பதிவு செய்த நாள்
26
டிச
2020
03:12
பொள்ளாச்சி, பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி கோவிந்தா முழக்கத்துடன் கோலாகலமாக நடந்தது.மார்கழி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதி, ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியாக கடைப்பிடிக்கப்படுகிறது.இந்நாளில், பெருமாள் பள்ளி கொண்டுள்ள வைகுண்ட லோகத்தின் பரமபத வாசல் திறக்கப்படுவது ஐதீகம். இதைக்குறிப்பதற்காக, வைகுண்ட ஏகாதசியான நேற்று, பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கரிவரதராஜ பெருமாள் கோவிலில், அதிகாலை, 4:30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்க, பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. திருக்கோவில் அர்ச்சகர்கள், நிர்வாகிகள் பங்கேற்று, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. காலை, 8:00 முதல், இரவு, 8:00 மணி வரை பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பக்தர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, கோவிந்தா கோஷம் முழங்க, பெருமாளை தரிசித்தனர்.இதே போல், டி.கோட்டாம்பட்டி கோதண்ட ராமர் கோவில், பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவில், ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு ைவபவம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
ஏகாதசியன்று துாக்கம் விழித்து, உணவு துறந்து பக்தி சிரத்தையோடு விரதம் மேற்கொண்ட பக்தர்கள், இன்று துவாதசியன்று விரதம் முடித்து பெருமாளை தரிசனம் செய்வர்.காட்டம்பட்டிபுதுாரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜபெருமாள் கோவிலில், அதிகாலை, 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, கரிவரதராஜ பெருமாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் சாத்துார் பெருமாள் கோவிலில், காலை, 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ராஜ அலங்காரத்தில், சுவாமி அருள்பாலித்தார். வால்பாறை வால்பாறை, கருமலை பாலாஜி கோவிலில், நேற்று முன்தினம் மூலவருக்கு முத்தங்கி சேவை நடந்தது. தொடர்ந்து உற்சவ மூர்த்தி, மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், நேற்று காலை, 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து, மங்கள இசை, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாராயணம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பாலாஜி அருள்பாலித்தார் - நிருபர் குழு -.