“அறப்போருக்கு செல்லும் படையில் என்னை சேர்த்துக் கொள்ளுங்கள்” என வந்தான் ஒரு இளைஞன். ஏற இறங்கப் பார்த்தார் நாயகம். அவன் விடலைப் பருவத்தை இன்னும் தாண்டவில்லை. ‘‘உனக்கு பெற்றோர் இருக்கிறார்களா?’’எனக் கேட்டார். “ஆம். இருக்கிறார்கள்” என்றான். “அப்படியானால் அவர்களுக்கு பணிவிடை செய். அவர்களை சந்தோஷப்படுத்துவதே உன் குறிக்கோளாகட்டும்’’ என அறிவுறுத்தினார். இன்னொரு இளைஞனுக்கு உடற்தகுதி இருந்தது. அவனும் படையில் சேர்க்கும்படி வேண்டினான். “உன் பெற்றோரிடம் அனுமதி வாங்கி விட்டாயா?” எனக் கேட்டார். “இல்லை. என் தாயார் அழுது கொண்டே இருந்தார். அதை பொருட்படுத்தாமல் வந்து விட்டேன்” என்றான். “உடனே வீட்டுக்கு புறப்படு. தாயின் கண்ணீரைத் துடை. பெற்றோரின் மகிழ்ச்சியில் தான் இறைவனின் மகிழ்ச்சி இருக்கிறது” என்றார்.