பதிவு செய்த நாள்
01
ஜன
2021
04:01
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் பிப்., முதல் தேதியன்று நடைபெறும், என, செயல் அலுவலர் சரவணக்குமார் தெரிவித்தார். கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து, கோவிலில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், துணை சபநாயகர் ஜெயராமன், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., சண்முகம், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், சிவலோகநாதர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவடைந்துள்ளதால், வரும் ஜன., 18ல் கொடிகம்பம் நடப்பட்டு, பிப்., முதல் தேதியன்று கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், பொன்மலை வேலாயுதசுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடக்கிறது. இப்பணிகளை விரைவாக நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இத்தகவலை, செயல் அலுவலர் சரவணக்குமார் தெரிவித்தார்.