பதிவு செய்த நாள்
23
டிச
2020
03:12
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடைபெறும், வைகுண்ட ஏகாதசி விழாவில், காலை, 8:00 மணியிலிருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவர், என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம், காரமடையில் மிகவும் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெறும். இவ்விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபடுவர். இந்த ஆண்டு கொரோனா பிரச்னையால், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவில், பக்தர்கள் பங்கேற்க கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மார்கழி பகல்பத்து, ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி, ராப்பத்து உற்சவம், அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கடந்த, 15 ஆம் தேதியில் இருந்து, ஜனவரி, 3 ஆம் தேதி முடிய நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு, 25ஆம் தேதி காலை, 5:30 மணிக்கு நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு, விழா நாட்களில், சுவாமி புறப்பாடு திருக்கோயில், உள்பிரகாரத்தில் மட்டுமே நடைபெறும். வெளிப்புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா நாளில், காலை, 8:00 மணியிலிருந்து இரவு, 8:00 மணி வரை மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு, பக்தர்கள் அரசு வழிகாட்டு நெறி முறைப்படி அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என, கூறியுள்ளது.