பதிவு செய்த நாள்
26
டிச
2020
02:12
சபரிமலை:சபரிமலையில், மண்டலகாலம் துவங்கி, 39 நாட்களில், 71 ஆயிரத்து, 706 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
கேரளாவில், சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களின் நிர்வாக பணிகளை மேற்கொண்டு வரும், திருவிதாங்கூர் தேவசம்போர்டின் தலைவர் வாசு, நேற்று கூறியதாவது: சபரிலை அய்யப்பன் கோவிலில், இன்று நடக்கும் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் முழுமையாக செய்து முடிக்கப்பட்டுள்ளன.
எச்சரிக்கை: ஒரு சீசனை முழுமையாக ரத்து செய்வது சரியல்ல என்ற தேவசம்போர்டின் கருத்தை, கேரள அரசு ஏற்றுள்ளது. ஆனால், கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன் அடிப்படையில், பக்தர்கள் எண்ணிக்கை கட்டுப் படுத்தப்பட்டது. முதலில், 1,000, பின், 2,000 என, என அதிகரிக்கப்பட்டது. டிச., 24 வரை போலீஸ், தேவசம்போர்டு ஊழியர்கள், பக்தர்கள் உட்பட, 390 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
சில பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். சன்னிதானத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக ஊருக்கு அனுப்பப்பட்டனர்.மண்டல காலம் துவங்கி, 39 நாட்களில், 71 ஆயிரத்து, 706 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.நெகடிவ் சான்றிதழ்இந்த சீசனில், 9 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த சீசனில், இதே கால அளவில் வருமானம், 156 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, தற்போது, 5 சதவீத வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. மகரவிளக்கு சீசனில், ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனை, நெகடிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. குருவாயூர், திருப்பதி போல, ஆன்லைன் முன்பதிவை தேவசம்போர்டு நேரடியாக நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.