பதிவு செய்த நாள்
12
ஜன
2021
11:01
திருப்பூர்:சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மக்காச்சோள விதை வைக்கப்பட்டுள்ளதால், மகசூல் பெருகும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் - சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், உத்தரவு பெட்டியில், பொருட்கள் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. முருகப்பெருமான், கனவில் வந்து கூறும்போது, சம்பந்தப்பட்ட பக்தர், முருகன் உத்தரவு பொருளை, பெட்டியில் வைத்து பூஜை செய்வது வழக்கமாக உள்ளது.அவ்வாறு வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் தாக்கம் ஏற்படுத்தும். கடந்த செப்., 16ல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நிறைநாழி படியரிசி வைக்கப்பட்டது. நேற்று, மக்காச்சோள விதை வைத்து வழிபாடு நடந்தது. ஒரு படி நிறைய மக்காச்சோள விதையை வைத்து, பூஜை செய்யப்பட்டது.சிவன்மலை கோவில் சிவாச்சாரியார்கள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, படைப்புழு தாக்கத்தால், மக்காச்சோள சாகுபடி பாதிக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு, மக்காச்சோள பயிர் சாகுபடியும், தானிய மகசூலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர்.