பதிவு செய்த நாள்
01
ஜூன்
2012
10:06
வத்திராயிருப்பு: சதுரகிரி மலை சந்தனமகாலிங்கம் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளது சதுரகிரி மலை. இங்கு சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இரு வேறு மலைகளில் எதிர் எதிரே அமைந்துள்ள இக்கோயில்களில் ,சுயம்புவாக எழுந்தருளியவர் சுந்தரமகாலிங்கம், அகத்தியர் முதலான 18 சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் சந்தன மகாலிங்கம். பல்வேறு சிறப்புகள் கொண்ட இக்கோயில்களில், கடந்த 2000ல் புதிதாக கோபுரங்கள் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டன. தற்போது பக்தர்கள் அதிகமாக வந்து செல்வதால், அவர்களுக்கு பல்வேறு வசதிகளுடன், சந்தன மகாலிங்கம் , பாலமுருகன் , சந்தன மகாதேவி கோயில் கோபுரங்களும் புனரமைக்கப்பட்டுள்ளன.இதை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான யாக சாலை பூஜைகள், மே 28ல் துவங்கின. மூன்றாம் நாளான நேற்று நடந்த மூன்றாம் கால பூஜையின் முடிவில், கோயில் தலைமை பூசாரி சுப்புராம் சுவாமி தலைமையில், சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்தனர். அபிஷேக நீரும் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அகத்தியர் அறக்கட்டளை சார்பில் மூன்று நாட்களாக தொடர் அன்னதானமும், அருள்மிகு சுந்தரமகாலிங்கம் யாத்திரியர்கள் அறக்கட்டளை சார்பில் பிரசாதமும் வழங்கப்பட்டது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வத்திராயிருப்பு தாணிப்பாறை வரை சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை தக்கார் செந்தில் வேலவன், நிர்வாக அதிகாரி ஜவகர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.