பதிவு செய்த நாள்
30
மே
2012
04:05
11. துர்ஜயனும் ஊர்வசியும்: சந்திர வம்சத்தில் தோன்றிய துர்ஜயன், கற்பில் சிறந்த தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் காளித்தி நதி தீரத்தில் அழகிய கானம் ஒன்று கேட்டான். கானம் வந்த திசையில் சென்று ஊர்வசி என்னும் அப்சரஸைக் கண்டு மோகிக்க, அவளும் அவன்மீது ஆசைபட இருவரும் பல ஆண்டுகள் சுகித்து இருந்தனர். ஒரு நாள் தூர்ஜயன் திடீரென்று தன் நாடு, மனைவி ஆகியோரைப் பற்றி எண்ணி தன் வீட்டுக்குச் சென்றுவர ஊர்வசியிடம் அனுமதி கோரினான். அப்போது ஊர்வசி இன்னும் ஓராண்டு காலம் தன்னுடன் இருக்குமாறு கூறினாள். துர்ஜயன் தன் நாட்டைப் பார்த்துவிட்டு உடனே திரும்பி விடுவதாக உறுதிப்பட கூறினான். அப்போது ஊர்வசி ஒரு நிபந்தனை இட்டாள். மற்ற எந்த ஸ்திரீயிடமும் கணவனாக வாழக்கூடாது என்றாள். அந்த நிபந்தனையை ஏற்று மன்னன் நாடு திரும்பினான். ஊர்வசிக்கு அளித்த வாக்குப்படி மனைவியை அவன் நெருங்கவில்லை. அதன் காரணத்தைப் பின்னர் துர்ஜயன் மனைவி அறிந்து கொண்டாள். அவன் பாவம் செய்ததைக் கணவனுக்கு எடுத்துக் காட்டினாள் அந்த கற்புக்கரசி. ஏக்கம் கொள்வதில் பயனில்லை. பாவத்துக்குப் பரிகாரம் பச்சாத்தாபம் மட்டுமல்ல. இது ஒரு மன்னனுக்கு அழகல்ல. தவம் செய்ய வேண்டும் என்றாள் அந்த மாதரசி.
எத்தகைய தவம் செய்ய வேண்டும் என்று அறிய கண்வ முனிவரை அடைந்து வேண்டிட, அவர் இமயமலைக்குச் சென்று தியானம் செய்யுமாறு கூறினார். செல்லும் வழியில் மன்னன் ஒரு கந்தர்வனைச் சந்தித்தான். அவன் கழுத்தில் ஒரு தெய்வீகமாலை இருந்தது. ஊர்வசியை நினைத்தான். அவளுக்கே உரித்தானது அந்த மாலை என்று கந்தர்வனைத் தோற்கடித்து, மாலையைப் பெற்று அதனை ஊர்வசிக்கு அணிவிக்க விரைந்தான். ஆனால், ஊர்வசி முன் இருந்த இடத்தில் இல்லை. அவளைத் தேடி அலைந்தான். சுமேரு மலையில், மானச ஏரிக்கரையில் ஊர்வசியைக் கண்டு அவளுக்கு அம்மாலையை அணிவித்து சில காலம் அவளுடன் மகிழ்ச்சியாக இருந்து வந்தான். ஒருநாள் ஊர்வசி, மன்னனை தன் நாடு சென்றிருந்த காலத்தில் என்ன நடந்தது என்று கேட்டாள். நிகழ்ந்ததை எல்லாம் மன்னன் கூற, ஊர்வசி அவனை உடனே சென்று விடுமாறும் இல்லாவிட்டால் கணவர், துர்ஜயன் மனைவி ஆகியோர் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்று கூறி அவனைப் போகச் சொல்ல ஊர்வசியை விட்டுப் பிரிய அவனுக்கு இஷ்டமில்லை. ஊர்வசி தன்னை அழகற்றவளாக மாற்றிக் கொள்ள அவன் அவள் மீது வெறுப்புக் கொண்டு தவம் செய்யச் சென்றான். மொத்தம் இருபத்து நான்கு ஆண்டுகள் மிக்க கோரத்தவம் செய்தான். தவம் முடிந்து கண்வர் இருக்குமிடம் அடைந்து முனிவரிடம் நடந்ததை எல்லாம் விவரித்தான்.
முனிவர் அவன் மாறுதலையும், தவத்தையும் கேட்டு மகிழ்ந்தார். பின்னர் அவர், அது மட்டும் போதாது என்றும் சிவபெருமான் உறையும் வாரணாசிக்குச் செல்லுமாறும் அறிவுரை கூறினார். அவர் மேலும் சிவபெருமான் வாரணாசியில் எப்போதும் இருக்கிறார். அவருடைய தரிசனமும், பூஜையும் மன்னனுடைய பாவத்தை நீக்கிவிடும் என்றார். அவ்வாறே துர்ஜயன் செய்து பாவ விமோசனம் பெற்றான். வாரணாசி செல்வதும், சிவபூஜையும் சிறந்த பலனைத் தரும்.
12. கிருஷ்ணனின் தவம்
கிருஷ்ணன் புத்திரபாக்கியம் வேண்டி உபமன்யு முனிவர் ஆசிரமம் நண்ணினான். அப்போது அவன் முனிவர்களை வாழ்த்தினான், அவர்கள் அவரைத் துதி செய்தனர். கிருஷ்ணன் நேரில் வாழ்த்தியது பற்றி பெரிதும் மகிழ்ந்த முனிவர் கிருஷ்ணன் வருகைக்கு ஏதேனும் முக்கிய காரணம் உண்டா என்று கேட்டார். அப்போது கிருஷ்ணன் தான் சிவனைக் காண என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, அதற்கு முனிவர் உண்மையான நம்பிக்கையுடன் தியானம் செய்து கடின தவம் செய்தால் சிவனைக் காண முடியும் என்றார். அதுகேட்ட கிருஷ்ணன் தவக்கோலம் பூண்டு பாசுபத விரதம் அனுஷ்டித்து தியானிக்க உமா மகேச்வரர்கள் காட்சி அளித்தனர். அப்போது சிவனார், கிருஷ்ணனிடம் அவர் விஷ்ணுவே நினைத்ததைப் பெறும் சகல வல்லமை படைத்தவர் என்றும் தன்னை வேண்டியது ஏன் என்றும் கூறிட, கிருஷ்ணன் தனக்குச் சிவபெருமானை ஒத்ததோர் மகன் வேண்டும் என்றார். அவ்வாறே வரம் பெற்ற அவருக்கு ஜாம்பவதி மூலம் சாம்பன் பிறந்தான்.
13. சிவனது அவதாரங்கள்
கூர்ம புராணம் சிவபெருமான் எடுத்த அவதாரங்களைப் பற்றித் தெரிவிக்கிறது. ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரம் கொண்டோர் அவர். அவையாவன :
1. ஸ்வேதா, 2) சுதாரா, 3) மதனன், 4) சுஹோத்திரன், 5) கங்கணன், 6) லோகாக்ஷி, 7) ஜெய் கிஷ்ஹவ்யன், 8) தாதிவாகன், 9) ரிஷபன், 10) பிருகு, 11) உக்கிரன், 12) அத்திரி, 13) பலி, 14) கவுதமன், 15) வேதசீர்ஷன், 16) கோகர்ணன், 17) ஷிகந்தகன், 18) ஜடமாலி, 19) அட்டஹாசன், 20) தாருகன், 21) லங்காலி, 22) மகாயாமன், 23) முனி, 24) ஷுலி, 25) பிண்ட முனீச்வரன், 26) ஸஹிஷ்ணு, 27) ஸோமசர்மா, 28) நகுலீஸ்வரன்.
14. ஈசுவர கீதை
முனிவர்களுக்கு சூதர் புராணங்கள் கூறிக் கொண்டிருந்த போது அங்கே வேதவியாசர் வந்தார். அவரிடம் முனிவர்கள் உண்மை ஞானம் பெற உபாயம் கூற வேண்ட, அவர் கூறியது இதோ: பரமாத்மாவே உண்மையானது. அது எல்லா இடத்திலும் தூய்மையாக வியாபித்து உள்ளது. இந்தப் பரமாத்மாவிலிருந்தே இந்தப் பேரண்டம் தோன்றியது. முடிவில் அதனுள்ளேயே ஐக்கியமாகும். பரமாத்மன் என்பது இந்தப் பூமியல்ல அது நீர், சக்தி, காற்று அல்லது ஆகாயமும் அல்ல. அதைத் தொடவோ உணரவோ முடியாது. ஒவ்வொருவர் ஆத்மாவிலும் பரமாத்மா இருக்கிறார். சுகம், பாவம், மாயையினால் பரமாத்மா, ஜீவாத்மாவுக்கிடையே வேறுபாடு தோன்றும். ஞானம் பெற்றவர் மாயையிலிருந்து விடுபடுவர். எனவே தனக்கும், மற்றவற்றிற்கும் வேறுபாடு காணமாட்டான். அனைத்திலும் பரமாத்மா ஊடுருவி உள்ளார். யோகா என்பது தியானம். அது ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள உணர்வை ஊட்டுகிறது. யோகத்தில் எட்டு உட்பிரிவுகள் உள்ளன. அவை முறையே :
1. மூச்சை அடக்கும் பிராணாயாமம். பிராணம்=உயிர்; ஆயாமா=கட்டுப்பாடு. இதுவே பிராணாயாமத்தின் பொருள். மூச்சை உள்ளிழுப்பது ரேசகம்; உள்ளிருத்துவது கும்பகம்; வெளியிடுவது பூரகம்.
2. பிரத்தியாகாரம்-இது புலன்களை அடக்குவது. யோகா செய்யும் போது தக்க உடல்நிலையில் அமர்ந்து செய்ய வேண்டும்.
3. ஆசனம்! யோகாசனங்கள் பல வகைப்படும். அவற்றின் பலன்களும் வெவ்வேறாகும்.
4. அகிம்சை, உண்மை, தயை கொண்டிருத்தல் யாமம் ஆகும்.
5. வேதம் ஓதுதல், பிரார்த்தனை, தூய்மை, தியானம் ஆகியவை ருயாமம் எனப்படும்.
6. ஓர் இறைவனை முன்னிட்டு தியானம் செய்ய ஆரம்பித்துத் தொடர்ந்து தவம் செய்வது தியானம் ஆகும்.
7. அந்த இறைவனை உள்ளத்தில் நிலை நிறுத்துதல் தாரணம் ஆகும்.
8. இறுதியில் சமாதி-ஜீவாத்மா, பரமாத்மாவுக்கு இடையே ஒன்றியை நிலையை உணர்வதாகும்.
15. சமயச் சடங்குகள்
பிரம்மா பருத்திச் செடியைத் தோற்றுவித்தது முப்புரி நூல் எனப்படும் யஜ்ஞோபவீதம் உருவாக்கவே. பிராமணர்க்கு உபநயனம் மிகவும் முக்கியமானது. அது எட்டு வயதில் செய்யப்பட வேண்டும். ஆசான் (அ) குரு மரியாதைக்குரியவர். பூசிக்கத்தக்கவர். யாரிடமிருந்து அறிவு பெறப்படுகிறதோ அவரே குருவாவார். இவ்வாறு பாடம் (அ) வேதம், சாஸ்திரம் கற்பிப்பவரே அன்றி வேறு சிலரும் குருவாகக் கருதப்படுவர். தந்தை, அண்ணன், அரசன், மாமா, மாமனார், தாத்தா வயதில் பெரியவர்கள் ஆகியோரும் குருவாவார். மற்றும் தாயார், பாட்டி, குருபத்தினி, அத்தை, மாமியார், அண்ணி ஆகியோரையும் குருவுக்கு சமமாக நடத்த வேண்டும். குருவின் இடத்தில் உட்காரக்கூடாது. அவரிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளக்கூடாது. அவரிடம் வாதிக்கக்கூடாது. குருவை வெறுப்பவனுக்கு நரகம் நிச்சயம்.
மேற்கூறியவர்களும் மிகவும் முக்கியமானவர்கள். தந்தை, தாய், ஆசான், அண்ணன், கணவன் ஆகியோர் என்னவானாலும் அவர்களிடம் மரியாதையாக நடந்து சேவை செய்ய வேண்டும். ஓர் அந்தணன் உணவுக்குப் பின் மட்டும் குடித்தல், உறங்கல், குளித்தல், எச்சில் துப்புதல், உடைமாற்றும் போது எல்லாம் வாயைக் கொப்பளித்துக் கழுவ வேண்டும். மற்றும் படிக்க உட்காருவதற்கு முன், நாத்திகனுடன் பேசியபின், மேலும் பிரஷ்டர்கள், பெண்கள் ஆகியோருடன் பேசிய பின்னும் வாயைக் கழுவிக் கொள்ள வேண்டும் (இது தூய்மையின் அடிப்படையில் கூறப்படுவதால் தற்காலத்தில் அனைவருக்கும் பொருத்தமாகும்.) வாயலம்புதல் முடியாத நிலையில் தீ, பசு, கங்கை, நீர் இவற்றைத் தொடுவதன் மூலமும் தூய்மை ஏற்படும். ஓர் அழுக்குத் துணியைத் தொட்டுவிட்டால் நன்னீர், புல், மண் இவற்றைத் தொட்டு தூய்மையாக்கிக் கொள்ளலாம்.
காயத்திரி மந்திரம்
மந்திரங்களில் சிறந்தது காயத்திரி மந்திரம். அதாவது
ஓம் பூர் புவஸ்ஸுவ : ஓம் தத்ஸவிதுர் வர÷ண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோனப் பிரசோதயாத்
கிரகண காலத்தில், பிரேதச்சடங்குகள் நடக்கும் போது, படுத்திருக்கும் போது, புலால் உண்டபின், புயலின் போது, பவுர்ணமி இரவில் வேதங்களைப் படிக்கக் கூடாது.
16. பிராயச்சித்தமும் விரதங்களும்
பிராமணனைக் கொன்றவன், மது உண்டவன், தங்கம் திருடியவன் ஆகியோர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். பிராம்மணனைக் கொன்றவன் அதற்கு பிராயச்சித்தமாக காட்டில் குடிசையில் பன்னிரண்டு ஆண்டு காலம் வாழ்ந்து வர ÷ண்வடும். அவன் இறந்தவர் தலையைக் குறிக்கும் அடையாளத்தைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு பிராயச்சித்தம் (அ) தவம் முடியும் வரையில் அவன் வேறோர் அந்தணன் இல்லத்திற்கோ, கோயிலுக்கோ செல்லக்கூடாது. இந்த பிராம்மணக்கொலை அஜாக்கிரதையால் (அ) அசட்டையால் நேர்ந்ததானால் அதற்கே இப்பிராயச்சித்தங்கள். வேண்டுமென்றோ, தெரிந்து கொலை செய்திருந்தாலோ, தவமோ, பிராயச்சித்தமோ போதாது. அத்தகைய பாவி தீக்குளித்தோ, நீரில் மூழ்கியோ, பட்டினி கிடந்தோ மரணமடைதல் சிறந்த பிராயச்சித்தமாகும்.
விரதங்கள்
மற்ற பாவங்களுக்குப் பரிகாரமாக கீழ்க்கண்ட விரதங்களை அனுஷ்டிக்கலாம். முக்கியமான சில கொடுக்கப்பட்டுள்ளன.
1. சந்தாபண விரதம் : ஒருநாள் முழுவதும் பஞ்ச கவ்யம் உட்கொண்டு, அடுத்த நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருத்தல்.
2. மஹாசந்தாபண விரதம் : இதில் பஞ்சகவ்யத்தில் ஏதேனும் ஒன்றை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இம்மாதிரி ஆறு நாட்கள் இருந்து ஏழாவது நாள் முழு உபவாசம் இருக்க வேண்டும்.
3. பிரசமத்திய (அ) கிரிச்சா விரதம் : இதில் முதல் மூன்று நாட்கள் பகலில் மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். அதுவும் சுமார் 26 முட்டையளவு மட்டும் உண்ண வேண்டும். அடுத்து மூன்று நாட்கள் 22 முட்டையளவு மாலையில் மட்டும் உட்கொள்ள வேண்டும். இறுதியாக மூன்று நாட்கள் 24 முட்டை அளவு மட்டும் உணவு கொள்ள வேண்டும்.
4. அதிகிரிச்சா விரதம் : முன் விரதத்தை விடக் கடுமையானது. முதல் மூன்று நாட்கள் ஒரு கையளவு உணவு பகலில் மட்டும் உட்கொள்ளல். அடுத்து மூன்று நாள்களில் மாலையில் மட்டும் ஒரு கை அளவு உட்கொள்ளல். அடுத்து மூன்று நாட்களில் ஒரு கை அளவே பகலில் எப்போதாவது ஒரு முறை உட்கொள்ள வேண்டும். இறுதியாக மூன்று நாட்கள் உபவாசம் இருக்க வேண்டும். இவ்வாறு பன்னிரண்டு நாட்கள் விரதம் இது.
5. பராக விரதம் : இதில் 12 நாட்கள் தொடர்ந்து உண்ணா நோன்பினைக் கடைப்பிடிக்க வேண்டும்.
6. தப்த கிரிச்சா விரதம் : இதுவும் 12 நாட்கள் கொண்ட விரதமே. இதில் ஒரு நாளைக்கு ஒரு முறையே நீராடல், முதல் 3 நாட்கள் நீர் மட்டும் அருந்தலாம். அடுத்த மூன்று நாட்கள் பால் அருந்தலாம். அடுத்த மூன்று நாட்கள் நெய் அருந்தி கடைசி மூன்று நாட்கள் உபவாசம் இருக்க வேண்டும்.
7. பதகிரிச்ச விரதம் : இது நான்கு நாட்கள் அனுஷ்டிப்பது. முதல் நாள் ஒரு வேளை உணவு, இரண்டாம் நாள் உபவாசம்; மூன்றாம் நாள் அளவில்லா உணவு. நான்காவது இறுதி நாள் உபவாசம்.
8. சாந்தாராயன விரதம் : இது பவுர்ணமியில் ஒரு மாதம் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும்.
முதல் நாள் 15 கையளவு உணவு; அடுத்து 14 கையளவு உணவு அடுத்த அமாவாசை வரையில் உட்கொள்ள வேண்டும். அமாவாசை அன்று முழு உபவாசம். அடுத்த பிரதமை முதல் தினமும் ஒரு கையளவு அதிகம் ஆக்கிக் கொண்டே உணவு உட்கொள்ள வேண்டும். பவுர்ணமி அன்று 15 கையளவு உண்ணாவிரதம் முடிவடையும். மேலும் பல விரதங்களும், பிராயச்சித்தங்களும் கூர்ம புராணத்தில் கூறப்படுகின்றன.
17. சீதை ஒரு மாயை
ராமாயணத்தில் ராவணன் சீதையைத் தூக்கிச் சென்றதை அறிவோம். சீதை ஒரு மாயை என்பதை விளக்குகிறதைக் காண்போம். இந்தக் கதையின்படி நன்னெறி கொண்டவர்க்கு என்றும் ஆபத்தில்லை என்று அறியலாம். ராவணன் ஒரு துறவி வடிவில், பர்ண சாலையில் இருந்த சீதையைத் திருட்டுத்தனமாக தூக்கிச் சென்றான். ராவணனின் தீய எண்ணத்தை சீதை முன்பே அறிந்திருந்தாள். எனவே, அவள் திட்டத்தை முறியடிக்க திட்டமிட்டாள். அவள் அக்கினி தேவனைப் பிரார்த்தித்தாள். அப்போது அக்கினிதேவன் தோன்றி ஒரு மாயா சீதையைத் தோற்றுவித்தான். உண்மையான சீதைக்குப் பதில் மாயா சீதை சென்றாள். உண்மையான சீதை அக்கினியால் ஏற்றுக்கொள்ளப்பட்டாள். எனவே, ராவணன் மாயா சீதையைத் தூக்கிச் சென்றான். அந்த மாயா சீதையின் காரணமாகவே ராம ராவண யுத்தம் நடந்தது. போருக்குப் பின், ராவண வதத்திற்குப் பின், சீதை அக்கினிப் பிரவேசம் செய்ய மாயா சீதை தீயில் மூழ்க உண்மையான சீதை திரும்பி வந்தாள். ஆக உண்மையான சீதைக்கும் ராவணனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. (பிரம்ம வைவத்திர புராணம் காண்க.)
18. சிவனும் பிரம்மனும்
முன்னர் ஒரு சமயம் பிரம்மா முனிவர்களிடம் நானே தலைமைக் கடவுள். என்னைத் தவிர வேறோர் தெய்வமில்லை என்று கூறினார். அதாவது அரி, அரன்களை விட நானே உயர்ந்தவன் என்றார். இவ்வாறு பிரம்மன் சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கு விஷ்ணு வந்தார். அவர் நானே உயர்ந்த தெய்வம். நீ படைப்பாளி மட்டுமே. நான் காத்து ரக்ஷிப்பவன் என்றார். இந்நிலையில் வேதங்கள் நான்கும் உயிருள்ள வடிவில் தோன்றி அரி, அரன்களிடம் தக்க ஆதாரங்களைக் காட்டி சிவனே அரி, அயன்களைக் காட்டிலும் உயர்வான தெய்வம் என்று எடுத்துக் காட்ட, அதனை விஷ்ணு ஏற்றார். ஆனால் பிரம்மன் அதற்கு சம்மதிக்கவில்லை. பிரம்மா வேதங்களிடம் சிவன் எப்போதும் பேய், பிசாசுகளுடன் தோழமை கொண்டு திரிந்து கொண்டிருக்கிறார். அவர் எவ்வாறு எங்கள் இருவரை விடச் சிறந்தவர், உயர்ந்தவர் ஆவார்? என்று கேட்டார்.
இந்தச் சமயம் அங்குச் சிவபெருமான் வந்து சேர்ந்தார். சிவனைக் கண்டவுடன் பிரம்மா அவரைக் கண்டபடி நிந்திக்கலானார். அப்போது சிவன் தன்னிலிருந்து காலபைரவரைத் தோற்றுவிக்க, அவர் பிரம்மாவிடம் சண்டை போடலானார். அச்சண்டையில் காலபைரவர் ஐந்து முகம் கொண்ட பிரம்மாவின் ஒரு தலையை வெட்டிவிட பிரம்மா நான்முகன் ஆனார். நான்கு தலைகள் உடையவனானார். (சில புராணங்களில் சிவபெருமானே பிரம்மாவின் ஒரு தலையை நீக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.) உடனே பிரம்மா இறந்து விட அவரைச் சிவபெருமான் உயிர்ப்பித்தார். எனினும், சிவன் ஒரு பிராமணனைக் கொன்றதால் பிரம்மாவின் கொய்யப்பட்ட தலை காலபைரவனின் (சிவனின்) கையிலேயே ஒட்டிக்கொண்டது. இந்நிலையில் காலபைரவர் பல ஆண்டுகள் கையில் பிரம்மாவின் கொய்யப்பட்ட தலையுடன் அலைந்து திரிகையில் விஷ்ணு அவர் முன் தோன்றி வாரணாசிக்குப் புனிதப் பயணம் செல்லுமாறு அறிவுரை கூறினார்.
வாரணாசியை அடைந்தவுடன் காலபைரவனின் கையிலிருந்து பிரம்மாவின் தலை விடுபட்டது. அவ்விடம் ஒரு புனித தலம் ஆயிற்று. அது கபால மோசன தீர்த்தம் ஆகும். வாரணாசியே அன்றி பிரயாகை, குரு÷க்ஷத்திரம், கயா, வடமதுரை போன்ற பல தீர்த்தங்களும் சிறந்த தலங்களே. சருசுவதியில் மூன்று நாள் ஸ்நானமும், யமுனையில் ஒரு வாரம் நீராடலும், கங்கை நீரைத் தொட்ட உடனேயும் பாவம் நீங்கும். ஆனால் நர்மதை நீர் பார்வையில் பட்டாலே பாவம் நீங்கும்.
19. நந்தி தேவரின் வரலாறு
தருமநெறியில் நின்ற, சாஸ்திர ஞானம் மிகுந்த ஷிலாதர் என்ற முனிவர் ஆயிரம் ஆண்டுகள் சிவனை நோக்கித் தவம் செய்ய சிவபெருமான் அவர் முன் தோன்றி வேண்டிய வரம் யாது? என்று கேட்க, அம்முனிவர் தாயிடம் பிறக்காத ஒரு புதல்வனைத் தனக்கு அருளுமாறு வேண்டினார். சிவன் அவ்வாறே வரம் அளித்தார். ஷிலாதர் நிலத்தை உழுது கொண்டிருந்தபோது ஓர் அழகிய பையன் ஏரியின் மீது திடீரென்று தோன்றினான். அவனைச் சுற்றி நான்கு பக்கமும் பேரொளி வீசியது. அவன் ஷிலாதரைத் தந்தையே என்று கூப்பிட்டான். அவனுக்கு நந்தி எனப் பெயரிடப்பட்டது. அவன் கல்வி கற்க ஆரம்பித்து சகல சாஸ்திர சம்பன்னன் ஆனான். நந்தி சிவதரிசனம் பெறவும், தான் மரணமின்றி இருக்கவும் சமுத்திர தீர்த்தத்தில் ஓரிடத்தில் கோடி சிவ நாமம் ஜபித்துத் தவம் செய்தான். சிவபெருமான் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க இன்னும் கோடி சிவநாமம் ஜபிக்க ஆயுள் வேண்டும் என்றான். அவ்வாறே வரம் அளித்தார் பரமசிவன்.
இம்மாதிரி மும்முறை நிகழ கடைசியில் சிவபெருமான் தோன்றி சிவநாம ஜபம் போதும். மேலும் தவம் வேண்டாம். உனக்கு மரணம் ஏற்படாது. நீ ஒரு கணநாதன் ஆகி கணங்களுக்கெல்லாம் நாயகனாக விளங்குவாய், என்னை விட்டுப் பிரியாத தோழனாவாய் என்று வரமளித்தார். மருத்தின் புதல்வியாகிய சுயாஷாவை நந்திக்குச் சிவபெருமான் மணம் செய்து வைத்தார். நந்தி எப்போதும் சிவ சந்நிதியில் பரமனைப் பிரியாமல் இருந்தார்.
கூர்ம புராணம் முற்றிற்று.