பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய நம்பெருமாளை சொர்க்கவாசல் வழியாக சென்று தரிசிக்க ஏற்பாடுகள் நடந்தது. அதிகாலை, 5.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவமூர்த்தி கரிவரதராஜ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக சென்று நம்பெருமாளை அழைத்து வரும் சேவை நடந்தது. தொடர்ந்து, திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காய்கறிகளால் அமைக்கப்பட்ட தோரண பந்தலில் நம்பெருமாளுடன் உற்சவமூர்த்தி எழுந்தருளியது குறிப்பிடத்தக்கது. வைகுண்டத்தில் வேறு எந்த பொருளும் இருக்காது என்பதன் அடிப்படையில், காய்கறிகளால் ஆன பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஏகாதசி அன்று முழுவதும் விரதம் இருந்து, மறுநாள், தோரணமாக கட்டப்பட்ட காய்கறிகளை சமைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என, கோவில் அர்ச்சகர் வெங்கடாசல ராமானுஜ தாசர் கூறினார்.