பதிவு செய்த நாள்
08
ஜன
2021
03:01
கோபி: பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், 80 பேர் மட்டுமே தீ மிதித்தனர்.
கோபி அருகே, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அம்மன் சன்னதி எதிரே உள்ள, 60 அடி நீள குண்டத்தில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு நெருப்பு மூட்டப்பட்டது. அதேசமயம், நேற்று முன்தினம் இரவு முதல், அதிகாலை வரை, மழை பெய்தது. இதனால் குண்டத்தை தயார் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் காலை, 5:30 மணிக்கு, அம்மன் சிம்ம வாகனத்தில், குண்டத்தின் முன் காட்சியளித்தார். காலை, 5:40 மணிக்கு திருக்கொடி தீபம் ஏற்றப்பட்டு, குண்டத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. தலைமை பூசாரி ஆனந்த், குண்டத்தின் முன் நின்று, எலுமிச்சை, வாழைப்பழம் மற்றும் பூக்களை அள்ளி வீசினார். அதை தொடர்ந்து குண்டத்து நெருப்பை, கைகளால் அள்ளி வீசி, 5:50 மணியளவில் முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து, பிற பூசாரிகள், கோவில் சேவகர்கள், வீரமக்கள் என, 80 பேர் மட்டுமே குண்டம் இறங்கினர். நடப்பாண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதி மறுக்கப்பட்டது. குண்டம் விழா முடிந்த பிறகு, அம்மனை தரிசிக்க, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.