பதிவு செய்த நாள்
26
டிச
2020
02:12
தேனி : மாவட்டத்தில் பல்வேறு பகுதி பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி , சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தேனி அல்லிநகரம் கிராம கமிட்டிக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீதேவி,பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்க வாசல் கதவு திறக்கப்பட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சடகோபராமானுஜ கோஷ்டியார் மார்கழி திருப்பாவை நோன்பு பாசுரங்கள் பாடினர். ஏராளாமான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தரிசித்தனர். வைகுண்ட ஏகாதசி குழு தலைவர் மூர்த்தி, செயலாளர் வெங்கடேஷன், பொருளாளர் குமார், கிராம கமிட்டி தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் தாமோதரன், துணை செயலாளர் வீரமணி, பொருளாளர் ஸ்ரீதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்துார் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் துவங்கிய விழாவில் சுவாமி, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் கோயில் பிரகாரம், சொர்க்கவாசல் வழியாக வந்த சுவாமியை கோவிந்தா கோஷமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோயில் செயல் அலுவலர் தங்கலதா, ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.,மகாராஜன், ஊராட்சி ஒன்றிய தலைவர் லோகிராஜன், துணைத்தலைவர் வரதராஜன் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி.,தங்ககிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சரவணதெய்வேந்திரன், போலீசார் செய்தனர். ---
போடி: சீனிவாசப்பெருமாள் கோயிலில் நடந்த சொர்க்க வாசல் திறப்பு விழாவில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சுவாமி ஸ்ரீரங்கத்தில் இருப்பது போல நவரத்தினங்களால் ஆன ரத்தின அங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூலவர் முத்தங்கி சேவை அலங்காரத்தில் காட்சியளித்தார். பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். அலங்காரத்தினை கார்த்திக் பட்டாசாரியார், ஏற்பாடுகளை கோயில் தக்கார் பாலகிருஷ்ணன் செய்திருந்தனர். பெரியகுளம்: வரதராஜப்பெருமாள் கோயிலில் அதிகாலை 5:30 மணிக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சொர்க்க வாசல் என்ற பரமபத வாசல் திறக்கப்பட்டது.
உற்ஷவர் நம்பெருமாள் திருக்கோலத்தில், மூலவர் பூக்கள் அலங்காரத்தில் காட்சியளித்தனர். பெரியகுளம் பாம்பாற்று ஆஞ்சநேயர் கோயிலில் உற்ஷவர் மலர் அலங்காரத்தில்வடகரை வரதப்பர் தெரு உட்பட முக்கிய தெருவழியாக வீதி உலா சென்றார். வடகரை கோதண்ட ராமர்,தென்கரை வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயர் தரிசனம் நடந்தது. ஏற்பாடுகளை அர்ச்சகர் லட்சுமணன், பக்தர்கள் செய்திருந்தனர். கோதண்டராமர் கோயில், தாமரைக்குளம் மலைமேல் வெங்கிடாஜலபதி கோயில் சிறப்பு பூஜை நடந்தது. லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில், மூலவர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
உத்தமபாளையம்: யோகநரசிங்கபெருமாள் கோயிலில் சர்வ அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். சிறப்பு பூஜைக்குப்பின் அதிகாலை 5:30 மணிக்கு கோயிலின் சொர்க்கவாசல் எனப்படும் வடக்கு வாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். லட்டு, அவல் பிரசாதங்களை ஓம் நமோ நாராயணா பக்த சபை தலைவர் ஹரிஹரஅய்யப்பன், செயலர் ராயல்ரவி உள்ளிட்டோர் வழங்கினர். பக்த சபையின் உறுப்பினர்கள் ஞானவேல், அசோக், பாலமுருகன் உள்ளிட்டவர்கள் பக்தர்களை வரிசைப்படுத்தினர்.கம்பம் கம்பராயப்பெருமாள் கோயிலில் அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு அபிேஷக ஆராதனையில் ஏராளமானோர் பங்கேற்றனர். சின்னமனுார் லெட்சுமிநாராயண பெருமாள் கோயிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.