பதிவு செய்த நாள்
25
டிச
2020
05:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலை, 4:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, பக்தர்கள் ரங்கா... ரங்கா... என பரவசத்துடன் முழங்க, பரமபதவாசல் என அழைக்கப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் , ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த, 14ம் தேதி இரவு, மூலவர் அனுமதி பெறும் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி உற்சவம் துவங்கியது. ஏகாதசி உற்சவத்தின் போது, பகல் பத்து, ராப்பத்து என, 20 நாட்களும் திவ்யபிரபந்தம் அபிநயத்துடன் வாசிக்கப்படும். வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வாக இன்று (25ம் தேதி) அதிகாலை, 4:45 மணிக்கு, நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசலை கடந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின், ஆயிரங்கால் மண்டபம் அருகே, நம்பெருமாள் எழுந்தருளினார். கோவில் முழுதும் மலர்களாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.