பதிவு செய்த நாள்
12
ஜன
2021
11:01
தஞ்சை : மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ல் பிறந்தவர் சுவாமி விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் தத்தா. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரானார். அவர் மரணத்திற்கு பின், நான்கு முறை, இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.நம் நாட்டில் மட்டுமின்றி, மேலைநாடுகளிலும் ஹிந்து மதத்தின் தத்துவங்களை விளக்கி, பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
1893ல், சிகாகோவில் இவர் ஆற்றிய சொற்பொழிவு, உலகப் புகழ் பெற்றது. பல மேலை நாட்டு அறிஞர்கள், பேராசிரியர்கள் என அனைத்து தரப்பினரும், விவேகானந்தரின் சீடராகி, அவர் பணி தொடர வழிவகுத்தனர். ஸ்ரீராமகிருஷ்ண மடம் என்ற ஆன்மிக தொண்டு நிறுவனத்தைத் துவக்கினார். 1902 ஜூலை, 4ம் தேதி, தன், 39வது வயதில் காலமானார். இவரது பிறந்த நாள், ஆண்டுதோறும், தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான இன்று தஞ்சை ராமகிருஷ்ண மடத்தில் மாலை 4.30 மணிக்கு இளைஞர்கள், யுவதிகளுக்கு பாரம்பரிய சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே செயல்முறை விளக்கங்கள் செய்து காட்டப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.
தொடர்புக்கு:
சுவாமி விமூர்த்தானந்தர்
ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்