பெத்லகேமில் 2020 ஆண்டுகளுக்கு முன்பு கன்னி மரியாளுக்கு ஒரு பாலகன் பிறந்தார். அவருக்கு ‘இயேசு கிறிஸ்து’ என்று பெயர். ‘இயேசு’ என்றால் ‘விடுதலையாக்குபவர்’ என்றும், ‘கிறிஸ்து’ என்றால் ‘தீர்க்கதரிசி’ என்றும் பொருள். ஆம்...அவர் மக்களை பாவங்களில் இருந்து விடுவிக்க சிலுவையில் ரத்தம் சிந்தி மரித்தார். ‘என்னை பாவியென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்’ என்று சவால் விட்டார். மரித்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இதை ‘மரித்தேன்...ஆனாலும் சதாகாலமும் உயிரோடே இருக்கிறேன்’ “ உன் இதயத்தை எனக்கு கொடு; நான் உன்னில் வந்து வாசம் பண்ண விரும்புகிறேன்” என அழைக்கிறார். அவரது பிறந்த நாளையே கிறிஸ்துமஸ் எனக் கொண்டாடுகின்றனர். முன்பு நன்மை செய்வதற்காகவே விழாக்கள் கொண்டாடினர். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. இதற்கு முன்னுதாரணமாக வாழ்ந்தவர் டாக்டர் எட்வர்ட் லிவிங்ஸ்டன் ட்ரூடோ. அமெரிக்கரான இவர் காசநோயால் அவதிப்பட்டார். மலைப்பகுதியில் தங்கினால் இந்நோய் விரைவில் குணமாகும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தார். மலைப்பகுதியில் இருந்த தன் வீட்டை மருத்துவமனையாக்கி நோயாளிகளைக் குணப்படுத்த தொடங்கினார். புதிய கட்டடங்களைக் கட்டி விரிவுபடுத்தினார். மற்ற மருத்துவர்களும் இவரைப் பார்த்து புதிய மருத்துவமனைகளை நிறுவினர். இச்சமயத்தில் 1904ல் அமெரிக்காவில் நுரையீரல் சங்கம் ஆரம்பித்தனர். கிறிஸ்துமஸ் ஸ்டாம்ப் வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் காசநோயாளிகளுக்கு உதவ திட்டமிட்டனர். 50 ஆயிரம் ஸ்டாம்புகள், 2000 அஞ்சல் உறைகள் வெளியிடப்பட்டன. இது பற்றி அடிக்கடி நாளிதழ்களில் செய்தி வெளியிடவே மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டது. அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. 3000 டாலர் சேர்ந்தது. ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டு இத்திட்டத்தை வரவேற்றார். பார்த்தீர்களா! இந்த நிதியின் மூலம் எத்தனையோ நோயாளிகள் குணம் பெற்றனர் என்பதை! இப்படி மற்றவருக்கும் பயனுள்ளதாக இருப்பதே கொண்டாட்டத்தின் உண்மையான பயன். இன்றே பொதுப்பணிகளைத் தொடங்குவோம். பிறருக்கு பயன் பெறும் விதத்தில் செயல்படுவோம்.