பதிவு செய்த நாள்
23
டிச
2020
11:12
இஸ்லாமாபாத் : பல்வேறு அடிப்படைவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ஆறு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, ஹிந்து கோவில் கட்டுமான பணிகளை தொடர, பாகிஸ்தான் அரசு, அனுமதி அளித்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் வசிக்கின்றனர். இவர்களது வேண்டுகோளை ஏற்று, தலைநகர் இஸ்லாமாபாதில், ஹிந்து கோவில், சமூக நல கூடம் மற்றும் மயானம் அமைப்பதற்கு, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சியின் போது நிலம் ஒதுக்கப்பட்டது. இங்கு கட்டுமானப் பணிகள் துவங்கிய நிலையில், ஹிந்து கோவில் கட்டுவதற்கு, சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதைஅடுத்து, கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்த விவகாரத்தை, அந்நாட்டின் ஆன்மிக விவகாரத் துறை அமைச்சர் பிர் நுாருல் ஹக் காத்ரி, இஸ்லாமிய கொள்கை கவுன்சில் உறுப்பினர்கள் கவனத்துக்கு கொண்டு சென்றார். மற்ற மதத்தினரை போல, பாகிஸ்தானில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு, வழிபாடு நடத்தவும், தங்கள் மத வழக்கப்படி இறுதி சடங்குகள் செய்யவும் உரிமை உள்ளது எனக் கூறிய கவுன்சில் உறுப்பினர்கள், கோவில் கட்டுமானப் பணிக்கு அனுமதி அளிக்க பரிந்துரைத்தனர். இதையடுத்து, ஆறு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, ஹிந்து கோவில் மற்றும் மயான கட்டுமான பணிகளை மீண்டும் துவக்க, அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. இந்த கட்டுமானத்துக்கு, இம்ரான் கான் அரசு, 10 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது.