பதிவு செய்த நாள்
26
டிச
2020
04:12
காஞ்சிபுரம் : வடதிருநள்ளார் என அழைக்கப்படும், மேட்டுப்பாளையம், சனீஸ்வர பகவான் கோவிலில், நாளை, சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் ஊராட்சி, தேசிய நெடுஞ்சாலையில், வடதிருநள்ளார் என அழைக்கப்படும், மேட்டுப்பாளையத்தில், சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது.நாளை காலை, 5.22 மணிக்கு, சனீஸ்வர பகவான், தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி, இக்கோவிலில், பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மூலவர், சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார ஆராதனையும், அன்னதானமும் நடைபெற உள்ளது.கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கப்படும். பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கோவில் தெப்ப குளத்தில் நீராட, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும், குளத்து நீர், குழாய் வழியாக அனுப்பப்பட்டு, நீராடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என, கோவில் நிறுவனர் க.முருகையன் தெரிவித்துள்ளார்.