பதிவு செய்த நாள்
09
ஜன
2021
07:01
கோபி: பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், தேரோட்டம் கோலாகலமாக நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், குண்டம் தேர்த்திருவிழா கடந்த, 24ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து, திருத்தேர் இழுக்கும் நிகழ்வுக்காக, விநாயகர் மற்றும் அம்மன் தேர், பாரியூர் ராஜகோபுரம் அருகே, நேற்று தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு கோவில் முக்கியஸ்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பாரியூர் பஸ் ஸ்டாப் வழியாக, இரு தேர்களும் வலம் சென்று, ஈஸ்வரன் கோவிலை அடைந்தது. அப்போது, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று (ஜன.,9ல்) மாலை, 4:00 மணிக்கு தேர்நிலை சேரும் என, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.