காஞ்சி மகாபெரியவரை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர், ‘‘ சுதந்திரப் போராட்டத்தைக் காந்தி தொடங்கிய போது பல கோடி மக்கள் அவருக்கு பின்னால் நின்றார்களே அவர்களெல்லாம் காந்தியத்தைப் பின்பற்ற ஆசை கொண்டவர்கள் தானே... ஆனால் உண்மையான சுதந்திரம் இன்னமும் வந்ததாக தெரியவில்லையே?’’ எனக் கேட்டார். அதற்கு காஞ்சி மகாபெரியவர், ‘‘ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றோம். ஆனால் அவர்களின் கலாசாரத்தில் இருந்து நாடு இன்னும் சுதந்திரம் பெறவில்லை. அது தான் பெரிய சிக்கல். காலம் காலமாக இருக்கும் நம் கலாசாரத்தைப் பின்பற்றினால் தானே நாடு சுதந்திரம் பெற்றதாக ஆகும்? உலகியல் வாழ்வில் மிக எளியவர்களாகவும், உள்ளத்தால் மிகப் பெரியவர்களாகவும் இருப்பதே பாரத கலாசாரம். ஆனால் ஆன்மிக நாகரிகத்தை மனம் அறிந்தே இன்று நாம் தொலைத்து வருகிறோம். நாட்டிலுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் இதுவே. நாடு உண்மையான சுதந்திர நாடாக இருக்கப் போகிறதா என்பதே கேள்வி. அரசியல் சுதந்திரம் கொடுத்து வெளியேறியவர்களின் நாகரிகம் நம்முடையது அல்ல. ஆனால் அதை நாம் பின்பற்றுகிறோம். ஆங்கிலேயர்களின் வாழ்க்கை முறையில் தான் ஈடுபாடும், மதிப்பும் இருக்கிறது. உணவு, உடை முதல் அனைத்து விஷயங்களிலும் அவர்களைப் போல் வாழ்வதில் விருப்பம் கொள்கிறோம். அவர்களின் வாழ்க்கை முறைக்கு நாம் அடிமைப்பட்டிருந்தால் உண்மையான சுதந்திரம் இன்னும் வரவில்லை என்பது தானே பொருள்? சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய காந்தி நம் நாட்டு கலாசாரம், பண்பாட்டில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தார். மக்களைச் சந்திக்கும் போதெல்லாம் அதை எடுத்துக் கூறி வந்தார். ஆனால் அவரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்பவர்களில் பலர் அதைப் பொருட்படுத்தவில்லை. காந்தியைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அவரது கொள்கைகளைப் பின்பற்றவில்லை. அப்படியானால் சுதந்திரப் போராட்டத்தில் கோடி கணக்கான மக்கள் அவரின் பின்னால் நின்றார்களே, காந்தியத்தில் ஈடுபாடு இல்லாவிட்டால் அப்படி நிற்பார்களா என்ற கேள்வியும் மனதில் எழுகிறது. அப்போது அதிகமான மக்கள் காந்தியைப் பின்பற்றி நடந்ததற்குக் காரணம் கொள்கை மீதிருந்த ஈடுபாடு அல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. எதிர்ப்பு நடவடிக்கைகளில் எப்போதும் உற்சாகம் காட்டுவது என்பது மனிதர்களின் இயல்பு. ஆங்கிலேயர்களை காந்தி எதிர்த்தார். அந்த எதிர்ப்பு பலருக்கும் உற்சாகம் அளித்தது. அதற்காக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மற்றபடி காந்தி சொன்ன வாழ்க்கை முறையில் அக்கறை காட்டவில்லை. சுதந்திரம் என்பதன் உண்மையான பொருளை யாரும் உணரவில்லை. நம் இஷ்டப்படி நடந்து கொள்ள சுதந்திரம் உதவும் என்று தான் பலரும் கருதினார்கள். ஆனால் நாட்டின் தனித்தன்மை கொண்ட நாகரிகத்திற்கு இசைந்ததாக வாழ்க்கை முறை இருக்க வேண்டும். நம் ஆன்மிக மரபை ஒட்டி மக்கள் எளிமையாக வாழத் தொடங்கும் போது தான் நாடு உண்மையான சுதந்திரம் பெறும்’’ என்றார்.