தன்னை தரிசிக்க வந்த சிறுவனையும் அவனது பெற்றோரையும் பார்த்தார் காஞ்சி மகாபெரியவர். அவனது நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாக இருந்தன. தாய் கண்ணீருடன், ‘‘ சுவாமி...இவனுக்கு மனநலம் குன்றியிருக்கிறது என மருத்துவர்கள் சொல்கிறார்கள். திடீர் திடீர் என பலமாகச் சிரிக்கிறான். மற்றவர் பரிகசிக்கும் விதத்தில் செயல்படுகிறான். பிரச்னையை நீங்கள் தான் தீர்க்க வேண்டும்’’ என்றாள். ‘‘அன்னை காமாட்சியைப் பிரார்த்தனை செய்யுங்கள். எல்லாப் பிரச்னைகளையும் அவள்தானே தீர்த்து வைக்கிறாள்?’’ என்றார் மகாபெரியவர். பிரசாதமாக ஆரஞ்சுப் பழம் ஒன்றை சிறுவனுக்கு கொடுத்தார். அதை வாங்காமல் மகாபெரிவரை பார்த்தபடி இருந்தான். ‘‘ராஜா! பிரசாதத்தை வாங்கிக்கோ’’ என்றார் அவனது தந்தை. அவன் பேசவில்லை. ‘‘ ஆரஞ்சுப் பழம் உனக்குப் பிடிக்குமே செல்லம்? வாங்கிக்கோப்பா’’ என்றாள் தாய். அப்போதும் அவனிடம் சலனம் ஏதுமில்லை. ‘‘உனக்கு ஆரஞ்சுப் பழம் பிடிக்காதா?’’ எனக் கேட்டார் மகாபெரியவர். அவரின் கண்களையே பார்த்தபடி கணீர் குரலில், ‘‘எனக்குத்தான் ஒரு வாரமா ஜலதோஷமாச்சே? ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டா இன்னும் ஜாஸ்தி ஆகுமே... உங்க பக்கத்துல ஆப்பிள் பழம் இருக்கே? அதைக் கொடுங்கோ, வாங்கிக்கறேன்!’’ என்றான். தெளிவாகப் பேசிய மகனைக் கண்ட பெற்றோர் ஆச்சரியப்பட்டனர். சுவாமிகள் சிரித்தபடி ஆப்பிள் ஒன்றை கொடுத்து விட்டு, ‘‘ஜலதோஷம் இருக்கறப்போ ஆரஞ்சு சாப்பிடக் கூடாதுன்னு தெரிஞ்சு வச்சிருக்கான் இவன். இவனுக்கா மனநலம் சரியில்லை? எல்லோரையும் விட மனநலம் நன்றாக இருப்பதால் தானே நமக்குத் தோன்றாத விஷயம் இவனுக்குத் தோன்றுகிறது? காமாட்சியை பிரார்த்தனை பண்ணுங்கோ. ஷேமமா இருப்பான்!’’ அதைக் கேட்ட சிறுவன் கலகலவென சிரித்தான். பெற்றோர் சொல்லாமலேயே பெரியவரின் காலில் விழுந்து வணங்கினான். அவரும் ஆசி வழங்கிய பின் நன்றியுடன் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். ஒரு மாதம் கழித்து சிறுவனோடு அந்த பெற்றோர் மடத்திற்கு வந்தனர். அவர்களின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. மற்ற குழந்தைகளைப் போல சிறுவனும் இயல்பாக நடந்தான். ‘‘ எனக்கு இப்போ ஜலதோஷம் இல்லை. பிரசாதமாக ஆரஞ்சுப் பழம் கொடுங்கள்’’ என கேட்டு வாங்கினான். பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் சிந்தினர். ஏனெனில் அவர்களுக்குத் தான் தெரியும் குணமானது ஜலதோஷம் மட்டுமல்ல என்பது!