ஸ்பர்ஜன் என்ற சொற் பொழிவாளர் லண்டனில் அனாதை விடுதி நடத்தி வந்தார். பிரசங்கத்திற்காக தனக்கு கிடைக்கும் பணத்தைக் கொண்டு அனாதைக் குழந்தைகளை காப்பாற்றி வந்தார். ஒருமுறை பிரிஸ்டல் என்ற நகரத்துக்கு பிரசங்கிக்கச் சென்றார். அவருக்கு அப்போது 300 பவுன் தேவையாக இருந்தது. நினைத்தபடியே தொகையும் கிடைத்தது. மறுநாள் ஊருக்கு கிளம்புவதாக இருந்தார். துாங்கும் போது, கனவில் தேவனின் குரல் ஒலித்தது. “அன்பரே! உமக்கு கிடைத்துள்ள தொகையை இந்த ஊரில் அனாதை விடுதி நடத்தும் எனது ஊழியரான ஜார்ஜ் முல்லரிடம் ஒப்படைத்து விடு என்றது.
பணத்தை ஒப்படைத்தால் தனது விடுதிக்கு பணம் எப்படி கிடைக்கும் என புரியாமல் தவித்தார். இருந்தாலும் முல்லரைத் தேடிச் சென்று கொடுத்தார். முல்லர், நான் இப்போது தான் பணத்துக்காக ஜெபம் செய்தேன்” என்று சொல்லி மகிழ்ந்தார். லண்டனுக்கு திரும்பிய போது ஸ்பர்ஜனின் வீட்டில் உறையிடப்பட்ட கடிதம் ஒன்று வந்தது. அதில் தொழிலதிபர் ஒருவரின் கடிதமும், அனாதை விடுதிக்கு நன்கொடையாக 315 பவுன் பணமும் இருந்தது. அதைக் கண்டு நெகிழ்ந்து போனார். பிறருக்கு உதவினால் ஆண்டவன் பல மடங்காக நமக்கு உதவ தயாராக இருக்கிறார்.