பதிவு செய்த நாள்
17
டிச
2020
05:12
நாமக்கல்: வரும், 25ல், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதர் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது. அதற்காக, முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே, சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் இணை ஆணையர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: நாமக்கல் அரங்கநாதர் கோவிலில், வரும், 25ல், சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு நெறிகாட்டு முறையின்படி, இந்த ஆண்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று, அதிகாலை, 4:30 முதல், 6:00 மணிக்குள், சொர்க்கவாசல் எனும், பரம பத வாசல் திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. அப்போது, பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்ல அனுமதியில்லை. கோவில் பூஜைகள், அதிகாலை, 4:30 மணிக்கு துவங்கி, இரவு, 8:00 மணி வரை, யூடியூப் சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படும். காலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை, பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதற்காக, இன்று (டிச., 17) முதல், ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள அலுவலகத்திலும், பக்தர்கள் முன்பதிவு டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம். ஒரு மணி நேரத்துக்கு, 1,500 பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்படுவர். அதில், 750 பேர் ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களும், 750 பேர், முன்பதிவு டோக்கன் பெற்றவர்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப, இலவச தரிசனம், 25 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் வழிகளில், சமூக இடைவெளியில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.