திருப்பூர்:நாளை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடக்கின்றன.மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், சுமங்கலி நோன்பு கொண்டாடப்படும். சுமங்கலிப் பெண்கள் விரதம் இருந்து திருவாதிரை களி செய்து வழிபடுவர்.
அதன்படி, இன்று திருவாதிரையும், நாளை ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது. இதையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உள்ள நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு, நாளை அதிகாலை, 3:00 மணிக்கு மஹா அபிஷேக பூஜை மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது.கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. அதற்கு மாறாக, காலை 7:00 மணி முதல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.கொரோனா காரணமாக, நடராஜர் சிவகாமி அம்மன் திருவீதி உலா, பட்டி சுற்று நிகழ்ச்சிகள் நடக்காது. அதேநேரம், நாளை காலை, 6:00 முதல், மதியம்,ல 12:00 மணி வரையும், மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணியும், கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம், என அறநிலையத்துறையினர் அறிவித்துள்ளனர்.