திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் தேகளீச பெருமாள் பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நடு நாட்டு திருப்பதி என போற்றப்படுவதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் பெருமாள் முத்தங்கி சேவையில் விசுவரூப தரிசனம், திருப்பாவை சாற்றுமறை, ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பிடாகி உடையவர் சன்னதியை வந்தடைந்தார். அங்கு மண்டகப்படி, பரமபத வாசலுக்கு சிறப்பு பூஜைகளுடன் 5:30 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்பட்டது.
சுவாமி பரமபத மண்டபத்தில் எழுந்தருளி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடந்தது. இதனைத் தொடர்ந்து நம்மாழ்வார் திருவாய்மொழி துவக்கம், இராப்பத்து உற்சவம் துவங்கியது. ஜீயர் ஸ்ரீ நிவாசராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. விழா நிறைவடைந்த பிறகு 7:00 மணிக்கு மேல் பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர். டி.எஸ்.பி., ராஜு தலைமையில் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.