சபரிமலையில் டிச.26ல் மண்டலபூஜை: தங்க அங்கி பவனி புறப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2020 02:12
சபரிமலை: சபரிமலையில் டிச.26ல் மண்டலபூஜை நடக்கிறது. இதற்காக தங்க அங்கி பவனி ஆரன்முளாவில் இருந்து புறப்பட்டது.
கொரோனா கட்டுப்பாடுகளுடன் சபரிமலையில் மண்டல சீசன் நடந்து வருகிறது. கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் தினமும் 2000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் வழக்கமான பூஜைகளுடன் படிபூஜையும் நடந்து வருகிறது. டிச.26 மதியம் மண்டலபூஜை நடக்கிறது.திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா, இதற்காக 435 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை காணிக்கையாக வழங்கியிருந்தார். இந்த அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டடுள்ளது.நேற்று காலை 7:15 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் இந்த தங்க அங்கி பவனி புறப்பட்டது. நேற்று ஓம்மல்லுார், இன்று கோன்னி முருங்கமங்கலம், நாளை பெருநாடு கோயில்களில் தங்கும் பவனி டிச.25 மதியம் பம்பை வந்தடையும்.பின்னர் தலைச்சுமடு மூலம் சன்னிதானம் கொண்டு வரப்பட்டு மாலை 6:30 மணிக்கு ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.டிச.26 மதியம் நடக்கும் மண்டலபூஜையிலும் இந்த அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும். அன்று இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிச.30 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும். ஜன., 14ல் மகரவிளக்குபெருவிழாநடை பெறுகிறது.