பதிவு செய்த நாள்
26
டிச
2020
02:12
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடந்த சொர்க்கவாசல் திறப்பில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை கோயிலில் பெரிய பெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டனர். சொர்க்கவாசல் மண்டபத்தில் ஆழ்வார்கள் எழுந்தருளினர். காலை 5:31 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா, கோபாலா கோஷத்திற்கு மத்தியில் சொர்க்கவாசல் திறக்கபட்டது.
முதலில் பெரியபெருமாள், தொடர்ந்து ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். அவர்களை ஆழ்வார்கள் எதிர்கொண்டு அழைத்து வர ராப்பத்து மண்டபத்தில் பெரியபெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் மற்றும் ஆழ்வார்கள் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.பின்னர் மங்களாசாசனம், திருவாய்மொழி துவக்கம், அரையர் அருளிப்பாடு, பத்தி உலாவுதல், அரையர் வியாக்யானம், சேவாகாலம், தீர்த்தகோஷ்டி நடந்தது. சொர்க்கவாசல் திறப்பை தொடர்ந்து ராப்பத்து உற்ஸவம் துவங்கியது. கலெக்டர் கண்ணன், சடகோபராமானுஜ ஜீயர், எம்.எல்.ஏ., சந்திர பிரபா முத்தையா, தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் இளங்கோவன் பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.