடன் அளவளாவிச் சைவநூல்களைப் பாராயணஞ் செய்து, சூரியன் மேற்கடலில், சங்கமமான பிறகு, சிவபெருமானையும் உமாபிராட்டியையும், மீண்டும் பூஜித்து அவ்விருவருக்கும் புஷ்பசயனம் அளித்து அவர்களது பாததாமரையிலே ஐம்புலன்களை ஒடுக்கித் துயில் புரியக்கடவன். அவ்வாறு துறவியன்று இல்வாழ்வோனாயின் தன் மனைவியுடன் துயில் புரியக் கடவன். அவ்வாறு துயின்றவன் சூரிய உதயத்திற்குமுன்பே, எழுந்து சிவபெருமானையும் உமாதேவியாரையும் மனதில் தியானித்துக் கொண்டு புறத்தேசென்று காலைக் கடன் கழித்து நீராடி, சங்கம், தாளம், மத்தளம் முதலிய வாத்தியங்கள் ஒலிக்கச் சிவபெருமானையும் உமாபிராட்டியாரையும் பணிந்து துதி செய்து, பள்ளியெழுப்பிப் பூஜிக்க வேண்டும். இவ்வாறே சிவஹோமம் தினந்தோறும் செய்யத்தக்கது என்றறியக் கடவாய்.
22. மாத பூஜை விதி முறைகள்
கிருஷ்ணா! இத்தகையினர் செய்யத்தக்க கருமங்கள் இன்னும் சிலவுள்ளன. அவற்றையும் எடுத்துச் சொல்லுகிறேன்.
மாதந்தோறும் வருகின்ற அஷ்டமா சதுர்த்தி, அமாவாசை, பூரணை உத்தராயண தக்ஷிணாயனங்கள், சூரிய சந்திர கிரகண காலங்கள், சித்திரை, ஐப்பசி, சேர்காலங்கள் ஆகிய இந்தக் காலங்களில் சர்வேசுவரனாகிய சிவபெருமானுக்கு அன்புடன் பிரம்ம கர்ச்சத்தால் அபிஷேகித்து, பூஜித்து பிறகே புசிக்க வேண்டும். தை மாதத்தில் வரும் பூசநக்ஷத்திரத்தில் நீராஜனமும், மாசிமாதத்தில் வரும் மக நக்ஷத்திரத்தில் கிருதகம்பளமும், பங்குனி மாதத்தில் வரும் உத்திர நக்ஷத்திரத்தில் திருவிழாவும், சித்திரை மாதத்தில் வரும் சித்திரை நக்ஷத்திரத்திலே திருவூஞ்சலும், வைகாசி மாதத்தில் வரும் விசாக நக்ஷத்திரத்தில் மலர்ப்பந்தலும், ஆனி மாதத்தில் வரும் மூல நக்ஷத்திரத்தில் சீதகும்பமும், ஆடி மாதத்தில் வரும் உத்திராட நக்ஷத்திரத்திலே பவித்ரோத்சவமும், ஆவணி மாத அவிட்ட நக்ஷத்திரத்திலே மண்டப பூஜையும், புரட்டாசி மாதத்தில் வரும் பூராட நக்ஷத்திரத்திலே தெப்ப உற்சவமும், ஐப்பசி மாதத்தில் வரும் அஸ்வனி நக்ஷத்திரத்தில் புதிய பாற்சாத நிவேதனமும், கார்த்திகை மாதத்திலே வரும் கார்த்திகை நக்ஷத்திரத்திலே எண்ணிறந்த தீபங்களும், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நக்ஷத்திரத்திலே பசு நெய் முதலியவற்றால் விசேஷமாகத் திருமஞ்சனமும் சிவப்ரீதியாகச் செய்யவேண்டும்.
கிருஷ்ணா! மேற்கூறிய வகையில் சிவ தருமங்களைச் செய்து கொண்டிருப்பவர்கள் தாம் பெற்றுள்ள ஒரே பிறவியில் பிறவித் துன்பத்தை ஒழித்து, மோக்ஷவீட்டை அடைவார்கள். இங்கு சொன்ன வகையில் முக்காற்பங்கு செய்தவர்கள் சீகண்டன் உலகத்தை அடைந்து நூறுகோடி கற்பகாலம் வாழ்ந்து மீண்டும் உமாதேவியார் உலகத்திலும் முருகக் கடவுள் உலகத்திலும் உத்திரனுலகத்திலும், விஷ்ணு லோகத்திலும் பிரமலோகத்திலும் முறையே வசித்து, மீண்டும் சீகண்டனுலகை அடைந்து அழியாத சிவபதத்தைச் சேர்வார்கள். மேலே சொன்ன வகையில் அரைப் பங்கைச் செய்தவர்கள் இந்த உலகங்களில் எல்லாம் வசித்து, இருமுறை பூமியிற் பிறந்து ஞானவான்களாய் சிவபெருமானுடைய திருவடித்தாமரையைச் சேர்வார்கள். மேற்கூறியவற்றில் கால்பங்கைச் செய்தவர்கள் பிரமாண்டத்தில் உள்ளும் புறமும் உள்ள உலகங்களில் புரூடபதத்திலே உருத்திர பதவியை அடைந்து வாழ்ந்து பூலோகத்திலே யாவரும் துதி செய்யத்தக்க குலத்திலே பிறந்து, ஞானிகளாய் சிவ தர்மத்தை இயற்றி உருத்திர பதவியை அடைந்து, வித்தியேஸ்வரர்களாய் அண்டத்தின் அகத்தும் புறத்தும் சிலகாலம் பொருந்திச் சிவஞானம் பெற்று சிவபெருமானுடைய திருவடி நிழலை அடைவார்கள். விஷயவாதனையிற் படாமல் எக்காலத்திலும் சிவபக்தியை யுடையவர்கள் சிவ தருமத்தை செய்தாலும் செய்யாவிட்டாலும் உமாசமேதராகிய சிவபெருமானுடைய திருவடியைச் சேர்வது சத்தியம். உண்மையாகவே நன்மையை விரும்பியவர்கள் சிவதர்மங்களைச் செய்யவேண்டும் என்றார் உபமன்யு முனிவர்.
23. காமிய கன்ம பயன் உரைத்தல்!
கிருஷ்ண பகவான், உபமன்யு முனிவரை நோக்கி, மகாத்மாவே! குற்றமற்ற காமிய கருமங்களும் அவற்றின் பயன்களும் இவை எனக்கு கூறியருள வேண்டும் என்று கேட்க தவச் செல்வராகிய உபமன்யு முனிவர் சொல்லத் துவங்குகிறார்.
கிருஷ்ணா! காமிய கர்மங்களில் சில பூமியிலேயே பயனைக் கொடுக்கும். சில கர்மங்கள் தேவலோகத்தில் தான் பயன் கொடுக்கும். சில கர்மங்கள் பூமியிலேயும் சுவர்க்கத்திலேயும் பயன்தரும். காமிய கர்மங்கள் ஐந்து வகைப்படும். அவற்றுள் ஒன்று கிரியா மயமும் ஒன்று, தன் மயமும் ஒன்று, ஜபமயமும் ஒன்று, தியானமயமும் ஒன்று மேற்சொன்ன நான்கின் மயமுமாகும். கடைசியில் கூறிய நான்கின் மயமுமாகிய இம்மைப்பயனையும் மறுமைப்பயனையும் கொடுக்கக்கூடிய அதை விரிவாகச் சொல்லுகிறேன். அது சைவர்களாலும் மகேஸ்வரர்களாலும் அந்தர்முகத்திலும் பஹிர் முகத்திலும் செய்வதாகும். சைவர்கள் மானசீகமாகப் பூஜிப்பார்கள். மகேஸ்வரர்கள் புறத்திலே பூஜை செய்வார்கள். அஃது எப்படி என்றால் பூமியைக் சாணங்கொண்டு மெழுகி, அழகிய மலர்கள் பட்டு முதலியவற்றால் மேல் விதானம் கட்டி, இரத்தினப் பொடிகளால் கமலம் போலச் சித்தரித்து அதன் எட்டுத் தளங்களில் முறையே அஷ்ட சித்திகளையும் அகவிதழ்கள் எட்டில் வாமை முதலிய சக்திகளுடன் கூடிய வாம தேவாதி அஷ்டருத்திரர்களையும் கிழக்கு முதல் வடகிழக்கு ஈறாகிய எட்டுத்திக்குகளிலும் முறையே பூஜித்து, அந்தத் தாமரைப் பொகுட்டில் வைராக்கியத்தையும் விதைகளில் வேல் போன்ற விழிகளையுடைய நவசக்திகளையும் கிழக்கில் சிவகர்மத்தையும் நாளத்தில் சிவஞானத்தையும் தியானித்துப் பூஜை செய்து, சூரிய சந்திர அக்கினி என்னும் பிரகாசம் பொருந்திய மூன்று மண்டலங்களையும் சிவதத்துவம் வித்தியாதத்துவம் ஆன்மதத்துவம் என்பவற்றையும் பொகுட்டின்மேலாகக் கருதிப் புண்ணியமணம் அமைந்த மலர்களால் அருச்சனை செய்து நன்றாகப் பக்தி பூர்வமாகப் பூஜித்து பரமகாசத்திலே வித்தியா மயமான ஆசனத்தை விதிப்படி பூஜிக்கவேண்டும்.
அந்த ஆசனத்திலே சுத்த ஸ்படிக நிறமும் திவ்விய தேஜஸும் பெற்று, பிரகாசிக்கின்ற மின்னலைப் போல விளங்கும் சடைமுடியும், புலித்தோல் உடையும், சிங்கத்தோல் போர்வையும், புன்சிரிப்பும், செந்தாமரை மலர் போன்ற திருவடியும், திருக்கரமுங்கொண்டு நானாவித இரத்தின ஆபரணங்களும் சர்ப்ப ஆபரணங்களும் அணிந்து வாசம் ஊட்டிய சந்தனக் குழம்பணிந்து, சந்திரனைச் சிரோமாலையாகச் சூடி, ஐந்து திருமுகங்கள் கொண்டு அவற்றில் சூரியனைப் போலப் பிரகாசிக்கும் கீழ்முகமும் கடலைப்பருகி எழுந்த காளமேகம் போன்று வக்கிரதந்தம் வாய்ந்த தென் முகமும் பூரணச் சந்திரன் போல விளங்கும் மேல் முகமும், கடலிற்தோன்றிய பவள நிறமாய் விளங்கும் வடமுகமும், ஸ்படிக நிறம் பொருந்திய உச்சிமுகமும், அம்முகங்கள் ஒவ்வொன்றிலும் முக்கண்களும் விளங்கவும். பத்துத் திருக்கரங்கள் கொண்டு, அவற்றுள் வலப்புறத்தில் சூலம், மழு, வஜ்ஜிரம், வாள், அக்கினி என்ற ஐந்தும் ஏற்ற வலக்கரங்கள் ஐந்தும் இடப்புறத்தில் பாம்பு, நாராசம், மணி, பாசம், அங்குசம் என்னும் ஐந்தும் மற்ற இடக்கரங்கள் ஐந்தும் விளங்கவும், முழங்கால்வரை நிவர்த்தித்தலையும் நாபி வரையில் பிரதிஷ்டா கலையும், கழுத்து வரையில் வித்தியா கலையும், நெற்றி வரையில் சாந்திகலையும், சிரம் வரையில் சாந்தியாதீதக் கலையுமாகவும், மூடி ஈசானமாகவும், முகம் தற்புருஷமாகவும், இதயம் அகோரமாகவும், குய்யம் வாமதேவமாகவும் திருவடிகள் சத்தியோஜாதமாகவும் விளங்கும். மூர்த்தியாக, முப்பத் கலைகளின் வடிவமாய், மாதிருகை உருவமாய், பஞ்சப் பிரம மயமாய், குடில மயமாய், பஞ்சாக்ஷர சொரூபமாய் சடாக்ஷர சொரூபமாய், ஷடங்க மயமாய், அனைவருக்கும் அடைவதற்கு அரிய பொருளாக மலர் மணம் நிறைந்த கூந்தலையும் வாள் போன்ற விழியையுமுடைய இச்சா சக்தியைத் தன் துடைமிசை இருத்தி வலதுபுறத்தில் ஞானசக்தியையும் இடதுபுறத்தில் கிரியாசக்தியையும் அமர்த்தி திரிதத்துவ ஸ்வரூபியாய் வித்தியாமயமாய் விளங்கும். சதாசிவப் பிரமம் எழுந்தருளி இருப்பதாக தியானித்து பராசக்தியோடு அப்பீடத்தில் ஆவாஹனம் செய்து வலது புறத்தில் விநாயகக் கடவுளையும், இடதுபுறத்தில் குமரக் கடவுளையும் பூஜித்து, மனதை ஐம்புலன்களின் வழியே விஷயவாதனையில் செல்லவிடாமல் ஒரே மனதாகப் பஞ்சப் பிரமங்களையும் பராசக்தியுடன் பூஜித்து, ஷடங்கங்களையும் பூஜித்து, வறுமை முதலிய சக்திகளுடன் கூடி விளங்கும் பரமதேவன் முதலிய அஷ்ட ருத்திரர்களையும் மலர்கள் தூவிப் பூஜிக்கவேண்டும்.
இரண்டாவது ஆவரணத்திலே அநந்தன், சூக்ஷ்மேசன், சிவோத்தமன், ஏகநேத்திரன், ஏகருத்திரன், திருமூர்த்தி, ஸ்ரீகண்டன், சீகண்டீசன் என்பவர்களைச் சக்திகளுடன் அஷ்டதளங்களிலும் முறையே பூஜை செய்யவேண்டும். மூன்றாவது ஆவரணத்திலே, பவன், சர்வன், ஈசானன், உருத்திரன், பசுபதி, உக்கிரன், வீமன், மஹாதேவன் இவர்களைச் சக்திகளுடன் எட்டுத்திக்குகளிலும் பூஜித்து, மாதேவன், சிவன், ருத்திரன், சங்கரன், நீலலோஹிதன் ஈசானன், விஜயன், வீமன், தேவதேவன், பவோற்பவன், கபாலீசன் என்பவரை சக்திகளுடன் பூஜைசெய்து, பிறகு இடபம் நந்தி, மஹாகாளன், சாத்தன், சப்தகன்னியர், விநாயகன், முருகன், சேட்டை, கவுரி ஜண்டன், ருஷபமுனி, பிங்கலன், பிருங்கீசன், வீரபத்திரன், வாணி, திருமகள், மோஹினி இவர்களையும் தான் செய்த பாவம் அகலப் பூஜித்து உருத்திரர்களையும் பிரமத கணங்களையும் பூத கணங்களையும் சக்தியுடன் பூஜைசெய்து, உமாதேவியின் சேடியரையும் பூஜிக்கவேண்டும். நான்காவது ஆவரணத்தில் சூரியனையும் பிரமதேவனையும் உருத்திரனையும் விஷ்ணுவையும் ஆவரணத்துடன் இந்தச் சரீரத்துயர் அகலப் பூஜை செய்யவேண்டும். ஐந்தாவது ஆவரணத்தில் சூலம் வஜ்ஜிரம் மழு, கணை, வாள், பாசம், அங்குசம் பிநாகவில் இவற்றைப் பூஜித்து, பகர், வடுகக் கடவுளையும் இடபதேவரையும், பூஜித்து, பகர், கேசரர், ரிஷிகள், சித்தர்கள், தைத்திரியர்கள், அரக்கர்கள், யக்ஷர்கள், அஷ்டமாநாகர்கள், இடாகினிகள், பூதங்கள், வேதாளங்கள், வயிரவர்கள், பாதாளவாசிகள் நதிகள் கடல்கள் மலைகள் நீர் நிலைகள் பசுக்கள் பறவைகள் தாவரங்கள் கிருமிகீடங்கள், மனிதர்கள் மிருகவளை பிரமாண்டத்தினர்களும் புறம்பேயுமுள்ள புவனங்கள் புவனபதிகள் அண்டங்கள் பத்துத்திசைகள் அவற்றிலுள்ள ருத்திரர்கள் முதலிய சித்தும் அசித்தும் ஆகிய யாவுஞ் சர்வேசனாகிய சிவபெருமானாகத் தியானித்துக் கைகுவித்து, எம்பெருமானே! எமது தேவ தேவனே! அருள்வாயாக! ஜய ஜய என்று துதித்துப் பொருந்துவனவாகத் தியானித்துப் பக்தி பூர்வமாக விதிப்படிப் பூஜித்து அத்தனே! அண்ணலே! அடியேன் பூஜையில் தவறிய குற்றங்களைப் பொறுத்தருள வேண்டும்! என்று பிரார்த்தனை செய்து, மீண்டும் பூஜிக்க வேண்டும்.
பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபித்து ஷட்ரஸோபேதமான உணவாதிகளைச் சிவபெருமானுக்கு நிவேதித்து தாம்பூலம் நீராஜனம் முதலியவற்றை அளித்து ஓமம் செய்து பூஜையை முடித்து சிவபெருமானைத் தோத்திரஞ் செய்து பஞ்சாக்ஷர ஜபம் செய்து வித்தியா பூஜை செய்த பிறகு குரு பூஜையும் பெரியோர் பூஜையையும் முடித்துச் சிவபெருமானை விசர்ச்சனம் செய்து பூஜையில் சேர்த்த பொருட்கள் எல்லாவற்றையும் சிவ பக்தர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். இத்தகைய பூஜையை மகேஸ்வரம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். கிருஷ்ணா சிந்தாமணியைப் போன்று எண்ணியவற்றையெல்லாம் கொடுக்கத்தக்க இந்தப் பூஜையை உயர் பொருளை விரும்பியே செய்து எந்தையே! அதனை அளிக்க வேண்டும் என்று கூறிச் செய்க இந்தப் பூஜையானது கைக்கூடத் தக்க தோத்திரம் ஒன்றும் இருக்கிறது. அதுதான் இந்த பூஜையைக் கைக்கூட்டி பயனளிக்க வல்லது. அது மாத உபவாசம் இருந்து துதி செய்த மாத்திரத்தில் விரும்பிய பயனை அளிக்கும் என்று உபமன்யு முனிவர் கூற, குவலயாபீடம் என்ற யானையைச் சங்கரித்த ஸ்ரீ கிருஷ்ணபகவான் அந்த ஸ்தோத்திரத்தைத் தனக்குக் கூறியருள வேண்டும் என்று வேண்ட உபமன்யு முனிவர் சொல்லத் துவங்கினார்.
24. ஸ்தோத்திரம்
எல்லாவுலகங்களுக்கும் தலைவனே! ஞான சொரூபியே! முதற்காரணனே! திரிகரணங்களுக்கும் எட்டாதவனே! உனக்கு வெற்றி உண்டாகுக! சமான ரஹிதனே எண்ணற்கரியவனே! முழுமங்கலஸ்வரூபியே! தாணுவே காரண ரஹிதனே! பரமானந்த ஸ்வரூபியே! ஆனந்த காரணனே! ஈஸ்வரனே! தலைவனே! திருவருள் ஸ்வரூபனே! உனக்கு ஜயமுண்டாகும். சர்வாண்டங்களிலும் வியாபித்து விளங்குபவனே யாவற்றுக்கும் மேலானவனே! உனக்கு மேலாக ஒன்றும் இல்லாதவனே! அழிவில்லாதவனே! உற்பத்தியில்லாதவனே மாயா அதீதனே! இந்தப் பூஜையை அடியேன் செய்ததனால் உண்டாகும் பயனை எளியேன் அடையும்படித் திருவருள் செய்ய வேண்டும்.
உலகங்கள் யாவற்றுக்கும் தாயாகியுள்ளவனே! உலக ஸ்வரூபியானவளே! பேரழகுடையவளே! மனதில் உண்டாகும் அஞ்ஞானத்தை ஒழிப்பவளே! எல்லாச் சமயங்களுக்கும் தலைவியே! குணஸ்வரூபியே! நிர்க்குண ஸ்வரூபியே ஞானிகள் இதயத்தில் எழுந்தருளியிருப்பவளே! ஜயஜய! சர்வலோகங்களுக்கும் தலைவனாகிய சிவபெருமானுடைய மனைவியாக விளங்குபவளே! தேவர் முதலிய யாவரும் துதி செய்யப்பெற்றவளே! உலகத்தைப் படைப்பவளே! மங்களங்களையெல்லாம் உண்டாக்குபவளே! உன்னுடைய திருவடியை எனது இதயத்தில் இருத்தி என் ஆவலால் துதித்து, என் சிரத்தால் பணிகிறேன். தேவீ! உன்னிடத்திலேயே சர்வாண்டங்களும் லயமடைவன. சூலாயுதம் ஏந்திய எந்தையாகிய சிவபெருமான் உன்னையன்றிப் பயன் அளித்தது இல்லை. ஆதலின் அண்ட கோடிகளிலுள்ள ஆன்மாக்கள் யாவும் உன்னுடைய திருவடிகளுக்கே பணி செய்யும். உன்னுடைய திருவருளை எனக்கு அருள் செய்ய வேண்டும். ஐந்து திருமுகங்களும், பத்துத் திருக்கரங்களும் ஸ்படிக நிறமும் உடைய அக்ஷர ரூபியும் பிரமரூபியும் காலரூபியும் ஆகிய சகல நிஷ்கள வடிவமைந்த சிவமாய், சாந்தியாதீதத்தில் அமர்ந்தருளிய சதாசிவமூர்த்தி நன்றாகத் திருவருள் புரிவார். ஆகையால் அப்பெருமானின் திருத்தொடையின் மேல் இச்சா சக்தி வடிவாகப் பொருந்தி யாவற்றுக்கும் தாயாகியுள்ளவளே! என்னைப் பாவங்கள் அணுகாதவாறு விலக்கி அழியாத உயர்பதவியைத் தந்தருள வேண்டும். ஜடா முடியையுடைய சங்கர பகவானும் பர்வதராஜபுத்திரியாகிய உமா பிராட்டியாரும் அன்புடையவர்களாய் திருவாய் மலர்ந்தருளும் சிவஞானம் ஆகிய இனிய அமுதத்தை யருந்தும் பிரமதேவனும் திருமாலும் பணிந்து துதி செய்ய விளங்கும். விநாயக் கடவுளும் முருகக் கடவுளும் எனக்குத் திருவருள் புரியவேண்டும்.
ஒளிவீசும் ஸ்படிக நிறமுற்று, அடியார்கள் செய்யும் துதியையே ஆபரணமாக ஏற்கும் சதாசிவ வடிவமாய் பாலசூரியன் போன்ற நிறம் அமைந்த பகவன் சிரோமூர்த்தியாகக் கூறப்பட்டு, சாந்தியாதீதபதமாய் விண்ணிடைப் பொருந்தி அளவிடுவதற்கு அரிய பஞ்சாக்ஷரங்களில் இறுதியிலுள்ள யகாராக்ஷரமாகிய ஐந்து கலைகளுடன் கூடி அறிவதற்கு அரியதாய் விளங்கும். ஈசானப் பிரம்ம உமாதேவியுடன் அடியேன் பூஜை செய்வதற்குத் திருவுளம் இரங்கி என் பாவங்களை அகற்றியருள வேண்டும். பாலசூரிய வடிவமாக விளங்கித் தன்னருள் புரியும் சிவபெருமானின் கீழ்முகமாகி சாந்தீபதமாக, ஆன்மாவாய் வாயுவில் வசிப்பதாய், பஞ்சாக்ஷரங்களில் நான்காவதாகிய வாகாராக்ஷரமாய் நான்கு கலைகளுடன் கூடியமர்வதுமாய் விளங்கும் தற்புருஷப் பிரம்ம நெடிய கண்களையுடைய உமாதேவியுடன் கூடி அடியேன் மலர்தூவி அர்ச்சித்த பூஜைக்கு மனமகிழ்ந்து, என் மனமயக்கத்தை அறவே ஒழித்து, மகிழ்ச்சியுடன் திருவருள் செய்யவேண்டும். அஞ்சனகிரி போன்ற ஆதாரம் உடையதாய் ஈஸ்வரனது தெற்கு முகமாகிக் கொடுமை வாய்ந்த அகோரமூர்த்தியாய் வித்தியாபதமாய் அக்கினியில் பொருந்தியதாய் பஞ்சாக்ஷரங்களில் மூன்றாவதாகிய சிகாராக்ஷரமாய் எட்டுத் தலைகளுடன் விளங்குவதாகவுள்ள அகோரப் பிரம்மம் எளியேனுடைய குற்றங்களை மன்னித்து உமாதேவியாருடன் என் பூஜையை ஏற்று மகிழ்ந்து, என் பாவங்களை ஒழித்துத் திருவருள் புரியவேண்டும். குங்கும நிறமுடையதாய் ஈஸ்வரனுடைய வடக்கு முகமாய்ப் பிரதிஷ்டாபதமுடையதாய், ஜலத்தில் விளங்குவதாய், பஞ்சாக்ஷரங்களில் இரண்டாவதாகிய மகாராக்ஷரமாய் பதின்மூன்று கலைகளுடன் கூடி விளங்கும் வாமதேவப் பிரமம் உமாதேவியுடன் பொருந்தி, அடியேன் புல்லறிவால் செய்த பூஜைக்கு மனங்களித்து என் பாபமாகிய கோடையைத் தணித்து அமுதமாரியைப் பொழிந்து என்னைக் கடைத்தேற்ற வேண்டும். தங்கம் போன்ற வண்ணமுடையதாய் சங்கு குண்டலங்கள் அணிந்த சிவபெருமானுடைய மேற்றிசை முகமாய் நிவர்த்திப்பதமுடையதாய் பூமியில் விளங்குவதாய், பஞ்சாக்ஷரங்களின் முதல் எழுத்தாகிய நகாராக்ஷரமாகிய எட்டுக் கலைகளுடன் விளங்கும் சத்தியோஜாதப் பிரமம் உமாதேவியுடன் பொருந்தி, நான் விதிமுறைப்படி செய்த அர்ச்சனைக்கு அக மகிழ்ந்து, என் வினைத் தொடர்பை ஒழித்துத் திருவருள் புரிந்து நல்ல பயனைக் கொடுக்க வேண்டும்.
சிவபெருமானும் உமாதேவியுமாகிய இருவரும் எனக்கு எப்போதும் நற்பயன்களையே வழங்குவார்களாக. குற்றம் இல்லாத வரத அபய கரங்கள் நற்பயன்களை நாள்தோறும் நல்குமாக அவ்விருவருடைய சிகைகள் யான் விரும்பியவற்றைத் தந்திடுமாக யாவராலும் துதி செய்யத்தக்க அவர்களுடைய கவசங்கள் குற்றமற்ற பயன்களை உதவட்டும். அவர்கள் திருவிழிகள் வேண்டிய பயன்களைக் கொடுக்குமாக. அவர்களுடைய ஆயுதங்கள் நற்பயனை அருளுக. வாமாதிதவாதி அஷ்ட ருத்திரர்களும் தத்தம் சக்தியருடன் சிறந்த பயனை வழங்குவாராக. அநந்தனது அஷ்ட வித்யேசுவரர்கள் சக்திகளோடு நற்பயன்களை அளிப்பாராக. பவன் முதலிய எண்மரும் மாதேவன் முதலிய பதினொருவரும் தத்தம் சக்திகளுடன் நற்பயனை அருளுக. இடபதேவன் தன் எண்ணற்ற பயனை ஈயட்டும் நந்தி, மகாகாளன், சாத்தன், சப்த கன்னியர் விநாயகன், முருகன் இவர்கள் உயர்ந்த பயன்களை உதவுக சேட்டை நற்பயன் தருக. கணாம்பிகை, சதி, மேனை, பார்வதி, உருத்திராணி முதலியோர் மிக்க பயன் தருக. சண்பன், இடபன், பிங்கலன், பிருங்கி, வீரன் இவர்கள் எனக்கு மிக்க வல்லமையைத் தருக. கலைமகள், திருமகள், மோகினி, துர்க்கை, உருத்திரர்கள், பிரமதகணங்கள், பூதங்கள், உமாதேவியின் தோழிகள் உருத்திர கன்னிகைகள் சூரியன் முதலிய இவர்கள் ஆவரணத்துடன் நற்பயனை விரைவில் அளிப்பார்களாக. பிரமதேவன், சூலப்படை தாங்கிய உருத்திரன், விஷ்ணு முதலியவர்கள் தம் ஆவரணத்துடன் அழியாப் பயன்களைக் தருவார்களாக. ஜனகர் முதலான முனிவர்கள் நால்வரும் தக்ஷன் முதலிய பதினோரு பிரமாக்களும் நற்பயன்களைக் கொடுப்பார்களாக. தர்மம், சங்கற்பம், வேதம், இதிகாசம், புராணம், சாஸ்திரங்கள், வித்தைகள், திசைகள், திக்குப் பாலகர்கள், சூலம் முதலிய ஆயுதங்கள் ஆகாயத்திலுள்ள கோமாதாக்கள் வடுகக் கடவுள் நான் விரும்பிய பயனைக் கொடுத்திடுக. அஷ்ட வயிரவர்கள் யோகியர்கள், நாரதன் முதலிய முனிவர்கள் சாத்தியர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அக்கினிக் கொழுந்து போன்ற சிகையுடைய பேய்களீறாகிய தேவ யோனிகள், அசுரர்கள், அரக்கர்கள், நாகங்கள், கருடர்கள், இவர்கள் நற்பயனளித்திடுக.
கடல்கள், தீவுகள், நதிகள், ஓடைகள், மலைகள், காடுகள், பசுக்கள், பறவைகள், மரங்கள், கிருமிகள், புவனங்கள், புவனபதிகள், அண்டங்கள், அண்டத்தலைவர்கள், பயனளிப்பாராக வர்ணங்கள் பதங்கள், மந்திரங்கள், தத்துவங்கள், தத்துவங்களில் விளங்கும் தலைவர்கள், பிரமாண்டத்தைக் காக்கும் உருத்திரர்கள் சிவவித்தை சிவ ஸ்தோத்திரம், சிவதர்மம், சிவபுராணம் என்பன எனக்கு மேம்பட்ட பயன்களைத் தரவேண்டும். சுவேதன் முதல் இலகுளீசன் ஈறாகவுள்ள குரவர்கள் அவர்களுடைய புதல்வர்கள் சைவர்கள் மஹேஸ்வரர்கள் வேதியர் முதலிய வருணத்தவர்கள், சாங்கியம் முதலிய சாஸ்திரத்தின் வழிப்பட்டவர்கள். இவர்கள் யாவருமே யான் நற்கருமஞ் செய்ய அருள் புரிவாராகுக. சவுரம் முதலிய மதங்களில் உள்ளவர்களும் உயர்ந்த சைவ சித்தாந்த மார்க்கத்தில் ஒழுகியவர்களும் பாசுபதத்தில் இருப்பவர்களும், காபாலிகத்தில் பொருந்தியவர்களும் அடியேன் நற்கர்மம் செய்யக் கிருபை செய்வார்களாக. உத்தரதக்ஷிண நெறிகளில் உள்ளவர்கள் ஞானத்தை அருள்வாராக. மோக்ஷலோகமும் ஈஸ்வரனும் இல்லை என்பவர்களும், செய்த நன்றி மறந்தவர்களும் பாஷாண்டிகளும் என்னைச் சேராமல் அகல்வார்களாக, தகுதியுடையவர்கள் அருள்வாராக நல்லோர் மங்கல வசனம் கூறுவார்களாக. உமாதேவியாரோடும் விநாயகக் கடவுளோடும் முருகக் கடவுளோடும் விளங்கும் சிவபெருமானே! திருவருள் புரிவாயாக! என்று மிகவும் துதித்து அன்புடன் சாஷ்டாங்கமாகப் பணிந்து எழுந்து துதி செய்து, பஞ்சாக்ஷரம் ஜபித்து, பிறகு உமாதேவியாருடைய மந்திரத்தையும் நன்றாக ஜபித்து, சிவபெருமானுடைய திருவடிக்குத் தன் பிராணனைச் சமர்ப்பித்து, அடியேன் தவறுற்ற குற்றங்களை மன்னித்து அருள் செய்யவேண்டும் என்று புஷ்பாஞ்சலி சமர்ப்பித்து க்ஷமாபணஞ் செய்து பூஜையை முடிக்க வேண்டும். செய்நன்றி கொன்றவர்கள் கோவதை செய்தவர்கள், மன்னவரைக் கொன்றவர்கள், அடைக்கலம் புகுந்தவர்களை வதைத்தவர்கள் முதலிய பெரும் பாவிகள் இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணஞ் செய்தாலும் கேட்டாலும் தங்கள் பாவத்தை ஒழித்துப் பரிசுத்தர்களாவார்கள். இந்தத் தோத்திரத்தைப் படிப்பவர்கள் பூஜை செய்யாவிட்டாலும் தாம் அடையும் பயனை அளவிட்டுச் சொல்லி முடியாது. இந்த ஸ்தோத்திரத்தை வாயால் கூறும் போது, சிவபெருமான் உமாதேவியோடும் பிரமதகண சமேதராய் ஆகாயத்திலிருந்து களிகூறுவாராகையால், இந்த ஸ்துதியை இடைவிடாமல் தியானஞ் செய்வது சிறந்ததாகும்.
25. அக்கினி கார்யம்
கிருஷ்ணா! நினைத்த வகையில் நினைத்த இஷ்ட சித்திகளைக் கைகூடச் செய்யும் பூஜை, ஹோமம், ஜெபம், தியானம், தவம் எனப்படும். இவற்றை உன் மீதுள்ள அன்பினாலே எடுத்துச் சொல்லுகிறேன் கேட்பாயாக, தனக்குச் சம்பவிக்கத்தக்க எத்தகைய இடையூறும் தன்னையடையாதவாறு தடுத்து மந்திரசித்தி பெற்று செய்யத் தக்க கருமங்களைச் செய்யத் தொடங்கிய நாள் முதல் இறுதி பெருமளவும் நன்றாக விளங்கிப் பிரமசரிய ஆஸ்ரமமுடையவனாக இருக்க வேண்டும். பகற்பொழுதில் ஒன்றும் புசியாமல் உபவாசமாக இருந்து, இரவு வந்தவுடன் மாலைக் கடன்களைக் கழித்து, அவியுணவாவது கனிகளாவது புசித்து, கொலை முதலிய பாவச்செயல்கள் புரியாதொழித்து, திருவெண்ணீற்றை உடல் முழுவதும் பூசி, பூமியைக் கோமயத்தால் மெழுகி, மலர்விதானங்கட்டி, பசும் பொன்னால் தாமரை (கமலம்) செய்து அதை மெழுகிய தரையில் இருத்தி, அந்தக் கமல தளம் எட்டிலும் அணிமாதி யஷ்ட சித்திகளையும் பூஜித்து, அகவிதழ்கள் சூழ மேலே எழுந்து பிரகாசிக்கும் பொகுட்டிலே ஸ்படிகத்தாலாயினும், பொன்னாலாயினும் இரத்தினத்தாலாயினும் சிவலிங்கம் ஒன்றமைத்து அதில் எழுந்தருளச் செய்து, நான்கு திருமுகங்களும் மழு, மான், அபயம் வரந்தாங்கி விளங்கும் நான்கு திருக்கரங்களும் கொண்டு எழுந்தருளியிருப்பதாக தியானஞ் செய்க; அல்லது வலப்புறக்கரங்கள் நான்கில் சூலம், மழு, வாள், வஜ்ஜிரமும், இடது புறக்கரங்கள் நான்கில் பாசம், அங்குசம் பரிசை, நாகமும் ஏந்தி எட்டுக்கரங்களுடன் விளங்குவதாகத் தியானம் செய்க. கீழ்முகம் முக்கண்களோடு சூரியன் போல விளங்கவும், தென்முகம் கருநெய்தல் போன்ற திருநேத்திரங்களுடன் விளங்கவும், மேல் முகம் பால் போன்று முக்கண்களோடு விளங்கவும், சந்திரனைச் சடையில் அணிந்து பொற்கொடி போன்ற உமாதேவியைத் தன் துடைமிசையமர்த்தி வசிக்கின்ற மகேஸ்வரனை இவ்வகையாகச் சிவலிங்கத்தில் எழுந்தருளியிருப்பதாகத் தியானஞ்செய்து கபிலைப் பசுவின் பஞ்சகவ்வியத்தால் மந்திரபூர்வமாக அபிஷேகஞ் செய்யவேண்டும். இரத்தின சூரணத்தால் அஷ்டதளகமலம் ஒன்றை எழுதி அதன், பொகுட்டில் ஈசான கலசத்தையும் அதைச் சூழ்ந்த கிழக்கு முதலிய நாற்புற இதழ்களில் சத்தியோஜாதம் முதலிய நான்கு கலசங்களையும் அமர்த்தி, எட்டுத்திசைகளில் அஷ்ட வித்தியேஸ்வரர் கலசங்களை அமர்த்தி பூஜித்து, நூல் சுற்றிக் குளிர்ந்த நீரைச் சொரிந்து, தருப்பையிட்டுப் பட்டு உடுத்தி, விளங்கும் கலசங்களையெல்லாம் எடுத்து முறைப்படி சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, சந்தனம் அணிந்து பல மலர்கள் சாத்தி, அகில் தூபமும் கர்ப்பூர தீபமும் கொடுத்து சர்க்கரை கூட்டிய பால்சோற்றை நிவேதித்து நீராஜனம் சமர்ப்பித்து, பச்சைக் கர்ப்பூரம் ஜலம் முதலியவை கூட்டிய தாம்பூலம் அளித்து, இரத்தினாபரணங்களும் பீதாம்பரமும் அணிந்து கீதங்களைப்பாடி, முழவு முதலிய வாத்தியங்களை முழக்கி, மங்கையர் நடனஞ்செய்ய இவ்வகையாகத் தினந்தோறும் பக்தி பூர்வமாக ஒரு முறையே யல்லாமல் இருமுறையாவது மும்முறையாவது பூஜை செய்யவேண்டும். அப்போது பஞ்சாக்ஷர மந்திரத்தை லட்சம் முறை ஜபித்தால் சிறப்புடையது என்று மேலோர்கள் சொல்லுவார்கள்.
செந்நிறமுடைய அக்கினி காரியஞ் செய்யும்போது, பகைவரைக் கொல்ல விரும்பினால் இரும்பு சருவத்தை பயன்படுத்தவும், சாந்தி கர்மங்கள் செய்யும்போது பொற்சருவை உபயோகிக்கவும். மரண பயத்தைப் போக்க வேண்டுமானால் அறுகுடன் அன்னமும் பாலும் நெய்யும் தேனும் தோய்த்து அக்கினியில் ஓமம் செய்யவேண்டும். பிணியைத் தவிர்க்க வேண்டுமானால் எள்ளினாலும் வறுமையை விலக்க வேண்டுமானால் நெய்யையும் பாலையும் தாமரை மலராலும் அக்கினியில் சொரியவேண்டும். வசியஞ்செய்யக் கருதினால் பிச்சிப்பூவினால் ஓமம் செய்க. எல்லோரையும் வணங்கச் செய்ய இச்சித்தால் அலரிப்பூவினால் ஆகுதி செய்க. சத்துருக்களை ஊர் கடக்க ஓட்ட வேண்டுமானால் எள் எண்ணெயாலும் அவர்களை அடக்க வேண்டுமாயின் தேனினாலும் இறக்கச் செய்ய வேண்டுமாயின் கடுகினாலும் உள்ளியினாலும், ஒருவரால் அடிபடச் செய்யவேண்டுமாயின் கழுதை, ஒட்டகம் இவற்றின் உதிரத்தாலும் அக்கினியாலே ஆகுதி கொடுக்க வேண்டும். அடியோடு வீழ்த்த வேண்டுமானால் உயிரொழிக்க வேண்டினாலும் எள்ளாலும் விஷவித்துக்களாலும், பகைவர்கள் கலகப்பட வேண்டின் தேங்காய் நெய்யாலும் தன்மேல் வந்து போர்புரியும் சைந்நியத்தை சேரவொட்டாமல் அடக்க வேண்டினால் கடுகாலும் பகைவர் மேல் ஆபிசாரஞ் செய்ய வேண்டில் செக்கிலிட்டாட்டாத எள் எண்ணெய் உமி, பருத்தி விதை, கடுகு, காரெள் இவற்றால் ஆகுதி செய்க. ஜ்வர பீடை ஒழியப் பாலினால் ஓமம் செய்க. பால், தயிர், நெய், தேன், யவை, அரிசி, சோறு முதலியவற்றால் நன்றாக ஓமம் செய்தால் சித்திகள் எல்லாம் உண்டாகும். வில்வத்தால் ஹோமம் செய்தால் சரத்தியும் வசியமும் நல்ல பொருட்களும் பகைவர்களைத் தோற்கச் செய்யும் வெற்றியும் உண்டாகும், என்று நூலாராய்வுடைய பெரியோர்கள் சொல்வார்கள். மன்னர்கள், சிவனடியர் மாதர் இவர்கள் பேரில் இந்த ஆபிசரத்தை செய்தவன் அற்பாயுசு உடையவனாக இறந்து, தீராத நரகத்தை அடைவான். மேலே பூஜித்தவற்றுக்குப் பொன் முதலியவற்றால் ஆன பொருட்களைத் தன் ஆசிரியனுக்காவது சிவாலயத்திற்காவது கொடுத்துவிட வேண்டும். விதிமுறையாக ஓமம் செய்தவர்களுக்குப் பகைவரால் துயரமும், மிருத்யுவால் பயமும், வறுமையால் இடுக்கண்களும் உண்டாகமாட்டா. அவர்கள் பெருஞ் செல்வர்களாவார்கள். அழகில்லாதவர்களாயினும் பேரழகடைவார்கள். விருத்தர்கள் வாலிபர்களாவார்கள். தமக்குப் பகைவராக உள்ளவர்கள் அடிமைகளாக அடங்குவார்கள். கலைமகளும் திருமகளும் ஒரு காலத்திலும் நீக்கமாட்டார்கள். அவர்கள் இசை வல்லவர்களாகவும் கூர்மையான புத்திசாலிகளாகவும் விளங்குவார்கள். விஷமும் அமுதமாகும். இனிவரப்போகிற சுகாசுகங்கள் யாவும் அவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாகப் புலப்படும் அஷ்டமா சித்திகளும் உண்டாகும். இதை மேலும் விரித்துச் சொல்லிப் பயன் என்ன? அவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் விரும்பிய வகையில் சிவகடாக்ஷத்தால் பெறுவது சத்தியம்.
26. சிவ விரதம்
உயர்வான மோட்ச லோகத்தில், இச்சித்த பயன்களையெல்லாம் கொடுக்கத்தக்க கருமமாகிய சிவ விரதத்தையுஞ் சொல்லுகிறேன். கேட்பாயாக என்று பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஏந்திய கிருஷ்ணமூர்த்தியை நோக்கி பரமேஸ்வரனைத் தியானித்து வேதசாஸ்திரத்தில் வன்மையுடைய உபமன்யு முனிவர் சொல்லத் துவங்கினார். இதற்குச் சமமானதும் மேம்பாடானதுமான ஒரு கருமமும் முக்காலங்களிலும் கிடையாது. செந்தாமரை மலர்மொட்டிலே எழுந்தருளியுள்ள நான்முகன் சுதர்சனம் என்னும் சக்கரத்தால் அசுரர் துயரகற்றி இமையவர் மானுடர் முதலிய யாவரையும் காக்கும் திருமால், முக்கண்களையுடைய ருத்திரன், இந்திராதி அஷ்டதிக்குப் பாலகர்கள் துதிசெய்யத் தக்க பிறதேவர்கள், சூரியன் முதலிய நவக்கிரகங்கள் வேதப் பொருளை ஆராய்ந்து ஜயந்திரிபறத் தெளிந்த வசிஷ்டர் முதலிய முனிவர்கள், நம்மை முதலாகவுடைய சிவபக்தர்கள், நந்தீசன் முதலிய சிவ கணநாதர்கள், பாதால லோகத்தில் வசிக்கும் அசுரர்கள், அக்கினியைச் சிந்தும் நாகங்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அரக்கர்கள், பூதர்கள், பேய்கள் முதலானவர்கள் இக்கருமத்தை இனிதாகச் செய்து தத்தமது உயர்பதவிகளைப் பொருந்தி மனக்களிப்புடன் வாழ்கிறார்கள். தேன்சொரியப் பெற்று இயற்கை மணங்கமழும் கூந்தலையுடைய உமாதேவியாரோடும் கூடிய சிவபெருமானைச் சிவலிங்கத்திலேயே தியானித்து, வெண்சந்தனக் குழம்பு முதலியவற்றால் அபிஷேகித்துத் தாவள்யமான புஷ்பங்களால் அர்ச்சனை செய்து, பொற்கொடி முதலியவற்றால் கமலமொன்று சித்தரித்து, அதன் பொகுட்டிலே சந்தனத்தாற் செய்த சிவலிங்கமூர்த்தியை எழுந்தருளச் செய்து, தென்திசையில் அகிற் சந்தனமும் மேற்கில் மனோநிலையும் வடதிசையில் சந்தனமும் கீழ்த்திசையில் அரிதாரமும் வைத்து, பட்டை அணிந்து தேன் சொரியும் மணமிக்க நல்ல மலர்களைச் சாத்தி, தூப தீபங்கொடுத்து, முனைமுறியாத அரிசியால் சுவை பொருந்தச் சமைத்த பாற்சோற்றை நிவேதனஞ்செய்து, வலம் வந்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரஞ் செய்து, வேதவாக்கியங்களால் துதித்து, அந்தப் பூஜைப் பொருட்களை ஆசிரியனுக்காவது சிவாலயத்திற்காவது கொடுத்துவிடவேண்டும். இத்தகைய வகையில் சிவ விரதமிருந்து பூஜித்தவர்கள் தம் கொடிய பாவங்கள் ஒழிய, உயர்ந்த சிவலோகத்தையடைந்து வாழ்வார்கள். சிவ விரதத்தின் தன்மையை உனக்கு எடுத்துச் சொன்னேன். இதை நீ எல்லோருக்கும் சொல்லக் கூடாது. இது சிவ பக்தர்களுக்கே சொல்லத் தக்கது. நாம் அடையவேண்டிய பயன்கள் யாவுஞ் சிவலிங்கப் பிரதிஷ்டை ஒன்றினாலேயே அடையலாகும்.
27. இலிங்கோற்பவம்
பிரமன், விஷ்ணு, ருத்திரன் முதலிய பெருந்தேவர்கள் யாவரும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து நற்பயனால், தத்தம் உயர் பதவியிலே நிலைபெற்று விளங்குகிறார்கள். சிவபெருமானும் ஒரு காலத்தில், கங்காநதி தீரத்தில் காசித் தலத்திலே, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து அதைப் பூஜித்து, யாவரும் அவ்வாறு செய்யவேண்டி அதன் மகிமையை உணர்த்தினார். இம்மை, மறுமை போகங்களை விரும்பியவர்கள் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யாதவர்கள் யாருமில்லை என்று உபமன்யு முனிவர் சொல்ல ஸ்ரீகிருஷ்ணபகவான் முனிவரை நோக்கி, இலிங்கம் என்பது என்ன? அவ்விலிங்கத்தில் சர்வேசுவரன் எப்படி பொருந்தியுள்ளான்? இலிங்க பூஜையை எவ்வாறு செய்யவேண்டும்? இவற்றையெல்லாம் சொல்ல வேண்டும்! என்று கேட்க, உபமன்யு முனிவர் சொல்லத் துவங்கினார்.
கிருஷ்ணா! அவ்யக்தம் என்றும் மூலப் பிரகிருதி என்றும் மாயை என்றும் பல பெயர்கள் புனைந்து சொல்லப்படும். அதிலிருந்து சுத்தம், அசுத்தம், சுத்தா சுத்தம் என்று சொல்லப்படும் உலகமானது தோன்றியது. சதாசிவன், மஹேஸ்வரன், உருத்திரன், விஷ்ணு, பிரமன் தோன்றினர். பூதங்கள், இந்திரியங்கள் ஆகிய யாவுமே அவ்யக்தத்தில் தான் தோன்றி யொடுங்கும். ஆகையால் சிவபெருமானே இலிங்கி, அவ்விறைவன் கட்டளையின்றி, அவ்வியக்தமானது உலகைச் சிருஷ்டிக்க மாட்டாது. உலகமானது அவ்யக்தத்திலே ஒடுங்குவதாலேயே அதை இலிங்கம் என்று சொல்வார்கள். இலிங்கம் என்பதற்குப் படைப்பு, காப்பு முதலியவற்றால் உலகத்தைச் சித்தரிப்பது என்று பொருள். இலிங்கத்தையே தலைவனாகவுடையவள் ஈஸ்வரியாவாள் சிவலிங்கத்தையும் சிவசக்தியையும் மலர்தூவிப் பணிந்தவர்கள் மனமகிழ்ந்தருள் செய்யப்படுவார்கள். இதையறிவதே ஞானமாகும். இத்தகைய ஞானிக்குச் சரீரமில்லையாம். இவற்றை நீ அறிந்துகொள்ளும் பொருட்டுச் சொன்னேன். சிவாக்கினையினாலேயே உலகங்கள் யாவும் நிலைபெறுவன. ஒரு காலத்தில் அவை சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பு சிவ மாயையினாலேயே மயங்கி ஏழு சமுத்திரங்களும் ஒன்றுபட்டுக் கோர்த்துக் கொண்டு பிரளயப் பெருக்காக இருந்தது. அந்தப் பெருக்கில் துயில்புரிந்து கொண்டிருந்த திருமாலைக்கண்ட பிரமதேவன் அவருடைய மார்பில் புடைத்து, எழுந்து, நீ யார்? என்று கேட்க, திருமால் கண் விழித்து என்னைத் துயில் உணர்த்திய நீ எனது புதல்வன்! நீ எங்கிருந்து வந்தாய் என்று கேட்டார். பிரமன் விஷ்ணுவை நோக்கி, உனக்கு இன்னும் நித்திரை தெளியவில்லை. தெளிந்திருந்தால் இவ்வாறு கேட்க மாட்டாய். குருவானவன் சீடனை நோக்கி பேசுவது போலிருக்கிறதே! இவ்வுலகத்தை நானே படைத்தேன். இவ்வுலகம் என்னைப் பணியத் திகழ்வேன். யானே முக்கூறாகிப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்கிறேன். என்னைவிட உலகிற்கு வேறு கடவுள் இல்லை என்று சொன்னார். அவரை விஷ்ணுவை நோக்கி நான் தான் முத்தொழிற் கடவுள். நீ என் மகன் என்று சொல்லப் பிரமன் கோபங்கொண்டு உற்றுப் பார்க்க, நாராயணனும் கோபித்தார். இருவரும் கோபத்தால் ஒருவரோடொருவர் போர் செய்தார்கள். அப்போது அந்தப் போரை ஒழிக்கவேண்டி, அவர்களுக்கு இடையே சிவபெருமான் அடிமுடி தெரியாத, அனல் பிழம்பாகச் சோதிலிங்கமானார். அதைக்கேண்ட இருவரும் இதன் அடி முடியைக் கண்டவரே தலைவர் என்று சொல்லித் தம்முள் தீர்மானித்துப் பிரமன் அன்னமாகவும் விஷ்ணு பன்றியுமாக சோதியின் முடியையும் அடியையும் தேடலாயினர். அவர்களில் பிரமன் அண்டமுகட்டைக் கிழித்துக்கொண்டு அநேக ஆயிரம் ஆண்டுகள் தேடியும் முடியைக் காணாமல் மனம் மயங்கிப்பூமியை அடைந்து யாது செய்வது என்று கருதியிருந்தார்.
கரிய வராகமாக வடிவம் எடுத்த நாரணன் பாதலம் ஏழுங்கடந்து அண்டப் பித்துகையின் அடியையும் உடைத்து அநேக ஆயிரம் ஆண்டுகள் தேடியும் அந்த லிங்கத்தின் அடியைக் காணாமல் பதைத்துத் திரும்பிப் பூவுலகத்தை அடைந்து பிரமனைப் போலவே சிந்தித்து நின்றார். அவ்வாறு நின்ற அவ்விருவரும் அந்த ஜோதியுருவை வலம் வந்து பணிந்து அதையறிய வேண்டும் என்று யோசிக்கும்போது பிரணவ ஒலி உண்டாயிற்று. அவர்கள் அதை இன்னதென்று உணரமாட்டாமல் வருந்தினார்கள். அப்போது அந்தப்பிரணவம் அகார, உகார, மகார நாதங்களாகப் பிரிந்தது. இலிங்கத்தின் வலதுபக்கத்தில் அகரமும், இடது பக்கத்தில் உகரமும் ஒளிமேல் நடுவே மகரமும், மேலை நாதமுமாக விளங்குவதைக் கண்டார்கள். அதைக் கண்டு, உண்மை இன்னதென்று விளங்காதவர்களாய் இருந்தார்கள். அப்போது அகரத்திலிருந்து முதலாவதாகிய ரிக்குவேதமும், உகரத்திலிருந்து இரண்டாவதாகிய யஜுர் வேதமும் மகரத்திலிருந்து மூன்றாவதாகிய சாமவேதமும், நாதத்திலிருந்து நான்காவதாகிய அதர்வணவேதமும் பிறந்தன. அவற்றில் ரிக்கு வேதமானது, இராஜகுணமும் பிரம சிருஷ்டியும் பூமியும் ஆன்மதத்துவமும் நிவரத்திகலையும் சத்தியோஜாதமும் இலிங்கத்தின் அடியும் பீஜமும் புத்தி ஐஸ்வரியமும் இவை என உணர்த்தியது. யஜுர்வேதமோ, சத்துவகுணம், விஷ்ணு, ஸ்திதி, ஆகாயம், வித்யா தத்துவம் பிரதிஷ்டா கலை, வாமதேவம், இலிங்க நடு, யோனிப் பகுதியையும் ஐஸ்வரியத்தையும் உணர்த்தியது. சாம வேதமோ, தமோகுணம் உருத்திரன், சங்காரம், அவர்க்கம், சிவதத்துவம், வித்தியாகலை, அகோரம், லிங்கமேற்பகுதி, புருஷம், ஐஸ்வரியம் இவற்றை உணர்த்தியது. அதர்வணவேதமோ நிர்க்குணம் மஹேஸ்வரன். சதாசிவன், ஈசானம், இலிங்கமுடி, பரமதத்துவம் என்பனவற்றையும் மகேஸ்வரனுக்குஞ் சதாசிவனுக்கும் நிரோதிஸ்வரனுக்கும் சிவ தத்துவத்திற்கும் மேலாகிய பரமகாயத்தில் பிரகாசிக்கும் அருமையாகிய பரம சிவ ஸ்வரூபத்தையும் விளக்கியது. சாக்கிரம் சொப்பனம், சுழுத்தி என்ற மூன்றையும் முதல் மூன்று வேதங்களும் அமிர்தபதமும், துரியாதீதமும் நாதமும் நாதாந்தமுமாகியவற்றை நான்காம் வேதமும் உணர்த்தின. உலகிலுள்ள பொருள்கள் யாவும் பிரணவத்தின் பொருளாகும். அந்தப் பிரணவத்தை உச்சரித்தே சிவபெருமான் சர்வலோகத்தையும் படைத்தார். சொல்லுமிடத்தில் பிரணவமே சிவபிரான். சிவபிரானே பிரணவம் வாக்கும் மனமும் வேதங்களும் அறிய முடியாத சிவபெருமானைப் பிரணவந்தான் தெளிவாக விளக்கும் அகர உகர மகரங்கள் முறையே பிரமவிஷ்ணு ருத்திரர்களைக் கூறின.
இம்மூவரும் முறையே சிவபெருமானுடைய வலது, இடது இதயம் என்ற இடங்களில் தோன்றினார்கள். இவர்களே முறையாகப் படைத்தல், காத்தல், அழித்தல், (சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம்) என்னும் முத்தொழில்களைச் செய்பவர்கள். இவர்களில் உருத்திரன் முதன்மையானவர். இவர்களுக்கெல்லாம் மேம்பட்டு விளங்குவதாலேயே சிவபெருமானைப் பரமகாரணனென்று சொல்வார்கள் என்று இவற்றையெல்லாம் நான்காம் வேதமானது, பிரமனே! விஷ்ணுவே உங்கள் விவாதத்தை முடிக்கச் சிவபெருமானே இந்தச் சோதி வடிவுடன் இங்கு எழுந்தருளினார் என்று அறியக் கடவீர்களாக என்றது. மற்ற வேதங்களும் அவ்வாறே கூறின. அவ்வேதங்களின் மொழியைக் கேட்ட பிறகும் உண்மையை உணராதிருக்கும்போது, பரமகாருண்யராகிய சிவபெருமான் அவர்களுக்குக் கிருபை புரிந்து தன் திருவுருவம் விளங்கும்படி காட்சியளித்தார். அதனால் அவர்கள் மாயை அகன்று சிறிது ஞானமடைந்தார்கள். அந்த லிங்கமூர்த்தியிலிருந்து உலகங்கள் உதித்ததையும் மீண்டும் ஒடுங்கியதையும் பிரம விஷ்ணுக்களாகிய தாம் தோன்றிய வகையையும் ஷடத்துவாக்களையும் மேலாகிய பதவியையும் மேலோர் துதி செய்யத்தக்க சிவபெருமானையும் உமைபிராட்டியாரையும் ஞானத்தால் அறிந்து தரிசித்தார்கள். அவ்விருவரும் தங்கள் கரங்களைச் சிரமிசை அமர்த்தி உளங்கனிந்து உடல் உருக நின்றார்கள். அப்போது பிரமன், எந்தையே தேவரீரே அடியேனைப் படைத்தவர்; அடியேன் அறிவற்றவன் போல, மாயாவசத்தினால் ஏதேதோ குழறினேன். தேவநாயகா! அவற்றை பொறுத்தருள வேண்டும்! என்றான். பின்னர் விஷ்ணுவும் பணிந்து கைகளைக் கட்டிக்கொண்டு சிறிதேனும் தேவரீரை அளவிட்டு அறிய முடியாத அடியேன், தேவரீருடைய மாயா வசத்தால், தேவரீரை தேட முயன்றேன், அப்பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்றார். அவ்விருவருடைய விண்ணப்பத்தையும் கேட்ட சிவபெருமான் கிருபையுடன், புன்னகை செய்து, பிரம விஷ்ணுக்களே! நீங்கள் எம்மக்கள். பிரமனே! உன்னை எம் வலப்புறத்தில் பெற்றோம். நீங்கள் எம்முடைய மாயையால் மதி மயக்கமுற்று இறுமாப்புடன் எமது அடிமுடியைத் தேடினீர்கள், போர் செய்தீர்கள். அவற்றையெல்லாம் ஒழிக்கக் கருதி தேஜோலிங்கரூபியாய் நாம் எழுந்தருளினோம். செவ்வையான பஞ்சாக்ஷரத்தையும் ஞான சங்கிதையையும் தந்தோம். அவற்றை நீங்கள் மறந்தீர்கள் அவையில்லையெனில் உங்கள் சிருஷ்டி ஸ்திதிகள் கைவரமாட்டா என்று கூறி மீண்டும் பஞ்சாக்ஷர உபதேசம் செய்தார். அதைப் பெற்ற பிரமனும் விஷ்ணுவும் அவரைச் சாஷ்டாங்கமாகப் பணிந்து நின்றார்கள். அழற்பிழம்பாக நின்ற சிவலிங்கரூபம் மறைந்தது. அதனால் அவர்கள் இருவரும் ஆச்சரியமடைந்து ஒருவரையொருவர் ஆலிங்கனஞ் செய்து கொண்டு தங்களுக்குரிய சத்திய லோகத்தையும் வைகுண்டத்தையும் அடைந்தார்கள். அன்று முதல் தேவர்கள் முதலியோர் சிவலிங்க ரூபஞ்செய்து அதை அர்ச்சனை செய்யலானார்கள் என்று உபமன்யு முனிவர் சொல்லியருளினார்.
28. சிவலிங்க ஸ்தாபன விதி
உபமன்யு முனிவரை நோக்கி ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி, மாதவரே! கொன்றை மாலையணிந்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள சிவலிங்கத்தையும் விக்கிரகங்களையும் வேதவிதிப்படிப் பிரதிஷ்டை செய்யும் வகையையும் நீர் எனக்கு தெரியச் சொல்லவேண்டும் என்று கேட்க, தவ மகிமையால் மேம்பட்ட உபமன்யு முனிவர் சொல்லத்துவங்கினார். பூர்வ பக்ஷத்திலே, குற்றமற்ற சுபதினத்தில் சிவலிங்கரூபத்தைச் சிற்ப விதிப்படிச் செய்து விநாயகக் கடவுளை பூஜித்து புனிதமான இடத்தில் வைத்து பொன்னாற் செய்த சலாகையினால் நேத்திரம் எழுதி, எட்டு மண் அல்லது ஐந்து மண் இட்ட நீரினாலும் பஞ்சகவ்வியத்தினாலும் ஆவுடையாளையும் லிங்கத்தையும் அபிஷேகித்து மலர்களால் அருச்சனை செய்து நல்ல தெய்வீகமுடைய நீரிலே சில தினங்கள் இருத்தி, அவ்விடத்தில் தர்ப்பையைப் பரப்பி, மலர் மாலைகள் தொங்கவிட்டுப் பல கொடிகள் நட்டு, எட்டுத் திசைகளிலும் கும்பங்களை வைத்து அவற்றிலே திக்குப் பாலர்களைப் பூஜித்து, மரத்தாலாவது, வெள்ளியிலாவது, பொன்னாலாவது தாமரை மலர் போலச் செய்து, அந்தப் பதும மலரின் மேலே இரண்டு பீடங்களை அமர்த்தி, வீரன் முதலிய திருவாயில் காப்போர் நால்வரையும் பூஜித்து, நீரால் அபிஷேகம் செய்து, தர்ப்பையும் வஸ்திரமும் அணிந்து, கிழக்கிலுள்ள பீடத்தின் மேல் கீழ்பாலில் சிரமானது பொருந்தச் சிவலிங்கத்தை இருத்தி மேல் பாலிலுள்ள பீடத்தின் பேரில் அந்த ஆவுடையாளை இருத்தி ஐந்து தினங்கள் அல்லது மூன்று தினங்கள் அல்லது ஒரே தினம் அப்படியே இருக்கச் செய்து, மனதில் தியானித்து பூஜை செய்த தேவர்களையெல்லாம் தத்தமதிடத்திற்குச் செல்லவிடுத்து, நமஸ்காரஞ் செய்து இலிங்கத்தையும் ஆவுடையாளையும் எடுத்து மலர்களால் அலங்கரித்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்யவேண்டும். நல்ல புனிதமான நீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்து சுகந்த மலர்களால் அர்ச்சனை செய்து, ஈசான திக்கிலே பதுமம் ஒன்றை எழுதி அதில் கும்பம் ஒன்று வைத்து, அதிலே சிவபெருமானை ஆவாஹனஞ்செய்து பூஜித்து சிற்ப சாஸ்திரற்கமைந்த தினத்தில் செய்த மண்டபமத்தியில் வெண்தாமரை ஒன்றை வரைந்து அதன் மேல் வெண்பட்டு விரித்து ஸ்வர்ண புஷ்பங்களால் அர்ச்சனை செய்து, கமலத்தில் கிழக்கே வைத்து ஆடையணிந்து, அவற்றிற்கு கிழக்கே அஷ்டதஸகமலம் ஒன்று வரைந்து அதன் மத்தியில் சிவ கும்பமும் ஒரு கரகமும் வைத்து, எட்டு இதழ்களிலும் அஷ்ட வித்யேஸ்வர கும்பங்களையும் வைத்து, அந்த தாமரையைப் பத்மத்தைசூழ, எண்மர் ஓமஞ் செய்யவேண்டும்.
ஆசிரியன் ஈசான திக்கிலும் மேற்கிலும் ஓமஞ்செய்ய வேண்டும். மேற்கூறிய வகையின்றி, ஆசிரியனே அக்கினியில் அவி சொரிந்தாலும் பொருந்தும் இலிங்கத்தில் சிவதத்தம் வைத்துப் பிறகு ஓமம் செய்து, வேதியருக்குத் தக்ஷனையும் குருவிற்கு விசேஷ தக்ஷணையும் கொடுத்து, சிற்ப லக்ஷணங்களையெல்லாம் நன்குணர்ந்த ஸ்தபதிக்கு அதில் பாதி தக்ஷணையைக் கொடுத்து, பொன்னால் அழகிய இடபமாவது ஆமையாவது ஒன்றை வைத்து, இலிங்கப் பிரதிஷ்டை செய்யத்தக்க குழியில் அதன் மேலே பிரமசிலையை வைத்து, நவரத்தினங்களிட்டுச் சிவலிங்கத்தையும் எடுத்து அதில் ஸ்தாபிக்கவேண்டும். அதன்பிறகு ஆவுடையாளையும் எடுத்து இலிங்கத்துடன் சேர்த்துவிட்டு அஷ்ட பந்தனஞ் செய்து பூஜித்து அர்க்கியம் அளித்து, முன்னே அழகுறச் செய்து பட்டாடை சாற்றியுள்ள சிவ கும்பத்திலுள்ள நீரால் அபிஷேகஞ் செய்து சிவ லிங்கத்தின் அடியை வித்யேஸ்வர கும்பங்களால் அபிஷேகித்து ஆதார சக்தியே முதலாகக் கொண்ட பீடத்தை அர்ச்சனை செய்து பஞ்சகலா நியாஸஞ்செய்து, இலிங்க தீபனமுணர்ந்து கிழக்கு அல்லது வடக்கு முகமாகப் பொருந்தி இருகரங்களையும் குவித்து, பேரன்போடு உமாமகேஸ்வரராய், உமாசமேதராகிய சிவபெருமானை லிங்கத்தில் ஸ்தாபிக்க வேண்டும். சிவபெருமானும், உமாதேவியும் தம்மைப் பிரமன், விஷ்ணு, ருத்திரன், இந்திரன், சூரியன், சந்திரன் முதலிய தேவர்களும் முனிவர்களும் அசுரர்களும் பிறரும் இருபுறங்களிலிருந்து சேவிக்க, ஆகாயமார்க்கமாக ரிஷபாரூடராக வந்து, சிவ லிங்கத்தில் பொருந்தியதாக மனதில் பாவித்துப் பஞ்சோபசாரங்கள் செய்து, பூஜையை அன்போடுஞ்செய்து முடிக்கவேண்டும். சிவ விக்கிரகங்களையும் இவ்வகையாகவே செய்து பிரதிஷ்டை செய்யவேண்டும். இந்தப் பிரதிஷ்டைகள் மேகமண்டலம் வரையில் உயர்ந்த கோபுரங்களையுடைய சிவாலயத்தில் செய்தால் அதிக பயனையளிக்கும். இனித் தங்கள் வீடுகளில் பிரதிஷ்டை செய்யும் வகையையுஞ் சொல்கிறேன்.
முன்பு சொன்னது போலவே, சிவலிங்கத்தையாவது, சிவ விக்கிரகத்தையாவது செய்வித்து, யாவரும் துதி செய்யத்தக்க உத்தராயணத்திலே பூர்வபக்ஷத்து உத்தம தினத்திலே வேதிகையிட்டு அந்த வேதிகையின் மேல் அஷ்டதளகமலம் ஒன்று வரைந்து மலர்களால் அர்ச்சனை செய்து, அதற்குமேல் கும்பம் வைத்து நான்கு புறத்திலும் நான்கு கலசங்களை அமர்த்தி, பஞ்சப்பிரம மந்திரத்தால் பூஜை செய்து அவ்விலிங்கத்தை நல்ல நீரால் அபிஷேகம் செய்து, ஓர் ஆசனத்தில் வைத்து, மலர்களை சிரமேல் தூவி புரோக்ஷண ஜலத்தால் புரோக்ஷித்து, பெரிய மலர்மாலை சூட்டி சிவநாமத்தை உச்சரித்து மேற்கூறிய வகையிலேயே பூஜையைச் செய்யவேண்டும். வர்ணலிங்கங்கள் முன்னரே சிவபெருமானால் புனிதஞ் செய்யப்பட்டுள்ளன. வாகையால் அதை ஸ்தாபித லிங்கமாகவாவது சரலிங்கமாகவாவது பூஜை செய்யலாம். ஸ்வயம்பு லிங்கங்களுக்கும் தேவர் பிரதிஷ்டை செய்த லிங்கங்களுக்கும் மகரிஷிகள் ஸ்தாபித்த லிங்கங்களுக்கும் ஆவுடையாளில்லாவிட்டால் அதைச் செய்து சேர்த்து அபிஷேகம் முதலியன இயற்றிப் பூஜிக்கலாம். வெந்த லிங்கத்தையும் உடைந்த லிங்கத்தையும் தரிசிக்கக் கூடாது. உடைந்த லிங்கத்தைப் பொருத்தக் கூடுமானால் அவ்வாறே பொருத்தி மகிழ்ச்சியுடன் பூஜை செய்யலாம். ஒருநாள் பூஜை தடைப்பட்டால் இரண்டு முறை பூஜை செய்க. இருநாள் பூஜை தடைப்பட்டால் தினங்கள் முதலாகப் பல தினங்கள் பூஜையை கலச ஸ்தாபனம் முதலியனவும் ஓமமுஞ் செய்து விசேஷ பூஜை முடித்துப் பிறகு, முறைப்படி பூஜை செய்க. பூஜை செய்த பிறகு சிவமூர்த்தத்தைத் தன் ஆன்மாவிலே ஸ்தாபிக்க வேண்டும். ஐந்து மண் அல்லது எட்டு மண் தருப்பை நீர் பஞ்சகவ்வியம் முதலியவற்றால் அபிஷேகித்து புரோக்ஷண ஜலத்தால் நூற்றெட்டுமுறை புரோக்ஷணஞ் செய்து தருப்பையைச் சிவலிங்கத்தின் முடிமேல் அமர்த்தி நூற்றியெட்டுமுறை மூலமந்திரத்தை உச்சரித்து அடிவரையில் ஸ்பரிசித்து தன் ஆன்மாவில் வைத்த சிவமூர்த்தத்தை அதில் அமர்த்தி மலர்களால் அருச்சனை செய்து, விஷபானஞ் செய்து தேவர்களின் உயிரையெல்லாம் காத்தருளிய நீலகண்டத்தையுடைய சிவபெருமானுக்குப் பக்தி பூர்வமாகப் பூஜை செய்ய வேண்டும். ஸ்தாபித லிங்கமும் பார்த்திப லிங்கமும் இல்லாவிட்டால் பூமியிலாவது அக்கினியிலாவது நீரிலாவது பரந்து விளங்கும் ஆகாயத்திலாவது, சூரியனிலாவது, சர்ப்பாபரணராகிய சிவபெருமானைப் பாவனைசெய்து பூஜை செய்யலாம் என்று உபமன்யு முனிவர் கூறியருளினார்.
29. ஞானயோகம் முதலியன
ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி, உபமன்யு முனிவரை நோக்கி, மாதவரே! ஞானம், கிரியை, சரியை என்பவற்றின் சாரம் முழுவதையும் திருவாய் மலர்ந்தருள வேண்டும்! என்று கேட்டார். அதற்கு முனிவரில் உயர்ந்தவராகிய உபமன்யு முனிவர் மேலும் தொடர்ந்து கூறத் துவங்கினார்.
கிருஷ்ணா! நீ கேட்ட விஷயம் அருமையானது. ஏகாக்கிர சித்தமுடையவனாய்க் கேட்பாயாக மனதை ஐம்புலன்களின் வழியிலே விஷய வாதனையிற் செலுத்தாமல் சிவபெருமானையே அன்புடன் மனதில் கொண்டு விளங்கும் மனப்பிரவிருத்தியே யோகம் எனப்படும். அது மந்திரயோகம், ஸ்பரிசயோகம், பாவயோகம், அபாவயோகம், மகாயோகம் என்று ஐந்து வகைப்படும். அவற்றுள் மந்திரத்தை ஜபித்து, அதன் கருத்தை அறிந்து மனதைத் தத்துவத்தில் செலுத்தியிருப்பது மந்திரயோகம். பிராணாயாமத்துடன் கூடி சிந்தனை செய்யும் யோகம் ஸ்பரிசயோகம், மந்திர ஜபம் செய்யாமலும் மந்திரப் பொருளைத் தியானிக்காமலும் இருந்து மனதைத் தத்துவத்தில் ஒடுக்குவது பாவயோகமாகும். அவயவங்களுடன் பிரபஞ்சம் ஒடுங்கும்படி ஆகாயமாகக் கருதிப் பாவித்திடுதல் அபாவயோகமாகும். உலகம் முழுவதையும் மறந்து சிவபெருமானையே மனதில் நன்றாகத் தியானிப்பது மஹாயோகமாகும். விஷய வாதனையில் மனதைச் செலுத்தாமல் நிற்பவன் தான் யோக சாதனைக்குரியவன். விஷயங்கள் துன்பங்களை ஏற்படுத்துவன என்பதை நன்றாகத் தெரிந்து தெளிந்து சிவபெருமானுடைய திவ்விய குணானுபவங்களையே சிந்தித்துக் கொண்டிருந்தால் சிந்திப்பவனுடைய ஆசை முழுவதும் ஒழிந்து மனோதிடம் உண்டாகும். யோகம் ஆறுவகைப்படும் அதற்கு அங்கம் எட்டு பிராணாயாமம். பிரத்தியாகாரம், தாரணை, ஜபம், தியானம், சமாதி என்ற ஆறும் அங்கங்களென்றும், இயமம், நியமம், என்பனவற்றையும் சேர்த்து அங்கங்கள் எட்டு என்று சிவாகமங்கள் கூறும், கொல்லாமை, படிறொழிதல், கள்ளாமை, பிரமசரியம், யாசியாமை, இவை இமயம் எனப்படும். சவுசம், சந்தோஷம், தவம், ஜபம், சித்தநிலை இவை நியமம் என்று நூல்கள் கூறும். ஸ்வஸ்திகம், பதுமம், அர்த்த சந்திரம், வீரம், பிரசாரிதம், பரியங்கம், சித்தம் என்ற இவை ஆசனங்களாகும். பிராணாயாமம் என்பது வாயுவைப் புறஞ் செல்லாமல் அடக்குதலேயாகும் என்று யோக சாஸ்திரம் உணர்ந்தவர்கள் சொல்லுவார்கள். அது இரேசகம், பூரகம், கும்பகம் என்று மூன்று வகைப்படும். இரேகசம் என்பது விரலினால் ஒரு நாசியை மூடிக்கொண்டு, மற்றொரு நாசி வழியாக சுவாசித்தலாகும். அவ்வாறே ஒரு நாசியை மூடிக்கொண்டு மற்றொரு நாசிவழியாக மூச்சேற்றுதல் பூரகமாகும் மூச்சை உட்கொள்வதாகிய உஸ்வாசமும், புறத்தே விடுவதாகிய நிஸ்வாஸமும் செய்யாமல் உடலுக்குள்ளேயே பொருந்தச் செய்வது கும்பகம் பன்னிரண்டு மாத்திரையுடன் கூடிய ஹ்காதமுடைய பிராணாயாமம் அதமம், இருபத்து நான்கு மாத்திரையுடன் கூடிய இரண்டு காதங்களுடைய பிராணாயாமம் மத்திமம் முப்பத்தாறு மாத்திரையுடன் கூடிய மூன்று ஹ்காதங்களையுடைய பிராணாயாமம் உத்தமம் என்று யோக சாஸ்திரங்கள் கூறும். இவற்றில் உத்தமமான பிராணாயாமத்தைச் செய்தால் இஷ்ட சித்திகள் கைகூடும். அது கைகூடியவிடத்தில் உடல் நடுங்கும்.
வியர்வையும் சந்தோஷமும் தோன்றும் மயிர்க்கூச்செறியும், கையால் நொடிக்கும் காலமே ஒருமாத்திரை எனப்படும். ஸகர்ப்ப பிராணாயாமம் என்பது வேத மந்திரத்தை உச்சரித்து, அதன் சிறந்த பொருளை மனதில் தியானித்து உணர்ந்து செய்யத் தக்கது. மந்திரத்தையும் தியானத்தையும் விலக்கிச் செய்யும் பிராணாயாமம் அகர்ப்பப் பிராணாயாமம் ஆகும். கர்ப்பமில்லாத பிராணாயாமம் ஆகுமாதலின் யோகியர்கள் அகர்ப்ப பிராணாயாமத்தையே செய்வார்கள். அதனாலே பத்து காற்றுகளையும் தசவாயுக்களையும் வெல்லுதலாகும். அவற்றுள் பிராணவாயு மேல் எழும் அபானவாயு கீழ் நோக்கிச் செல்லும் வியானவாயு உடன் முழுவதும் வியாபரிக்கும். உதானவாயு சரீர உறுப்புகளை யெல்லாம் ஒடுங்கச் செய்யும். சமானவாயு உடலைச் சமமாகச் செய்யும் நாகவாயு உண்டவற்றையெல்லாம் எதிரெடுக்கச் செய்யும் கூர்மவாயு, கண்களை இமைக்கச் செய்யும் கிரிசுர வாயு தும்மச் செய்யும் தேவதத்தவாயு கொட்டாவி விடச் செய்யும். தனஞ்சய வாயு பிரியாமல் அதிலேயே வசிக்கும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். மேலே சொன்ன இந்தத் தசவாயுக்களும் பிராணாயாமத்தினாலே வெல்லப்பட்டால் இரு மலமும் பாசபந்தங்களும் குறைவுறும் விரும்பியவற்றைப் புசிக்கலாகும். வாயு பந்தனம் செய்யலாகும். வாயுவேகமாகச் செல்லக்கூடும். உடல் இலேசாகும். ஓசையானது வேய்ங்குழல் ஒலிபோல இன்னிசையாகும். வியாதிகள் அகலும். அழகுண்டாகும் வலிமையுண்டாகும் நுட்பமாகிய அறிவுவளரும். இந்தப் பரிசுத்தமான பிராணாயாமத்திற்குத் தவம் யாகம், தானம் முதலியன பதினாறில் ஒரு பங்குக்கும் இணையாகமாட்டாது. விஷய வாதனையில் இடையீடன்றி விடாது ஈடுபட்டு அழியும் இந்திரியங்களைப் புறஞ்செல்ல வொட்டாமல் அடக்குவதே பிரத்தியாகாரம் ஆகும். மனதை இந்திரியங்களின் வழியே செல்ல வொட்டாமல் தடுப்பதே தாரணை எனப்படும். அந்தப் புனிதமான மனதாற் சிவபெருமானை இடைவிடாமல் தியானஞ் செய்தலே தியானமாகும். பெருமை வாய்ந்த தியானத்தினாலேயே சித்தி முக்திகள் உண்டாகும். பன்னிரண்டு பிராணாயாமங்கள் செய்தலே தாரணை என்பதாகும். பன்னிரண்டு தியானங்கள் சமாதியாகும். சமாதி என்பது பிறிதொன்றையும் அறியாதது. வேத முடிவிலே விளங்கும் சர்வசக்திமானும் நித்தியனுமாகிய சிவபெருமானை நன்றாகவுணர்ந்து தன்னையும் மறந்திருத்தலாகும்.
இவ்வகையாக யோக அனுஷ்டானஞ் செய்பவர்களுக்குச் சோம்பல், பிணி, பிரமாதங்கள், சந்தேகங்கள், மனநிலையாமை, பிராந்து தரிசனம் சிந்தையின்மை, துக்கம், விஷய விருப்பு முதலியவற்றால் பலமுறை இடையூறுகள் சம்பவிக்கும். ஆனால் யோக சாதனத்திலேயே மனதைச் செலுத்தி பக்குவமான நிலையிலிருந்து யோகத்தைச் செய்பவர்களுக்கு அவை அணுகமாட்டாது. என்றாலும் யோகத்தில் வல்லவர்களுக்கும் அதீதம் (முன் சென்றன) அநாகதம் (பின்வருவன) விப்பிரருருஷ்டம் (தூரத்திலிருப்பன) வியவிஹிதம் (அருகிலிருப்பன) சூஷ்மம் (சிறியன) என்னும் இவற்றை அறிதலும் பிரதிபையும் (எல்லாவற்றையும் அறிந்து கொண்டிருத்தலும்) என்னும் இவ்வகையான இடையூறுகள் உண்டாகும். அன்றியும் அதிதூரத்திலிருந்து கேளாமல் ஒலிக்கும் ஒலியைக் கேட்டலாகிய சிரவணமும் மிருகம் பறவை முதலியவற்றின் சம்பாஷணையறிதலாகிய வார்த்தையும், தேவலோகம் பாதலம் முதலிய உலகங்களிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தாலாகிய தரிசனமும், கற்பகத்தரு முதலிய விருக்ஷங்களிலுள்ள பழங்களின் சுவை முதலிய சுவைகளை அறிதலாகிய ஆசுவாதமும் கற்பகத்தரு முதலிய தேவதருக்களிலுள்ள மலர்களின் மணத்தையும் உலகிலுள்ள எல்லா மணங்களையும் அறிதலாகிய வேதனையும் என்று சொல்லப்பட்டுள்ள ஆறு இடையூறுகளும் உண்டாகும். மேலும் உடல் குறுகுதல், உடல் தடித்தல், இளம்பருவம் எய்துதல், அழகுறல், விருத்த தசையாதல், நானாகுலத்தில் சேர்தல் வாசனை உண்டாகுதல், நான்கு பூதங்களால் உடல் பெறுதல் என்ற எட்டு குணங்கள் பிருதிவிபதம் எனப்படும். நீர், மண், கல் இவற்றில் பொருந்துதல். அது சரீரத்தில் படாது இருத்தல், சமுத்திரத்தைப் பானஞ் செய்தல், எண்ணிய இடத்தில் நீர் உண்டாக்குதல், ஜலத்தைத் திரட்டி எடுத்தல், உருசியில்லாத பொருட்களை ருசி பெறச்செய்தல், மூன்று பூதங்களுடன் கூடிய தேகம் எடுத்தல், உடலிற் சிறிதும் வழுவின்றி மன்மதனைப் போல விளங்குதல் என்று முறையே சொல்லிய குணங்கள் எட்டும் முதலிற்சொன்ன எட்டுக்குணங்களுடன் சேர்ப்பதனாலும் பதினாறு குணங்களுடன் விளங்குவது அப்புவின் பதம் என்று சொல்லப்படும். தன் சரீரத்தில் அழகுண்டாக்கல், அச்சமில்லாமல் ஜலத்தில் வசித்தல், உலகம் முழுவதையும் தீயால் சுட்டெரித்தல், அக்கினியை நீரில் காத்தல், நெருப்பைக் கையில் ஏற்றல், தீயாற் பற்றிய பொருட்களை முன்புபோலக் காட்டுதல், நினைத்தவற்றை யெல்லாம் சுடுதல், இரண்டு முகங்களாலான உடலைப் பெறுதல் என்னும் எட்டுக் குணங்களுடன் கூடிய முற்கூறிய பதினாறு குணங்களும் சேர, இருபத்து நான்கு குணங்களோடும் விளங்குவது, சதம் என்று சொல்லும் பதமாகும். மனோ வேகத்தால் செல்லுதல், உடம்போடு செல்லுதல், வலையைக் கையில் ஏற்றல், மிகக் கனமாகுதல், பஞ்சைவிட மெல்லியதாகுதல் காற்றைக் கையில் அடக்குதல், உலக முழுவதையும் ஒரு விரலினாலே அலையச் செய்தல், ஒரு பூதத்தாலாகிய உடம்பினை எடுத்தல் என்று எட்டு குணங்களுடன் முற்கூறிய இருபத்து நான்கு குணங்களுஞ் சேர்ந்து முப்பத்திரண்டு குணங்களாகிய வாயு பதம் உண்டாகும்.
இந்திரியங்களால் அறியக் கூடாதிருத்தல், நிழலற்று இருத்தல், அருவாக இருத்தல், புத்தி வழியே விஷயங்களை அனுபவித்தல், வெளியிடைச் சேர்தல், ஆகாயத்தைத் தாண்டுதல், ஆகாயத்திலிருத்தல், அதைப் பந்தாக்கல் என்ற எட்டுக் குணங்களுடன் கூட நாற்பது குணங்களுடன் விளங்குதல் ஆகாய பதமாகும், நினைத்தபடி எல்லாவற்றையும் அறிதல், நினைவின் வழியே செல்லுதல், மனதையும் அறியாமல் மறைத்தல், மறைத்தவற்றை எல்லாம் உணர்தல், வினைக்கீடான தேகங்களைப் படைத்தல் யாவற்றையும் தன்னிடம் பொருந்தச் செய்தல். மனதிற்களிப்பை உண்டாக்கல், சமுசாரத்தைக் காட்டல் என்னும் எட்டுக் குணங்களுடன் மேலே சொன்ன நாற்பது குணங்களுஞ் சேர்ந்து நாற்பத்தெட்டுக் குணங்களுடன் விளங்குவது மாந்த பதமாகும். வாளால் வெட்டல், கயிற்றால் கட்டல், அடித்தல், விட்டுவிடல், உலக முழுதுந் தொடர்தல், சமுசாரத்தில் புகுதல், மீண்டும் அருள்செய்தல், அழியாது ஜீவித்தல் ஆகிய எட்டுக் குணங்களுடன் முன்சொன்ன நாற்பத்தெட்டுக் குணங்களும் சேர்ந்து, ஐம்பத்தாறு குணங்களுடன் விளங்குவது கங்கார பதம். விரும்பியபடி படைத்தல், காத்தல், அழித்தல், அதிகாரம் பொருந்தல் தூரத்தில் உண்டாக்கல் மனதைப் பிரவர்த்தியில் சேர்த்தல், உலகைப் படைத்தல், இன்ப துன்பங்களைச் செய்தல், ஆகிய எட்டு குணங்களுடன் முன் சொன்ன ஐம்பத்தாறு குணங்களும் சேர அறுபத்து நான்கு குணங்களுடன் விளங்குவது புத்தி பதம் என்று சிவனடியார்களில் சிறந்தவர்கள் சொல்லுவார்கள். பூமிபதம் பேய்களின் ஐஸ்வரியமும் ஆகாய பதம் அரக்கர்களின் ஐஸ்வரியமும், தைசதபதம் யக்ஷõ ஐஸ்வரியமும், வாயுபதம் தேவ ஐஸ்வரியமும், ஆகாயபதம் இந்திரன் ஐஸ்வரியமும் மாநஸபதம் சந்திரன் ஐஸ்வரியமும், அகங்கார பத தசம்பிரமாக்கள் ஐஸ்வரியமும், புத்திபதம் பிரம ஐஸ்வரியமும், புத்திபதத்துக்கும் மேம்பட்ட முக்குணப்பகுதி பதம் விஷ்ணு ஐஸ்வரியமும், அதற்கும் மேம்பட்ட புருஷபதம் சூலபாணியாகிய சிவபெருமானின் ஐஸ்வரியமுமாகும். இத்தகைய பதகுணங்களின் ஐஸ்வரியத்தை விரும்பாது இகழ்ச்சி செய்து அழியாத முக்தி வீட்டை அடைவதே விரும்பத்தக்கது. உலக விருத்தியைக் கருதி யோகியானவன் போகத்தில் பொருந்தியிருந்தாலும் அழியாத முக்தி வீட்டை அடையும்படி யோக சாதனஞ்செய்து தரும் விதத்தைச் சொல்லுகிறேன்.
திவ்விய மங்கள சுபதினத்திலே, ஒரு சிவாலயத்தை அடைந்து, பூமியை மெழுகி மேலே விதானங்கட்டி, மணம் வீசும் மலர்களைச் சொரிந்து அகில் தூபம் இட்டு, தர்ப்பை முதலியவற்றுடன் ஓமஞ் செய்து, யோகஞ் செய்யவேண்டும். தீப்பற்றி எரிந்த இடத்திலும் ஆற்றின் இடிகரையிலும் கடற்கரையிலும் மசகம் முதலிய சிறு பூச்சிகளுள்ள இடத்திலும் சருகுகளுள்ளவிடத்திலும், புலி, பாம்பு முதலிய துஷ்டபிராணிகள் உள்ள இடங்களிலும் மனிதர்கள் அநேகர் இருக்குமிடங்களிலும், மயானத்திலும், அழிந்த தோட்டத்திலும், அம்பலத்திலும், புற்று இருக்குமிடத்திலும், பாழ்மனையிலும் நாற்சந்தி கூடுமிடத்திலும் பாழ்பட்ட நந்தவனத்திலும் தகுதியில்லாத இடத்திலும் இருந்து யோக சாதனஞ் செய்தால் தகுதியுடையதல்ல என்று யோக நூல்கள் கூறும். வயிறார உண்ட காலத்திலும் மிகவும் பசியாக இருக்கும் காலத்திலும் மனம் வருந்தியிருக்கும் போதும் உடல் வருந்தியிருக்கும் போதும் ஆசிரியன் கட்டளையிட்ட பணிவிடையைச் செய்யும் காலத்திலும் வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்ட யோக சாதனஞ் செய்வது தருகுதியன்று, உணவு, பயிற்சி, உறக்கம் முதலியவற்றைச் சிறிதாக முயன்றே யோகஞ் செய்வது தகுதியுடையதாகும். புலித்தோல் மான்தோல் முதலிய ஆசனங்களில் தனக்கு இயைந்த ஓர் ஆசனத்தில் பொருந்தியிருந்து ஆசிரியன் முதலானோரைப் பணிந்து சிரம் கண்டம் முதலியன கோணுதலின்றி நேராக நிறுத்தி, கண்களைத் திறந்து நாவின் முனையைப் பல்லின் முனைமேல் வைத்து இரு குதிகளால் குறியை நெருக்கிக் கொண்டு இருகரங்களையும் இரு துடைகளின்மேல் இருத்தி வலது புறப் புறங்கையானது இடதுபுறப் புறங்கையினுள்ளே பொருந்தும்படி அமர்த்தி முதுகை நிமிர்த்தி, இரு கண்களாலும் மூக்கு முனையைப் பார்த்து பிராணவாயுவை அடக்கி, வலிய கருங்கல்லைப் போலிருந்து மலர்ந்த இதழ்களையுடைய இதயத் தாமரையிலே சந்திர சேகரனாகிய சிவபெருமானையும், உமாதேவியையும் தியானித்தும் பூஜை செய்யவேண்டும்.
அன்றியும் மூலாதாரம் அதிஷ்டானம், நாபி, இதயம் இவற்றுடன் பொருந்தி, புருவ மத்தியம், நெற்றி பிரமாந்திரம் துவாதசாந்தம் என்ற இடங்களில் ஓரிடத்திலே சிவபெருமானை உமாதேவியுடன் தியானித்து மிக்க அன்புடன் பூஜை செய்யவேண்டும். அப்பொழுது புருவமத்தியில் தோன்றும் கமலமானது, கதிர் மின்னொளி போன்று இரண்டிதழ்கள் பெற்று, அவற்றின் இறுதியில் இரண்டெழுத்துடன் விளங்கும். கண்டத்திலுள்ளதாகும் கமலம் பதினாறு இதழ்களைப் பெற்றுப் பதினாறெழுத்துடன் விளங்கும். இதயத்தில் உண்டாகும் பொற்றாமரையானது பன்னிரண்டு இதழ்களுடன் பன்னிரண்டு எழுத்துக்களாகப் பொருந்தும். உந்தியில் விளங்கும் குளிர்ந்த வெண்தாமரையானது பத்து இதழ்களுடன் பத்து எழுத்துக்களோடும் விளங்கும். சுவாதிஷ்டானத்தில் பொருந்தும் பத்மமானது அக்கினி நிறமாய், ஆறு இதழ்களோடு ஆறு எழுத்துக்களுடனும் விளங்கும். மூலாதாரத்தில் பிரகாசிக்கும் தாமரை மலரானது பசும் பொன்நிறமாய் நான்கு இதழ்களுடன் நான்கு எழுத்துக்களோடு விளங்கும். மேற்கூறிய இடங்களிலுள்ள கமலங்கள் யாதேனும் ஒன்றில் நெல்லின் வாலளவாகவும் அங்குஷ்டத்து உயரமாகவும் விளக்கொளிப் போலவும் தாமரை நாளத்தில் உண்டாகும் நூலைப்போலவும் புல்லின் முனையில் தங்கிய பனித்துளியைப் போலவும் இளஞ்சந்திரன் போலவும் வெள்ளிய கடப்பம் மொட்டு போலவும் சிவபெருமானை நன்றாகத் தியானஞ் செய்யவேண்டும். மேற்சொன்னது போலத் தியானஞ் செய்வது அருமையானால், சந்திரனை அணிந்த சடையையுடைய அஷ்டமூர்த்திகளையாவது பிரமன் முதல் சதாசிவன் ஈறாகவுள்ள மூர்த்திகளையாவது பொருந்தத் தியானஞ் செய்யவேண்டும்.
கோரம், மிஸ்ரம், சாந்தம் என்று சொல்லப்படும் சிவமூர்த்தங்கள் மூவகையிலே பாவங்களால் வேண்டி கோர மூர்த்தத்தையும் சித்தியடைய வேண்டின் மிஸ்ரமூர்த்தத்தையும் சாந்தியடைய வேண்டின் சாந்தமூர்த்தத்தையும் பூஜிக்கவேண்டும். சீகண்ட மூர்த்தியை மனதில் தியானித்தால் எல்லா சித்திகளும் கைகூடுமாகையால், சிறந்தவர்கள் யாவரும் அந்தச் சீகண்ட மூர்த்தியையே எப்போதும் மனதில் தியானித்துக் கொண்டிருப்பார்கள். மனநிலை எய்த வேண்டினால் ஸ்தூலமாகிய தியானத்தை அறிவார்கள். ஸ்தூலத்தினால் விளங்காத மனமே சொல்லமுடியாத மேம்பட்ட சூஷ்ம தியானத்தில் விளங்கும் சிவபெருமானைத் தியானஞ் செய்தால், எல்லா சித்திகளும் விரைவில் கைகூடுமே தவிர மேலே சொன்ன மூர்த்திகளைத் தியானஞ் செய்வதாலேயே சித்திகளுண்டாகி விடமாட்டாது. மனம் எதில் பொருந்துமோ அந்த மூர்த்தியைத் தியானஞ் செய்யவேண்டும். பிராணாயாமத்தால் சாந்தி, பிரசாந்தி, தீத்தி, பிரசாதம் என்னும் நான்கு வகை சித்திகளும் உண்டாகும். அவற்றுள் பாவங்களையெல்லாம் ஒழித்தல் சாந்தி என்றும் அகத்தும் புறத்தும் உள்ள அஞ்ஞானத்தை விலக்குதல் பிரசாந்தி என்றும், அகத்தும் புறத்துமுள்ள ஒளி முழுவதையும் பார்த்தால் தீத்தி என்றும் புத்தியின் தெளிவுண்டாகுதல் பிரசாதம் என்றும் கருதப்படும். தியானத்தால் முக்தி யுண்டாகுமாகையால் தியானமே செய்யத்தக்கது ஞானத்தாலேயே தியானமும், தியானத்தாலேயே ஞானமும் உண்டாவதால் ஞானமுத்தியானமுடையவர்கள் முக்தியை அடைவது உண்மை சூரியன் சிறியதாயினும் இருட்பிழம்பை யெல்லாம் ஒழிப்பதுபோல, தியானமும் யோகமும் சிறிதளவு தனக்கு வரத்தால் உண்டாயின் இருவினைகள் ஒழியும். சிவபெருமானைத் தியானஞ் செய்யும் தியானத்திற்கு அழிவில்லை. தீர்த்த ஸ்நானம், யாகம், தவம் முதலியன யாவும் தியானத்திற்கு சமானமாக மாட்டாதாகையால், இதனை யோசித்து யோகிகள், கெடுதலற்ற தியானத்தைச் செய்வதனாலே, சித்திகளையெல்லாம் பெறுவார்கள். பின்னர் இறப்புண்டாயின் உத்திரலோகத்தை அடைந்து இன்புற்று வாழ்ந்து, மீண்டும் யோகியாக ஜனித்து, ஞானமும், யோகமும் அடைந்து முக்தியை அடைவார்கள். யோகி ஒருவனுக்கு அன்னமளித்தால் வேதங்களில் புகழ்ந்து சொல்லப்பட்ட உத்தமர்களான கோடி வேதியருக்கு அன்னம் அளித்த பயனுண்டாகும். யோகிகளைக் குறை கூறுபவர்கள் நரகத்தில் ஆழ்வார்கள் யோகிகளுக்கு அன்னம் வஸ்திரம் முதலியவற்றைக் கொடுத்தவர்கள் ஏழு பிறவிகளில் செய்த பாவங்களையெல்லாம் சூரியன் முன்பு இருள் போல ஒழித்து, உயர்பதவியில் வாழ்வார்கள். யோகி, தெரியாமல் பாவஞ் செய்தாலும் தாமரையிலைமேல் தண்ணீர் ஒட்டாததைப் போல, அதன் பயன் அவனையடையாது. அவன் இருக்குமிடமும் புனிதமாகவே இருக்கும். ஆகையால் யோகமே சிறந்தது என்று உணர்ந்து அதைச் செய்து உயிர் நீங்கிச் சிவகதியை அடைவதே உத்தமமானதென்று பெருந்தவமுனிவர்கள் தம் உணர்வால் கூறியிருக்கிறார்கள்.
உடல் ஒழியத்தக்க அடையாளம் ஏதேனும் தன் மனதிற்குப் புலப்படுமானால் நன்மையாகிய யோகத்தை மேலுஞ் செய்யமுடியாது என்று தனக்குள்ள பலவீனங்களாலறிந்து, சிவபெருமான் பரமகாரண்ய ரூபியாக எழுந்தருளியிருக்கும் சிவ ÷க்ஷத்திரங்களை அடைந்து அங்கு வசிக்க வேண்டும். அல்லது பெரிய விரதங்களை அனுஷ்டித்து ஆகாரத்தை விலக்கி உபவாசமிருந்து உயிரை ஒழிக்கவேண்டும். அல்லது இந்தச் சரீரத்தைச் சிவாக்கினியில் விட்டு உயிர் நீங்கவேண்டும் அல்லது தெய்வீகம் பொருந்திய சிவதீர்த்தத்திலே விழுந்து இந்தத் தேகத்தைப் போக்கிவிடவேண்டும். இவ்விதமாகத் தம் தேகத்தை ஒழித்தால் சிவகதியடைவது சத்தியம். சிவ÷க்ஷத்திரங்களில் வசித்து நோய் முதலியவற்றால் இறந்தாலும் முக்தி கைக்கூடும். மேலே சொன்ன எல்லாவற்றையும்விட யோகத்தினாலேயே உயிர் பிரிவதுவே சிறந்ததாகும். சிவத்துரோகியாய் சிவநிந்தை செய்பவனைக் கொன்றதால் இறந்தவன் மீண்டும் மாறுபடத்தேகம் பெறாமல் உமா சமேதராகிய சிவபெருமானது உலகில் மீண்டும் அழியாத பதவியில் அமர்வான். சிவத்துரோகியைக் கொல்லும் வல்லமை இல்லாதவன் அதற்காகத் தன் உயிரை மாய்த்துக் கொண்டால், தனது இருபத்தொரு தலைமுறைகளோடுஞ் சிவகதியை அடைவான் என்று பெருந்தவமுடைய முனிவர்கள் சொல்லுவார்கள். சிவபிரானின் காரணமாகவும் சிவனடியாரின் காரணமாகவும், சிவகுருவின் காரணமாகவும், சிவமந்திரங் காரணமாகவும் அச்சமின்றி உயிர் ஒழிந்தவனுக்குச் சமானமான முக்தியை வேறு எவனுமே அடைதல் அரிது. அவ்வாறு சிவசம்பந்தமாக உயிர் விட்டவனைப் புதைத்தாலும், தகனஞ் செய்தாலும் எங்கேயாவது விட்டெறிந்தாலும் அவனுக்கு உத்திரிகிரியைகளைச் செய்ய வேண்டியதில்லை. அவன் சிவபெருமானால் ஆண்டருளப் பெற்றவனாகையால் அவன் விஷயமாக ஆசவுசமே கிடையாது. அவனுடைய செல்வங்களைச் சிவப்ரீதியே செய்யத்தக்கது! என்று இவ்வாறு உபமன்யு முனிவர் ஞானயோகத்தின் தன்மையை ஸ்ரீ கிருஷ்ணமூர்த்திக்குக் கூறிய வகையிலேயே வாயுபகவான், அறு குலத்தில் உதித்த முனிசிரேஷ்டருக்குச் சொல்லிவிட்டு, இருகைகளையும் குவித்துத் தம் எதிர்நின்ற அம் முனிவர்களுக்கு வாழ்த்துக் கூறி, தன்னிச்சையின்படிச் சென்று, பிரமதேவரைத் தரிசித்து தான் முனிவர்களுக்குக் கூறியதையும் அவர்கள் யாகம் செய்து சிவகடாக்ஷம் பெற்றதையும் சொல்லிச் சென்றார்.
30. முனிவர்கள் காசியை அடைதல்
பிறகு முனிவர்கள் தாம்செய்த யாகத்தை முடித்து, ஸ்நானஞ் செய்யக் கருதும்போது பிரம சிரசிலிருந்து வாணி நதி அவ்விடம் வந்தது. அவர்கள் அதைக் கண்டு மகிழ்ந்து அதில் ஸ்நானம் செய்து முன்பு பிரமதேவன் கூறியதைக் கருதிக் காசி ÷க்ஷத்திரத்தை அடைந்து, மணிகர்ணிகையில் நீராடி விஸ்வநாதப் பெருமானைப் பூஜித்துத் துதித்து நின்றார்கள். அப்போது கோடி சூரியப் பிரகாச ஒரு ஜோதி ஆகாயத்தில் தோன்றியது. அதில் பாசுபத விரதிகளான முனிவர்கள் பலர் சேர்ந்தார்கள். உடனே அந்தச் சோதி மறைந்தது. அதன் வரலாற்றை அறியாத அம்முனிவர்கள் பிரமதேவனிடம் சென்றார்கள். அந்தச் சமயத்தில் நாரதரும், தும்புருவும் வீணை வாசிப்பதில் ஒருவரோடு ஒருவர் போர்செய்து கொண்டிருந்தார்கள். வாயில் காப்பவர்கள் முனிவர்களை உள்ளே போகவிடாமல் தடுத்தார்கள். சிறிது நேரத்தில் நாரதர், தும்புருவுடன் சமானமாக வீணை வாசித்து அநேக அறமகளிரும் கந்தர்வரும் புடைசூழப் பிரமதேவன் கோயிலின் வாயிலையடைய முனிவர்கள் நாரதரைக் கண்டு கைகூப்பி வணங்கி, உம்மைத் தரிசிக்கச் சமயம் வாய்த்ததே என்று கூறவும், அதற்கு நாரதர் இன்றே உத்தம தினம் ஏனென்றால் உங்களையெல்லாம் தரிசிக்கும் வாய்ப்பு இன்றே எனக்குக் கிட்டியது என்று கூறிச் சென்றார். அதன் பிறகு வாயிலில் காவலர்கள் முனிவர்களை உள்ளே செல்ல அனுமதித்தார்கள். முனிவர்கள் பிரமதேவனின் கோயிலினுள்ளே சென்று பிரமதேவனைப் பணிந்து கைகட்டி நிற்க, பிரமதேவன் அவர்களை நோக்கி, முனிவர்களே! உங்கள் விஷயம் எல்லாம் வாயுதேவன் மூலமாக நான் முன்பே கேட்டறிந்தேன். அவன் என்னிடம் வந்த பிறகு நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு முனிவர்கள், பிரமதேவரே! எங்களுடைய யாகம் முடிந்த பிறகு காசியை அடைந்து, மணிகர்ணிகையில் நீராடி விஸ்வநாதப் பெருமானைத் தரிசித்துப் பணிந்து துதித்துக் கொண்டிருந்தோம். அப்போது ஆகாயத்தில் ஒரு ஜோதி உண்டாயிற்று. அதில் அநேக முனிவர்கள் சேர்ந்தார்கள். உடனே அந்த ஜோதி மறைந்துவிட்டது. அது இன்னதென்று அறியமுடியாமையாய் அதைப்பற்றித் தெரிந்து கொள்ளத்தான் உம்மைத் தேடி வந்தோம் என்று கூறினார்கள். பிரமன் அவர்களை நோக்கி முனிவர்களே! அந்த ஜோதியே சிவலிங்கமாகும். மேரு மலையில் சனத்குமார முனிவர் இருக்கிறார். நீங்கள் அவரிடம் செல்க. முன்பொருக்காலத்தில் சிவபெருமான் சனத்குமாரரிடம் வர, அவர் யோகத்தில் இருந்தமையால் பணியாதிருந்தார். அதைக் கண்ட நந்திதேவர் வெகுண்டு, ஒட்டகமாகுக! என்று சனத்குமாரரைச் சபித்தார். உடனே சனத்குமாரர் அவ்வடிவம் பெற்றார். அதைக்கண்ட நான் மிகவும் மனம் வருந்தி, சிவபெருமானை வேண்டி அவரருளால் நந்திதேவர் கிருபையடைந்து பண்டைய வடிவத்தை ஏற்கச் செய்தார். அப்போது சிவபெருமான் நந்தி தேவரை நோக்கி, நீ இவனுக்கு ஞானத்தை போதிப்பாயாக! என்று கட்டளையிட்டார். அவ்வாறே நந்திதேவர், எல்லா நூல்களையும் அவருக்கு விரிவாக உபதேசித்தார். மேலும் சனத்குமார முனிவர் நந்திதேவரின் அருளைப் பெறுவதற்கு இன்னமும் தவஞ் செய்து கொண்டிருப்பதால் நீங்கள் அங்கு செல்லக் கடவீர்கள்! என்று அனுப்பி வைத்தார்.
முனிவர்கள் மேருமலையிலே குமார சிகரத்தை அடைந்தார்கள். அங்கு ஒரு பொற்றாமரைத் தடாகத்தின் வடகரையிலே, கற்பகத்தருவின் நிழலிலே வயிரமேடையிலே, மான்தோல் ஆசனத்திலே பொருந்தி, தியான யோகத்தில் இருக்கும் சனத்குமார முனிவரைக் கண்டு தரிசித்து அவரை வணங்கிக் கைகுவித்து நின்றார்கள். சனத்குமார முனிவர் அவர்களை நோக்கி, நீங்கள் இங்கு வந்த காரணம் என்ன? என்று கேட்க அவர்களும் தங்களுடைய கருத்தை வெளியிட்டார்கள். அவர்கள் அதைச் சொல்லும்போது தேவ துந்துபிகள் முழங்கின. சூரிய பிரகாசமும் ஈடல்ல என்னும்படிச் சொல்லத்தக்க காந்தியுடன் கூடிய தெய்வீக விமானம் ஒன்று அநேக கணங்கள் புடைசூழ்ந்து வீணை வாசிக்கவும், கீதம் பாடவும் கரம்பையர்கள் நடிக்கவும், அதனிடையில் சுயசாதேவியுடன் திருநந்தி தேவர் சூலப்படையைத் திருக்கரத்தில் ஏந்தி விளங்கினார். அதைக் கண்டு சனத்குமார முனிவரும் மற்ற முனிவர்களும் நிலமிசை விழுந்து வணங்கி எழுந்து, கைகளைச் சிரமேல் கூப்பி நின்றனர். சனத்குமார முனிவர் சொன்னார்.
அறுகுலத்துதித்த இந்த முனிவர்கள் பிரமன் கூறியனுப்பிய படி உம்மைத் தரிசிக்க இங்கு வந்தார்கள் என்றார். நந்திதேவர் முனிவர்களையெல்லாம் பார்த்து, பாசத்தை விலக்கி, சிவதர்மம், சிவஞானம், சிவயோகம் முதலியவற்றை உணர்த்தி, விமானத்தில் ஏறிச் சிவ சன்னதியை அடைந்தார்.
திருநந்திதேவர் முனிவர்களுக்குக் கூறிய ஞானயோகத்தைச் சனத்குமார முனிவர் வியாஸ முனிவருக்குச் சொன்னார். வியாஸ முனிவர் எனக்குச் சொன்னார். தவஞானச் செல்வர்களாகிய முனிவர்களே! அதை நான் உங்களுக்குக் கூறினேன். இந்தப் புராண ரத்தினத்தை வேதமறியாதவர்களுக்கும் சிவ பக்தியில்லாதவர்களுக்கும், சீடரல்லாதவருக்கும் மோக்ஷமும் தெய்வமும் இல்லை என்பவர்களுக்கும் சொல்பவர்கள் மீளாத நரகத்தை அடைவார்கள். வேதப் பொருளை விளங்கச் செய்யும் இந்தப் புராணத்தைக் குற்றமறப் படித்தவர்களும் பிறருக்குச் சொன்னவர்களும் எழுதி வைத்தவர்களும் அறம், பொருள், இன்பங்களை (தர்மார்த்த காமங்களை) அடைந்து, பிறகு உமா சமேதராகிய ஸ்ரீ கண்ட பரமசிவனுடைய திருவடியை அடைவார்கள். இந்தப் புராணக் கதையை நான் அன்போடு சொல்லவும் நீங்கள் அன்புடன் கேட்கவும் முடிந்தது இனி நன்மைகள் நாள்தோறும் அபிவிருத்தியாகுக! என்று கூறி சிவத்தியானஞ் செய்து சூதமுனிவர் விடைபெற்று, தம் இச்சைப்படிச் சென்றார். முனிவர்கள் சிவத்தியானத்துடன் காசித்தலத்தை அடைந்து, மணிகர்ணிகையில் நீராடி விஸ்வநாதப் பெருமானைப் பணிந்து சிவயோகத்தில் அமர்ந்து சிவபதவியை அடைந்தார்கள்.
வாயு சம்ஹிதை (உத்திர பாகம்) முடிந்தது.