பதிவு செய்த நாள்
14
டிச
2020
12:12
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா, கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட உள்ளது.
சென்னை, திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா, விமரிசையாக நடத்தப்படுகிறது.இந்தாண்டிற்கான வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, 25ம் தேதி, சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையால், அரசு விதிமுறைகளை பின்பற்றி, விழா நடத்தப்பட உள்ளது. பகல் பத்து உற்சவத்தில், 16ம் தேதியில் இருந்து, 24ம் தேதி வரையிலும், ராப்பத்து உற்சவத்தில், 26ம் தேதி முதல் காலை, 6:00 - -12:00 மணி வரையும், மாலை, 4:00 - -8:00 மணி வரையிலும், தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.காலை, 6:15 மணி முதல், கொரோனா நோய் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
ஆன்லைன் முன்பதிவுசொர்க்க வாசல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், www.tnhrce.gov.in என்ற இணையத்தில் e - -registration மூலம், ஒரு நபருக்கு, ஆதார் அட்டையின் அடிப்படையில், ஒரு நுழைவு சீட்டு வழங்கப்பட உள்ளது. 3,000 நபர்களுக்கு மட்டும், இலவச முன்பதிவு செய்யப்படும். 22ம் தேதி காலை, 10:00 மணியிலிருந்து, 24ம் தேதி மாலை, 5:00 மணி வரை, கட்டணமில்லாமல் முன்பதிவு செய்யப்படும். அதன் அடிப்படையில், உரிய அடையாள அட்டையுடன், 25ம் தேதி காலை, 6:15 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கட்டளைதாரர்கள், உபயதாரர்கள் மற்றும் சேவார்த்திகள் முன்பதிவு செய்த, 25ம் தேதி மட்டுமே, தரிசனம் செய்ய கோவில் நுழைவாயிலில் சோதனை செய்து அனுமதிக்கப்படுவர். பட்டாச்சாரியர்கள், வேத அத்யாபக கோஷ்டி, ஸ்ரீபாதம் தாங்கிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோருக்கு உரிய அடையாள அட்டை வழங்கி, கோவிலின் உள்ளே சென்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர். நேரலை ஒளிபரப்புவைகுண்ட ஏகாதசி திருவிழா காலகட்டத்தில், சுவாமி திருவீதி உலா கோவில் வளாகத்திற்குள் ஆகம விதிகளின்படி நடத்தப்படும். இந்நிகழ்வுகளை டிவி, யுடியூப், Sriparthasarathy swamythirukovil மூலமாக, நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.பக்தர்களுக்கு கொரோனா விதிமுறை கண்டிப்பாக பின்பறப்படும். இயல்பு நிலை திரும்பும் வரை, உட்பகுதியில் நடைபெறும் புறப்பாடு, உற்சவங்களில் பக்தர்கள், உபயதாரர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.