உமய்யா வம்சத்தில் ஏழாவது ஆட்சியாளராகப் பதவி வகித்தவர் உமர் இப்னு அப்துல் அஸீஸ். இவருக்கு முந்திய ஆட்சியாளர்கள் ஆடம்பரமாக வாழ்ந்தனர். ஆனால் இவர் எளிமை, நேர்மை, இறைநம்பிக்கை கொண்டவராக இருந்தார். மக்கள் நலப்பணிகளுக்கு தன் செல்வத்தை செலவிட்டார். இவரது மனைவி பாத்திமா தன் தந்தையார் மூலம் விலை உயர்ந்த முத்து ஒன்றை அன்பளிப்பாக பெற்று இருந்தார். அதைக் கண்ட உமர், ‘‘இந்த முத்து மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்டது. உடனே இதை அரசுக் கருவூலத்தில் சேர்த்துவிடு’’ என்றார். “உங்களுடைய அன்புக்காக எத்தனை முத்துக்களையும் இழக்கத் தயாராக இருக்கிறேன்” என பாத்திமாவும் ஒப்படைத்தார். இவரது ஆட்சிக் காலத்தில் அரசு அதிகாரிகள் தானம் கொடுக்க ஏழைகளைத் தேடி அலைந்தனர். தன்னைச் சார்ந்தவர்களும் எளிமையை பின்பற்ற வேண்டும் என உமர் விரும்பினார். ஒருநாள் மதிய விருந்துக்கு உறவினர்களை அழைத்தார். வந்தவர்களுடன் பேசிக் கொண்டே பொழுதைக் கழித்தார். ஆனால் உணவு வழங்கவில்லை. நேரம் கடக்கவே வந்தவர்களுக்கு பசி அதிகரித்தது. அதன் பின் ரொட்டித் துண்டு வழங்கப்பட்டது. ‘பசி ருசி அறியாது’ என்பது போல வேகமாக வாங்கிச் சாப்பிட்டனர். “ மக்களின் வரிப்பணத்தில் ஆடம்பரமாக வாழ நினைக்காதீர்கள். பசிக்கு எளிய ரொட்டித் துண்டு கூட போதுமானது. நீங்கள் ஆடம்பர வாழ்வை விரும்பினால் நரகம் செல்ல நேரிடும்’’ என அவர்களுக்கு அறிவுரை கூறினார். ஆடும் பம்பரம் போல ஆடம்பரம் முடிவில் சாய்ந்து விடும்.