பதிவு செய்த நாள்
16
டிச
2020
07:12
மார்கழி மாதம் இன்று பிறப்பதையொட்டி பெருமாள் கோவில்களில் இன்று முதல் மார்கழி மாதம் முழுவதும் தினசரி காலை திருப்பாவை பாடல்களை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பாடும் நிகழ்ச்சி துவங்கயது.
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்திலுள்ள கரிவரதராஜ பெருமாள், ஆதி மூர்த்தி பெருமாள், பாலமலை ரங்கநாதர் பெருமாள், இடிகரை உலகளந்த பெருமாள், நாயக்கனூர் லட்சுமி நரசிம்ம பெருமாள், நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிங்கப்பெருமாள், திருமலைநாயக்கன் பாளையம் கரிவரதராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் அதிகாலை, 5.00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. தற்போது, நோய் தொற்று காலம் என்பதால், திறந்தவெளியில் ஊர்வலம் இல்லாமல், கோவில் வளாகத்தில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து, பஜனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மார்கழி மாத வழிபாடு என்பது வழிவழியாக அனைத்து கோவில்களிலும், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மார்கழி மாதத்தில் விரதம் இருந்து, விஷ்ணுவை வழிபட்டால், தோஷங்கள் நீங்கி, செல்வ செழிப்புடன் வாழலாம். திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தொழிலில் லாபம் பெருகும் என்பது ஐதீகம். மார்கழி மாதத்தில் பெண்கள் இருக்கும் விரதங்களில் முக்கியமானது மார்கழி நோன்பாகும். இது பாவை நோன்பு என்றும் அழைக்கப்படுகிறது. பாவை நோன்பு காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி மற்றும் ஆழ்வார்கள் பாசுரங்களை பாடி மகிழ்ந்து விரதத்தை கடைபிடிப்பார்கள். சிவன் கோவில்களில் திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்திற்கு, 9 நாட்களுக்கு முன்பு தொடங்கி கடைப்பிடிக்கப்படும் நோன்பாகும். இந்த நோன்பு பாவை நோன்பு, கார்த்தியாயினி விரதம் என்றும் அழைக்கப்படும். மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால், மகாவிஷ்ணு மகிழ்வுடன் சொர்க்கத்தில் இடம் தருவார் என்பது ஐதீகம். இவ்விரதம் இருப்பதால், சகல பாக்கியங்களும் கிடைக்கும். கல்வி, பதவி, புத்திர பாக்கியம் கிட்டும். நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், பாவம் விலகும் என்பது ஐதீகம்.